மணிப்பூர் முதல்வரின் மகனுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறக்கூறி வழக்கறிஞரை மிரட்டும் தீவிரவாதிகள்

0

மணிப்பூர் மாநிலத்தின் முதல்வரான பாஜகவை சேர்ந்த N.பிரேன் சிங்கின் மகன் அஜய், இரோம் ரோஜர் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்த வழக்கில் தான் தொடர்ந்து வாதாடக் கூடாது என்று தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2011 மார்ச் மாதம், பிரேன் சிங்கின் மகன் அஜய், இம்பால் டுளிஹல் விமான நிலையத்தின் அருகே ஹோலி பண்டிகையின் போது நடைபெற்ற மோதலில் இரோம் ரோஜர் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த வழக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து அழுத்தம் வரவே மாநில அரசு இவ்வழக்கை சி.பி.ஐ. யிடம் ஒப்படைத்தது. இதனையடுத்து 2017 ஜனவரி மாதம் இம்பால் செஷன்ஸ் நீதிமன்றம், இதனை “கொலையாக கருத இயலாத கொலை” என்று கூறி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304(2) இன் கீழ் அஜய்க்கு தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சஜிவா சிறையில் அடைக்கப்பட்ட அஜய் உயர் நீதிமன்றத்தி மேல் முறையீட்டு மனு அளித்து தனக்கு பிணை விண்ணப்பத்தையும் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள வழக்கறிஞர் உத்சவ் சிங் பைன்ஸ், தனக்கு மார்ச் 22 ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் வாட்ஸ்அப் அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதில் மறுமுனையில் பேசியவர் உடைந்த ஆங்கிலத்தில், தான் மணிப்புரரை சேர்ந்த PLA எனப்படும் Peoples Lieration Army குழுவை சேர்ந்தவன் என்றும் NSCIM அமைப்பை சேர்ந்தவன் என்றும் இரோம் ரோஜர் வழக்கில் இனிமேல் வழக்கறிஞர் உத்சவ் சிங் ஈடுபடக்கூடாது என்று கூறி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அழைப்பின் போது PLA மற்றும் NSCIM  என்றால் என்ன என்பதே தெரியாது என்றும் பின்னர் கூகிளில் தேடிய பின்தான் தனக்கு அவர்கள் தீவிரவாத அமைப்புக்கள் என்பது குறித்து தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர் மார்ச் 22 ஆம் தேதியே தான் இம்பால் மணிப்பூரின் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது குறித்து தெரிவித்துவிட்டதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு இப்படியொரு அழைப்பு விடுக்கப்பட்ட பின், தான் இம்பாலுக்கு செல்லவில்லை என்றும் மணிப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் களுடன் இது குறித்து பேசியதாகவும் ஆனால் அவர்களோ தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்பதால் இந்த வழக்கில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டனர் என்றும் ஆதலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பினும் தான் இம்பால் சென்றதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பைன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மே மாதம் 10 தேதி முதலான தனது இம்பால் பயணத்திற்கு காவல்துறை பாதுகப்பளிக்குமாரும் அவர் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. மே 12 ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்ட இரோம் ரோஜரின் தாயார் இரோம் சித்ரா சார்பாக பைன்ஸ் மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், சிபிஐ இவ்வழக்கில் அஜய் மீது கொலை குற்றம் சாட்டவில்லை என்றும் அஜய் முதல்வரின் மகன் என்பதால் அவர் விரைவில் பிணை வழங்கப்பட்டு வெளியே வந்துவிடுவதாக இரோம் சித்ரா அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரேன், “எனது மகனை நானே சிபிஐயிடம் ஒப்படைத்து தற்போது சிறையில் உள்ளான். இதில் எந்த உதவியும் தேவையில்லை. மிரட்டல் வழக்கானது மிகத் தீவிரமானது, அது NIA  விடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் “ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், மனித உரிமை ஆர்வலரான பினாலக்ஷ்மி நெப்ரம் என்பவர், தான் ரோஜர் குடும்பத்திற்கு உதவுவதால் தனது வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய மாநில காவல் துறையினர் வந்து 80 வயது முதிர்ந்த தனது பெற்றோரை மிரட்டிச் சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் மக்களை பாதுகாக்க வேண்டுமே அல்லாது அப்பாவி பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும், தாங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக மணிப்பூர் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதி மக்களின் அமைதிக்காகவும் நீதிக்காகவும் போராடி வருவதாகவும், மாநில அரசு எந்திரத்தின் இது போன்ற அச்சுறுத்தல்களால் தாங்கள் பலகீனமடைந்துவிட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் தான் ரோஜர் வழக்கை எடுத்து நடத்த இம்பாலில் எந்த வழக்கறிஞரம் முன் வந்திடாத நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை இரோம் குடும்பத்திற்காக ஏற்படுத்திக் கொடுத்தவர்.

இவரின் இந்த அறிக்கையை அடுத்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மாநில ஐஜி க்லே கொங்சாய், பைன்ஸ் தன்னை சந்திக்காமல் இம்பாலை விட்டு சென்றதனால் அவருக்கு நெருக்கமான இவரிடம் அறிக்கை பெறுவதற்காக ஒரு விசாரணை அதிகாரி நெப்ரமை தேடிச் சென்றதாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுகள் குறித்து மே 13 ஆம் தேதி கருத்து தெரிவித்த மாநில காவல்துறை DGP இந்த வழக்கு தொடர்பாக ரத்தன் (இவர் பிரேனிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர்) மற்றும் நெப்ரம் ஆகிய இருவரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது என்றும் மேலும் மிரட்டல் அழைப்பு குறித்து பைன்ஸ் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்

டிஜிபி யின் இந்த அறிக்கையை அடுத்து Department of personnel and training செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், டிஜிபி மீது அவர் வேண்டுமென்றே ஊடகங்களுக்கு போலியான தகவலை தந்தமைக்காக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments are closed.