மசூதி அருகே நடைபெற்ற பஜ்ரங்தள் பேரணியில் வன்முறை: நான்குபேர் காயம்

0

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ராஞ்சியில் பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது ஆட்சேபனைக்குரிய பாடலை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இசைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த பாடல் ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினர் சாலைகளில் கூடி கோஷங்களை எழுப்பியுள்ளனர். கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். செவ்வாய்கிழமை நடந்த இந்த சம்பவம் அன்று மாலைக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவேதி, “தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை எவரும் காயமடைந்ததாக எங்களுக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த பதற்றத்திற்கு காரணம் சர்ச்சைக்குரிய பாட்டு ஒன்றை வழிபாட்டுத் தளம் முன் பேரணியில் சென்றவர்கள் இசைத்தது தான்.” என்று கூறியுள்ளார்.

ராஞ்சியில் மட்டுமல்லாமல் போகரோ பகுதியிலும் செவ்வாய்கிழமை மத மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சவ்தாகர் பகுதியில் பரபரப்பான சந்தைப்பகுதி ஒன்றில் உள்ள வீட்டின் முன் மாட்டுத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதலில் காவல்துறை அதிகாரி மேத்தாவிற்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.