மது ஒழிப்பு போராட்டம்: நாடகமாடும் அரசியல் கட்சிகள்

0

– ரிழா

காந்தியையே நம்மவர்கள் மதிப்பதில்லை. காந்தியவாதியையா கண்டு கொள்வார்கள்?

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டங்கள் நடத்திய போது கண்டு கொள்ளாத அரசியல் கட்சிகள், அவர் இறந்தவுடன் ஒப்பாரி வைத்து அழுகின்றன.

மரணத்தை வைத்து அரசியல் நடத்துவது என்பதை விட எளிதான காரியம் வேறு கிடையாது.

சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் உயிரை விட்டதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்று விட்டார் சசிபெருமாள்.

அதனால் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக எப்படி களமாடலாம் என மற்ற கட்சிகள் கணக்கு போடுகின்றன. அதிமுக-வும் கூட்டல் கழித்தல் கணக்கில் இறங்கியுள்ளது.

கடந்த தேர்தலின் போது ஈழ மக்களின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய முடிந்தது. திமுக அரசை தூக்கியெறிந்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர, ஈழப் போர் ஜெயலலிதாவுக்கு உதவியது.

தற்போது ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே அறிவித்து விட்டதால், வேறு உபாயம் தேடிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலையை எதிர்ப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. அதை வைத்து ஜெயலலிதாவால் அரசியல் செய்ய முடியும்.

இருந்தாலும் சொத்து குவிப்பு வழக்கு அம்மாவின் இமேஜை பெரிய அளவில் பாதித்திருப்பதால் மகத்தான வெற்றி சாத்தியமா என்பது சந்தேகமே…

தாய்மார்களின் வாக்கை அள்ளுவதற்காக, மதுவிலக்கு கொள்கையை தடாலடியாக அறிவிக்க ஜெயலலிதா ரகசியமாக திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

இதனை அரசியல் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 21-ம் தேதி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு…

கருணாநிதியிடமிருந்து இந்த அறிவிப்பு வந்தவுடன், சொத்து குவிப்பு வழக்கு என்ற ஜெயலலிதாவுக்கு எதிரான அஸ்திரத்தை பிற கட்சிகளும் மறந்தன.

இந்த இடத்தில் கருணாநிதியின் ராஜதந்திரம் பலித்தது. வரும் சட்டப் பேரவை தேர்தலின் முக்கிய பிரச்சினையாக ஊழலை முன்னெடுத்தால் அது தனக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிந்த அரசியல் வித்தகர் கருணாநிதி, மது விலக்கை தேர்தல் பிரச்சாரத்தின் குவிமையமாக்கினார்.

இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என அறிந்த மற்ற கட்சிகளும் சுதாரித்துக் கொண்டு மது விலக்கு பற்றி பேசத் தொடங்கின.

உடனடியாக மதுவிலக்கு நாடக அரங்கிற்குள் நுழைந்தது பாமக.

போதைப் பொருளுக்கு எதிராக போராட்டம் நடத்த தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக அந்தக் கட்சி கருதினாலும், சரக்கு அடித்து விட்டுத்தான் அந்தக் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை ஊடகங்கள் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கின்றன.

44 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கருணாநிதிக்கு ஞானோதயம் பிறந்ததா என ராமதாஸ் அறிக்கை போர் தொடுக்க, வழக்கம் போல கருணாநிதியும் பதில் அறிக்கை என அக்கப்போர் தொடர்ந்தது.

மதுவிலக்கு பற்றிய அறிவிப்பை வெளியிட்டதற்கு கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்த காந்தியவாதி சசிபெருமாள், மதுவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.

சென்ற மாதம் இறுதியில், கன்னியாகுமரி மாவட்டம் உண்ணமலைக்கடை பகுதியில் உள்ள, நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்ட அரசு மதுபானக் கடையை மூடக் கோரி சசிபெருமாள் போராட்டத்தில் குதித்தார்.

அரசியல் கட்சிகள் அறிக்கைகளில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, காந்தியவாதி சசிபெருமாள் செல்ஃபோன் கோபுரத்தில் ஏறி அகிம்சை ஆயுதம் என்னவென்பதை ஆட்சியாளருக்கு விளங்க வைத்தார்.

சுதந்திர நாட்டில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவும் கூட நமக்கு மீண்டும் ஒரு காந்தி தேவைப்பட்டிருக்கிறார். இந்தப் போராட்டத்தில் உயிரையும் விடுகிறார் சசிபெருமாள்.

இதுவரை மதுவுக்கு எதிராக போக்கு காண்பித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு தனது மரணத்தின் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தார் சசிபெருமாள்.

அசருமா அதிமுக அரசு? சசிபெருமாள் இறப்பை தற்கொலை என அறிவித்தது.

அரசியல்வாதிகள் அலறி துடித்துக் கொண்டு ஓடி சசிபெருமாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மதுவிலக்குக்கு ஆதரவாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டும் திரைப்படத்தில் சடுதியாக காட்சிகள் மாறின.

திமுக பிரமுகர்கள் மது தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தும் போது அந்தக் கட்சி மதுவுக்கு எதிராக பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா என கேள்விகள் எழ, முதல்வர் நாற்காலியில் எப்படியும் உட்கார்ந்து விட வேண்டும் என துடிக்கும் தளபதி ஸ்டாலின் திணறித்தான் போனார்.

இவ்வளவு தானா இவர்களின் லட்சணம் என மக்கள் எள்ளிநகையாடிய நேரத்தில், திருப்புமுனையாக காட்சியில் நுழைகிறார் வைகோ.

அந்த மனிதர் இறந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில்… அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம்… ஆனால் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கபட்டியில் போராட்டத்தை தொடங்கி தானும் மற்ற அரசியல்வாதிகளுக்கு சளைத்தவன் அல்ல என காட்டினார்.

அந்தப் போராட்டதைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட மதுவிலக்கு திரைப்படத்தில் திடீரென வைகோ ஹீரோவானார்.

இதனிடயே அதிமுக அரசு மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட்டால் திமுக பிரமுகர்கள் தங்கள் மது தயாரிக்கும் தொழிற்சாலைகளை மூடிவிட்டு மகான்களாகி விடுவார்கள் என்ற ரேஞ்சுக்கு பேசி, வைகோ-வை முந்தப் பார்த்தார் ஸ்டாலின்.

அரசியல்வாதிகளின் கூத்துக்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறை ஆயுதத்தை கையிலெடுத்தனர்.

ஹாரிங்டன் சாலையில் இருந்த சாராயக் கடைக்குள் நுழைந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மதுபாட்டில்களை உடைத்து புதிய போராட்ட வடிவம் கண்டனர்.

டாஸ்மாக் கடையை அடித்து உடைக்கும் போது கையில் கிடைத்த மது பாட்டில்களை மகிழ்ச்சியாக பெற்று கொண்டாடி மகிழ்ந்தனர் புரட்சியாளர்கள். போலீசார் சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்லும் போதும் கூட, கையில் நோட்டுடனும் மதுபாட்டிலுடனும் சென்ற காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. புரட்சியாளர்கள் அப்போதும் மது பாட்டிலை கீழே போடவில்லை.

அரசு மதுபான கடையை திறந்திருக்கும் வரை குடிகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள், தங்கள் அமைப்பும் இதற்கு விதிவிலக்கல்ல என்றார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நிர்வாகி ஒருவர்…

அரசுக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் முன்னிலை வகித்தாலும், அரசியல் கட்சிகள் தான் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது தமிழர்களின் தலைவிதி.

மாணவர்களை கட்சியின் ஓரத்துக்கு தள்ள, அதிமுக அரசு தன்னை கொல்ல முயன்றதாக புலம்பி, ஊடகங்களில் அடிக்கடி வெளிப்பட்டு கதாநாயகன் அந்தஸ்தை தக்க வைத்தார் வைகோ.

அதிமுக அரசு எடுத்து விட்ட, வைகோவின் மகன் பிரபல சிகரெட் கம்பெனியில் டீலர் என்ற செய்தி அவரது முகத்திரையை கிழிப்பதாக அமைந்தது. வேறு வழியில்லாமல் அவரும் ஸ்டாலினைப் போல, சிகரெட்டுகளை அரசு தடை செய்தால் தன் மகன் அந்த தொழிலை விட்டு விடுவதாக அறிவித்தார்.

மது குடிப்பவன் தன் உடல் நலத்தையும், தனது குடும்ப பொருளாதாரத்தையும் அழித்துக் கொள்கிறான். ஆனால் புகைபிடிப்பவன் தனக்கு அருகில் இருக்கும் அப்பாவியையும் அழிக்கிறான் என்ற உண்மை வைகோவுக்கு தெரியாதா?

இதனை ஆங்கிலத்தில் PASSIVE SMOKING என்றழைக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் ஆறு லட்சம் பேர் புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பதாலேயே இறக்க நேர்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

திமுக, பாமக, தேமுதிக, மதிமுக, இடதுசாரி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவர் கூட அரசு திறந்து வைத்திருக்கும் மதுபான கடைகளில் குடிப்பது கிடையாதா? அனைத்து குடிகாரர்களும் முழுக்க முழுக்க அதிமுக கரை வேட்டி அணிந்தவர்களா?

வீடு திறந்து கிடக்கு கொள்ளையடிப்பேன் என்பது என்ன நியாயம்?

குறைந்தபட்சம் தங்கள் தொண்டர்களையாவது குடியிலிருந்து மீட்க இந்தக் கட்சிகளுக்கு விருப்பம் கிடையாதா? விருப்பம் கிடையாது என்பதை விட, முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றன இந்தக் கட்சிகள்…

மதுவிலக்கு என்பது ஒரு வழிப்பாதையல்ல. அரசுக்கு மட்டுமே பொறுப்பு இருப்பதாக கருதுவதாலேயே, குடிகாரர்கள் கள்ளச்சாராயத்தை தேடி அலைவதை முந்தைய நாட்களில் பார்க்க முடிந்தது. அதனால் மதுவிலக்கை ரத்து செய்யும் அவலமும் நிகழ்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது.

அதே சமயம், அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தாதவரை இங்கு அமல்படுத்துவதால் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்ற காரணத்தை நீண்ட நாட்கள் கூறிக் கொண்டிருக்க முடியாது என்பதை அரசாங்கமும் நினைவில் கொள்ள வேண்டும்.

Comments are closed.