மத்திய பிரதேச காவல்துறை தேர்வு விண்ணப்பதாரர்கள் மார்பில் சாதி குறியீடு

0

மத்திய பிரதேச காவல்துறை தேர்வு விண்ணப்பதாரர்கள் மார்பில் சாதி குறியீடு

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் காவல்துறை தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் மருத்துவ பரிசோதனையின் போது விண்ணப்பதாரர்களின் மார்பில் அவர்களது சாதி பெயர்களை “SC, ST மற்றும் O” என்று குறிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தார் காவல்துறை கண்காணிப்பாளர் பிதேந்திர குமார் சிங், இது போன்று விண்ணப்பதாரர்கள் மீது சாதி குறியீடு எழுதுவதற்கு எந்த ஒரு உத்தரவும் கொடுக்கப்படவில்லை என்றும் இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தங்களின் பெயர்களை வெளியிட விரும்பாத சில மாவட்ட அதிகாரிகள், வெவ்வேறு சாதியினருக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் வெவ்வேறு தேர்வு முறைகள் இருப்பதனால் இந்த முறை கடைபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை வழிமொழிந்துள்ள மாநில காவல்துறை DGP ரிஷி குமார் சுக்லா, இதில் எத்தகைய இழி நோக்கங்களும் இல்லை என்றும் ஆனால் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இத்தகைய பிரிவுகளில் உடல் அளவுகோள்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இது. மாவட்ட காவல்துறையினருக்கு இத்தகைய குறியீடுகளை அகற்றவும் இது போன்று மேலும் நடக்காதவாறு உறுதி செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாய மருத்துவ பரிசோதனையின் போது OBC வகுப்பினர் மற்றும் SC வகுப்பினர் குறைந்தபட்சம் 168cm உயரம் இருக்க வேண்டும் என்றும் ST பிரிவினர் 160cm உயரம் இருக்க வேண்டும் என்பது நடைமுறை. மேலும் தங்கள் மீது சாதி குறியீடு இடப்பட்டது தொடர்பாக எந்த ஒரு விண்ணப்பதாரரும் புகாரளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் குழு தலைவர் மருத்துவர் சுஷில் குமார் காரே, மருத்துவ அதிகாரிகள் யாரும் இந்த குறியீடுகளை எழுதவில்லை என்றும் விண்ணப்பதாரர்கள் மீது எழுதப்பட்ட O என்ற குறியீடு குறித்து காவல்துறையினரிடம் விசாரித்த போது அது OBCயினை குறிப்பது என்று காவலர் தெரிவித்ததாக கூறியுள்ளார். உள்துறை கூடுதல் செயலாளர் KK சிங், தனக்கு இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் தெரியாது என்று கூறியுள்ளார்.

Comments are closed.