மம்தாவை தலை முடியை பிடித்து இழுத்திருப்போம்: மேற்கு வங்கம் பா.ஜ.க. தலைவர்

0

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ், தங்களால் டில்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலை முடியை பிடித்து இழுத்திருக்க முடியும் என்றும் அங்கிருப்பவர்கள் தங்கள் காவல் துறையினர் என்றும் ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

“நாட்டின் மிகவும் அதிகப்படியான ஊழல் புரிந்தவர்கள் ஊழலை ஒழிப்பதைப் பற்றி பேசுகின்றனர்” என்று மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கான எதிர்வினையே மேற்கு வங்க பா.ஜ.க. தலைவரின் இந்த கருத்தாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சி, மம்தா பானர்ஜீயின் கருத்துக்களை கருத்தால் எதிர்க்க முடியாத பா.ஜ.க. இது போன்ற ஆபத்தான தனி மனித தாக்குதல்களை மேற்கு வங்க முதல்வரை நோக்கி வீசுகிறது என்று கூறியுள்ளது.

“பா.ஜ.க.வினால் மம்தா பானர்ஜீயை கொள்கை ரீதியிலும், நல்லாட்சியிலும், பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களுக்காக அவர் எடுத்துள்ள நிலையிலும் எதிர்க்க முடியவில்லை. அதனால் பா.ஜ.க. எதிர் கருத்துக்களை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என்று முயல்கிறது” என்று அக்கட்சியின் அறிக்கை கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவத்துள்ள திரினாமுல் காங்கிரஸ் எம்.பி.ஓ.பெரின், “இது அரசியலில் மிகவும் கீழ்த்தரமானது, மூன்றாம் நிலை அரசியல். ஆபத்தான போலியான, தனிமனித தாக்குதல்களை மம்தா பானர்ஜீயை நோக்கி வீசியுள்ளது பா.ஜ.க.” என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.