மத்திய பிரதேச சிறையில் 21 சிமி உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்படுவதை கண்டறிந்த தேசிய மனித உரிமை கழகம்

0

மத்திய பிரதேச சிறையில் 21 சிமி உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்படுவதை கண்டறிந்த தேசிய மனித உரிமை கழகம். சிறை அதிகாரிகள் மீது மதவிரோத செயலுக்காக நடவடிக்கை எடுக்க பரிந்துரை

மத்திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 சிமி விசாரணைக் கைதிகள் மீது சிறைக்காவலர்கள் காட்டுமிராண்டித் தனமாகவும் மனித தன்மையற்றும் நடந்து கொண்டது குறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த புகார் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமை கழகம் இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறிந்துள்ளது. மேலும் சிறைக்காவலர்கள் இந்த விசாரணைக்கைதிகள் மீது மத விரோதத்தை வைத்துள்ளதாகவும் அதன் விளைவாக விசாரணைக் கைதிகளை அவர்கள் மிக மோசமாக நடத்தியதும் தெரியவந்துள்ளது.

சிமி தொடர்பான வழகுகளில் கைது செய்யப்பட்ட 21 விசாரணைக் கைதிகளின் குடும்பத்தினர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி தேசிய மனித உரிமை கழகத்தை சந்தித்தனர். அப்போது சிறையில் உள்ள தங்கள் உறவினர்கள் மீது திட்டமிடப்பட்ட தொல்லைகளும், உடல் ரீதியிலும் மனரீதியிலும் சித்திரவதைகளும் கொடுக்கப்படுகின்றது என்றும் அவர்களுக்கு மனநல சிகிச்சைகள் மறுக்கப்பட்டும், மதரீதியில் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டும் சிறை காவலர்களால் அச்சுறுத்தப்பட்டும் வருவது குறித்தும் புகாரளித்தனர்.

இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டு இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேசிய மனித உரிமை கழகம் விசாரணை குழு ஒன்றை சிறைக்கு அனுப்பியது. அக்குழு இது குறித்து நடத்திய விசாரணைக்குப் பின் அளித்த அறிக்கையில், கைதிகளுக்கு மன ரீதியில் சித்திரவதைகள் கொடுக்கப்படுவதும், மோசமான வார்த்தைகளால் திட்டப்படுவதும், குறைந்தபட்ச உறக்கம் கூட மறுக்கப்படுவதும் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்பதும் உண்மை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதல், சித்தரவதை, சிறைவாசிகளுக்கு அடிப்படை மனித உரிமைகளை மறுப்பது போன்ற இந்த குற்றச் செயல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ ஈடுபட்ட சிறை அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அத்துடன் அதிகாரிகளின் இந்த குற்றச் செயல்களை மூடி மறைக்க உதவிய சிறை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய பிரதேச அரசிற்கு தேசிய மனித உரிமை கழகம் சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய பிரதேச சிவில் உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுரி தெரிவித்துள்ளார்.

போபால் மத்திய சிறையில் உள்ள சிறைவாசியான முப்பது வயது முஹம்மத் ஜாவிதின் மனைவி ஷமா, பத்திரிகையாளர்களிடம் தனது கணவருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை குறித்து விவரிக்கையில், “நான் எனது கணவரை மார்ச் 15 ஆம் தேதி சந்தித்தேன். எனது அத்தை அவரை மார்ச் 26 ஆம் தேதி சந்தித்தார். எங்கள் இருவரது சந்திப்பின் போதும் அவர் தனக்கு சிறை காவலர்கள் தரும் தொல்லைகளை குறித்து முறையிட்டார். இரவு நேரங்களில் சிறைக்காவலர்கள் தன்னை முறையாக உறங்க விடுவதில்லை என்றும் அமித்.C, தர்மேந்திரா.G மற்றும் விஜய் வர்மா ஆகிய கைதிகள் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டுவது குறித்தும் தெரிவித்தார்.” என்று கூறியிருந்தார்.

Comments are closed.