மதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

0

மதம் மற்றும் சாதி அடையாளங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தாகூர் தலைமையிலான பெஞ்ச் அளித்த இந்த உத்தரவை குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்மியுனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா, “இந்தத் தீர்ப்பின் முழு வடிவத்தையும் படிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அரசியலும் மதமும் தனித் தனியாக வைக்கப்பட வேண்டும். மதத்தை எவரும் தங்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் போன்ற அமைப்புகள் கட்டுப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, “சாதிகளாலும் மதத்தாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டு அதையே தங்களது கொள்கையாக வகுத்து அரசியலில் மேலெழுந்த சில கட்சிகள் உள்ள இன்றைய அரசியல் சூழ்நிலையில்,  உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியான இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்துத்வா தொடர்பான வழக்கின் விசாரணையில் வெளியிடப்பட்ட இந்த தீர்ப்பை மேலும் பல கட்சிகள் வரவேற்றுள்ளன.

1995 ஆம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சி.ஜே.எஸ்.வெர்மா தலைமையிலான பெஞ்ச், ஹிந்துவாவிற்கு அழைப்பு விடுப்பதென்பது ஹிந்துக்களுக்கான மதம் சார்ந்த அழைப்பு அல்ல என்ற ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments are closed.