மதானி தன் மகன் திருமணத்திற்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

0

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  பிடிபி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி அவரது மகனின் திருமணத்திற்குச் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கேரளா மாநிலம் தலைச்சேரியில் நடக்க இருக்கும் தன் மகனின் திருமணத்திற்குச் செல்ல வேண்டி மதானி விண்ணப்பித்த மனுவை தேசிய புலனாய்வுத்துறை மறுத்ததை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் S.A.போப்டே மற்றும் L.நாகஸ்வர ராவ் அடங்கிய பெஞ்ச் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனின் வாதத்தை கேட்ட பின்னர் மதானி கேரளா செல்லும்போது அவருக்கு பாதுகாப்பிற்கு வரும் கர்நாடக காவல்துறையின் மொத்த செலவுகளை மதானி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது .

விசாரணை நீதிமன்றம் மதானியின் மனுவை குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 439(1) இன் படி ஒரு பகுதி மட்டும் அங்கீகரித்தது, அதாவது மதானி கேராளவில் உள்ள அவரது தாயாரை சந்தித்து அவருடன் ஒரு வார காலம் இருக்கலாம் என்றும் ஆனால் அவரது மகன் திருமணத்தில் பங்கு பெற கூடாது என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன் என்பவர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விசாரணை நீதிமன்றத்தின் இந்த முடிவு 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒத்துப்போகவில்லை என்றும் அதனால் இந்த சிறப்பு விடுப்பு மனு நியாயமானது மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டதுமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஜூலை மாதம் இவரது வழக்கு விசாரணை நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று கேரள மாநில அரசு கூறியிருக்க இவரது வழக்கு இன்னு முடிக்கப்படாமல் இருப்பதன் மூலம் வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதப்படுத்தப்படுகிறது என்று தெரிய வருகிறது என்றும் இதன் மூலம் அவர் தனது சொந்த மாநிலத்திற்கு செல்வது தடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவில் மதானியின் பாதுகாப்பிற்கு வரும் காவல்துறையினரின் செலவுகளை மதானியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மதானியை விமானம் மற்றும் சாலை வழியாக கேரளா அழைத்துச் செல்வதற்கான செலவு மட்டும் சுமார் 20  லட்சத்தை தாண்டும் எனவும் மனுதாரர் இந்த தொகையை செலுத்தும் நிலையில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.