மத்திய பிரதேசம்: மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறிய நபர் பஜ்ரங்தள் உறுப்பினர்

0

மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தமஸ் விழாவை முன்னிட்டு கரோல் பாட்டுக்களை பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் என்று கூறி காவல்துறை கைது செய்திருந்தது.(பார்க்க செய்தி) இந்நிலையில் இவர்களால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட தர்மேந்திர தோகர் என்ற நபர் பஜ்ரங்தள் அமைப்பின் உறுப்பினர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அவரிடம் பத்திரிகையாளர்கள் அவர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டாரா என்று கேள்வி எழுப்பியதற்கு தற்போது அது குறித்து தான் எதுவும் பேச முடியாது என்றும் தான் ஏதாவது கருத்து தெரிவித்தால் அது தன் வாக்குமூலத்தை தான் மாற்றிக்கொண்டதாக ஆகிவிடும் என்று கூறியுள்ளார். முன்னதாக இவர் கிறிஸ்த்தவ குழு ஒன்று தன்னை கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் அதற்காக தனக்கு 5000 ரூபாய் அவர்கள் கொடுத்ததாகவும் காவல்துறையில் புகாரளித்திருந்தார்.

தற்போது தனது இந்த கூற்றை பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் உறுதி படுத்த மறுத்துவிட்டார். இன்னும் தான் இது குறித்து கருத்து தெரிவித்து மேலும் இந்த பிரச்சனையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும், அந்த கும்பல் அது போன்ற நபர்கள் (கிறிஸ்தவர்கள்) இங்கு வருவதை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் யாருக்கு அஞ்சுகிறார், பஜ்ரங்தள் அமைப்பிற்கா அல்லது காவல்துறைக்கா என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டதற்கு நேரடி பதில் அளிக்காத அவர், “நான் எனது குடும்பத்தை குறித்து கவலைப்படுகிறேன். என்னால் தான் அவர்கள் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள். இது போன்ற மக்கள் (கிறிஸ்தவர்கள்) எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் கலந்து உறவாட நாங்கள் அனுமதிக்கக் கூடாது என்று எங்களிடம் கூறப்பட்டது.” என்று தோகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கிறிஸ்மஸ் கரோல் பாடியவர்களை பஜ்ரங்தள் கும்பல் ஒன்று அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக காவல்துறையில் புகாரளித்தது. அவர்களை காவல்துறை கைது செய்த பின்னர் காவல்நிலையத்தில் வைத்து அவர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்கியதாக பாதரியார் ராபின் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டவர்களை காண மேலும் சில பாதரியார்கள் சென்ற போது அவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அதல் பாலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இன்னு அவர்கள் சென்ற வாகனத்தையும் பஜ்ரங்தள் அமைப்பினர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் என்று கிறிஸ்தவ மத போதகர் ராபின் தெரிவித்துள்ளார்.

இன்னும் பஜ்ரங்தள் தங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கூறும் குற்றச்சாட்டை காவல்துறை மற்றும் பஜ்ரங்தள் மறுத்துள்ளது. இது குறித்து பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட நிர்வாகி கூறுகையில், “அவர்கள் நீண்ட நாட்களாக மக்களை மதமாற்றம் செய்து வருகின்றனர். நாங்கள் அப்பகுதிக்கு காவல்துறையுடன் சென்றோம். ஆனால் யார் மீதும் நாங்கள் கை வைக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

பாதரியார்கள் மற்றும் கரோல் பாடகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் பஜ்ரங்தள் அளித்த புகாரின் பேரில் 30 கரோல் பாடகர்கள், எட்டு பாதரியார்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பிணையில் விடுவித்துள்ளது. பாதரியார்களின் வாகனத்தை எரித்ததாக 18 வயது வியாஸ் சுக்லா என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது என்று ராஜேஷ் ஹிந்கங்கர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.