இறைச்சிக்காக மாடு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடை உத்தரவிற்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது, இந்நிலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்று கூறி உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து இந்திய ஜமியதுல் குரேஷ் சார்பில் கபில் சிபல் மற்றும் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில் தலைமை நீதிபதி J.S. கேஹெர் மற்றும் நீதிபதி D.Y.சத்திரசூத் ஆகியோர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு முறை அரசு புதிய சட்டங்களை அமல் படுத்தும்போதோ அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தாலோ எதிர்தரப்பினர் அதனை நீதிமன்றத்தில் எதிர்க்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இன்னும், மத்திய அரசின் இந்த தடை சட்டத்தின் மீதான மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்றும் இது தேசம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் தரப்பு பல மாநிலங்கள் எதிர்க்கும் கால்நடை வர்த்தக விதிகள் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் பல தரப்பினரின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு இதில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல் P.S.நரசிம்மா, “சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பலதரப்பட்டவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை கவனத்தில் கொண்டு திருத்தங்கள் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மத்திய அரசின் இறைச்சிக்காக கால்நடை வர்த்தகம் மீதான தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி இந்த இடைக்காலத் தடையை மேலும் நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.