மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்

0

மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்

கஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் வாகனம் ஒன்று கைஸர் அமீன் என்பவரை இடித்து பின் யூனிஸ் அகமத் என்பவர் மீது ஏரிச்சென்றது அப்பகுதியை பரபரப்பில் ஆழ்த்தியது. யூனிஸ் மீது CRPF வாகனம் ஏற்றப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து ஸ்ரீநகரில் இணையதள இணைப்பை மாநில அரசு துண்டித்துள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் ஷேரி கஷ்மீர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 21 வயதாக கைஸர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு பதின் பருவ சகோதரிகள் உள்ளனர். மேலும் இவரது பெற்றோர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து CRPF செய்தித் தொடர்பாளர், CRPF வீரர் யார் மீதும் வாகனத்தை ஏற்றவில்லை என்றும் மாறாக அவர்கள் சென்ற வாகனத்தை சுமார் 500க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு உள்ளிருந்த அதிகாரிகளை தாக்க முற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கும்பல் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளது என்றும் இருந்தும் வாகனத்தை ஓட்டி வந்த வீரர் வாகனத்தை மிக மெதுவாத்தான் செலுத்தினார் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், “முன்னர் அவர்கள் மக்கள் போராட்டங்களை தடுக்க மக்களை ஜீப்பின் முன் கட்டி வைத்து கிராமம் கிராமமாக சுற்றினர். தற்போது நடைபெற்றிருக்கும் இது தான் உங்களது புதிய நடவடிக்கை வழிகாட்டுதலா திரு.மெஹ்பூபா முஃப்தி அவர்களை? போர் நிறுத்தம் என்றால் துப்பாக்கிக்கு பதிலாக ஜீப்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் தேதி தற்போது கொல்லப்பட்ட கைஸர், ஆதில் அகமத் யாட்டூ என்ற இளைஞர் மீது இராணுவ வாகனம் ஏற்றி கொலை செய்ததை தனது

பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முதலில் ஆதில் சாலை விபத்தில் இறந்ததாக காவல்துறை கூறியது. ஆனால் அந்த சம்பவத்தின் வீடியோ பதிவு அவர் வேண்டுமென்றே வாகனத்தை ஏற்றி கொல்லப்பட்டதை காட்டியது. இதனை தொடர்ந்து விசாரணை துவக்கப்பட்டு அந்த வாகன ஓட்டி மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மேஜர் நிதின் கோகோய் ஃபரூக் அகமது தர் என்ற இளைஞரை தனது வாகனத்தில் மனித கேடையமாக கட்டி கிராமம் கிராமமாக சென்றார். இவரின் இந்த செயல் பாஜக தவிர்த்து பல்வேறு தரப்பட்டவர்களால் கண்டிக்கப்பட்டாலும் இராணுவத் தளபதி பிபின் ராவத் மேஜர் நிதின் கோகோய்க்கு பதக்கம் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.