மதவாத சக்திகளுக்கு எதிராக பிரச்சார இயக்கம்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலக குழு தீர்மானம்

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக குழு 16.03.2016 அன்று சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் M. முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் M. முகம்மது சேக் அன்சாரி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தீர்மானம் 1 : மதவாத சக்திகளுக்கு எதிராக பிரச்சார இயக்கம்

மதவாதம் மாய்க்கப்பட்டு மனித நேயம் தழைத்தோங்கிய தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மதவாத சக்திகள் மக்களுக்கு மத்தியில் பிரிவினையை தூண்டும் செயல்களை செய்து வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்த பாரதிய ஜனதா மற்றும் சங்கபரிவார இயக்கங்கள் தற்போது தமிழகத்திலும் அதேபோன்ற சதித்திட்டங்களை செய்து வருகின்றன. மதவாதத்திற்கு மயங்காத தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் மூலம் தங்களின் கணக்கை துவங்க நினைக்கும் பாரதிய ஜனதாவை முன்னணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே பாரதிய ஜனதா மற்றும் சங்க பரிவார அமைப்புகளின் போலி முகத்திரையை மக்களுக்கு அடையாளப்படுத்தும் விதமாகவும்  சட்டமன்ற தேர்தலில் மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் 2 : சாதிய ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் திருமணம் செய்ததற்காக சங்கர் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டதும் அவரது மனைவி கடுமையாக தாக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக்க சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தும் விதமாகவே இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய மற்றும் ஆணவப்படுகொலைகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மாநில செயலக குழு கேட்டுகொள்கிறது.  மேலும் இதுபோன்ற வன்முறைகளுக்கு ஆதரவாகவும் இச்செயல்களை நியாயப்படுத்தியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயலக குழு கேட்டுகொள்கிறது.

Comments are closed.