மதவாத சக்திகளை சுதந்திரமாக விடும் அரசு: சாஹித்ய அகாடமி விருதை மறுக்கும் கவிஞர் இன்குலாப் குடும்பம்

0

பிரபல தமிழ் கவிஞர் மற்றும் நாடகாசிரியர் இன்குலாபின் குடும்பம் அவரது படைப்பிற்கு கிடைத்த சாஹித்ய அகாடமி விருதை பெற மறுத்துள்ளது. இதற்கு மதவாத சக்திகளுக்கு அரசு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதை காரணமாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் இன்குலாபின் மகள் டாக்டர் ஆமினா, மதவாத மற்றும் சாதியவாத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அரசிடம் இருந்து தனது தந்தையும் இந்த விருதை பெற்றிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார். இன்னும், “நாங்கள் அவரது விருப்பத்தையே தற்போதும் நிறைவேற்றியுள்ளோம். அவர் எப்போதும் பின்தங்கிய வகுப்பினர்காக குரல்கொடுத்தவர். தற்போதுள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் அதனை பின்பற்றுபவர்கள் அல்ல.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தந்தை எப்போதும் விருதுகளுக்காக எழுதியவர் அல்ல என்றும் ஒருமுறை அவரது மரணத்திற்கு முன்பு, “இந்த விருதுகளை கொடுக்கம் அரசு மதவாத இயல்புடையது” என்று அவர் கூறியதாகவும் ஆமினா தெரிவித்துள்ளார். இன்னும் “பல எழுத்தாளர்கள் மற்றும் பகுத்தறிவுவாதிகளின் கொலைகளை தடுக்க இந்த அரசு தவறிவிட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கவிஞர் இன்குலாபின் குடும்பம் அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில், அரசுகளின் முகங்கள் மாறும், ஆனால் அவர்கள் அணியும் முகமூடிகள் மாறாது என்று குறிப்பிட்டுளளனர். தங்களின் இந்த முடிவை தெரிவிக்கும் வகையில் முறையாக அகாடமிக்கு கடிதம் ஒன்றை தாங்கள் எழுத இருப்பதாகவும் இன்குலாபின் குடும்பம் தெரிவித்துள்ளது. கவிஞர் இன்குலாப், “ஒவ்வொரு முறை என்னை காவல்துறை விசாரணைக்கு அழைப்பது எனக்கு விருது போன்றது.” என்று கூறியதாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.

தனது 72 வது வயதில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மரணித்த கவிஞர் இன்குலாபிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கொள்கையுடைய அவர் தமிழ் தேசியத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. ராம்நாடு மாவட்டம் கீழக்கரையில் சாகுல் ஹமீத் என்று பெயருடன் பிறந்தவர் வானம்பாடி கவி இயக்கத்துடன் தொடர்புடையவர். சென்னை புதுக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

Comments are closed.