மத்திய பிரதேசம் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு: ஐந்து விவசாயிகள் மரணம்

0

மத்திய பிரதேச மாநிலம் மந்த்சவூர் மாவட்டத்தில் தங்களின் விளைச்சலுக்கு நியாயமான விலை கேட்டும் விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரியும் நடைபெற்ற விவாசாயிகள் போராட்டத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த போராட்டம் நடத்திய விவசாயிகளின் பகுதியில் 2016-2017 காலகட்டத்தில் வறட்சி காரணமாக ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார் என்று புள்ளிவிபரம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாகிச்சூட்டினால் கோபமுற்ற விவசாயிகள் அப்பபகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர். இதனையடுத்து வன்முறை அதிகம் நடைபெற்ற பிபாலியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு கூடுதல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நடைபெற்ற பகல் முழுவதும் துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை என்று கூறி வந்த பாஜக அரசு அன்று மாலை துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், “பிபாளியாவில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது, ஒன்றில் காவல்நிலையம் ஒன்றில் ஒரு கும்பல் கூடியதால் தற்காப்பிற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மற்றொன்றில் ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்த அதற்கு காவல்துறையினர் பதில்துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு 1 கோடி ருபாய் வழங்கப்படும் என்றும் அவரின் குடும்பத்தார் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும்  காயமடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வழகப்படும் என்றும் மாநில முதல்வர் சிவராஜ் சவ்ஹான் தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகளை தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் போராட்டம் நரேந்திர மோடி அரசுக்கு பெரும் சவாலாக திகழ்கிறது. தற்போதைய விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, “இந்த அரசு நம் நாட்டு விவசாயிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா, தன்னை ஒரு விவசாயியின் மகன் என்று கூறிக்கொள்ளும் முதல்வரின் கண்காணிப்பின் கீழேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து இவ்வருட பிப்ரவரி வரை மத்திய பிரதேசத்தில் 1982 விவசாயிகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது சராசரியாக ஒவ்வொரு ஐந்து மணிநேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்வதாகும் என்று தேசிய குற்ற ஆவணப் பணியகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் மீதான இந்த துப்பாக்கிச் சூடு குஜராத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகள் ஐவரில் நான்கு பேர் படேல் இனத்தை சேர்ந்தவராவர். படேல் இனத்தவருக்கும் குரஜாத் அரசுக்கும் ஏற்கனவே கசப்புகள் இருந்து வந்த தருணத்தில் பாஜகவிற்கு தற்போது இது மேலும் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த படேல் இன குழுவின் தலைவர்களுள் ஒருவரான ஹார்டிக் படேல், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்தை வாக்களித்து தான் பாஜக பதிவியைப் பிடித்தது. ஆனால் அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகளுக்கு தோட்டாக்கள் தான் கிடைக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார் என்றும் மற்றவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மாநில முதல்வர் மந்த்சவூர் பகுதிக்கு வருகை தராத வரை இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய பிரதேச படிதர் சமாஜ் அமைப்பு தலைவர் மகேந்திர படிதர் தெரிவித்துள்ளார்.

மந்த்சவுர் நிகழ்வு மிகவும் சொகமாதும் துரதிர்ஷ்டவசமானதும் தன்னை மிகவும் பாதித்துள்ளது என்றும் சிவ்ராஜ் சவ்ஹான் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டே வந்தன என்றும் ஆனால் சமூக விரோத சக்திகள் போராட்டத்தினுள் நுழைந்துவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வந்துள்ளது. ஆனால் தற்போது தங்கள் விளைச்சலை சரியான விலைக்கு விற்க முடியவில்லை என்றும் விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரியும் அதிகரித்து வரும் போராட்டங்களினால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.

Comments are closed.