“மயங்கி விழுந்த போதெல்லாம், மின்சார அதிர்ச்சி கொடுத்தனர்”- காஷ்மீர் மக்கள் கதறல்

0

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு எடுத்ததற்கு பிறகு, அங்கு தாக்குதல் மற்றும் சித்ரவதை போன்றவற்றை பாதுகாப்பு படையினர் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை திரும்பப்பெறும் முடிவை அரசு எடுத்தபிறகு, மூன்று வாரங்களுக்கு மேலாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கும் கட்டுப்பாடுகள் காஷ்மீரை முடக்கியுள்ளது.

இந்த நடவடிக்கைளை காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சமீர் ஹாஸ்மி, பிபிசி செய்திகள், காஷ்மீர்:

காஷ்மீரின் தெற்கு பகுதியில் குறைந்தது 6 மாவட்டங்களுக்கு நான் சென்றேன். இங்குள்ள கிராமங்களில் எல்லாம் பலரும் தங்கள் இடங்களில் நடந்த இரவு சோதனைகள், பிரம்படி மற்றும் சித்ரவதை ஆகியவை குறித்து கூறிய ஒரேமாதிரியான சம்பவங்கள் குறித்து நான் கேட்டேன். கிராம மக்கள் பாதுகாப்பு படையினரால் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி தங்களின் காயத்தை என்னிடம் காட்டினர். தில்லி மற்றும் காஷ்மீர் இடையே பல தசாப்தங்களாக இருந்துவந்த ஓர் ஏற்பாட்டை ரத்து செய்து சர்ச்சைக்குரிய முடிவை இந்திய அரசு அறிவித்த சில மணிநேரங்களில், வீடுவீடாக சென்று ராணுவம் சோதனை நடத்தியதாக ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.

அந்த கிராமத்தில் இருந்த இரண்டு சகோதரர்கள் கூறுகையில், “நாங்கள் காலையில் விழித்தவுடன் எங்களை கிராமத்துக்கு வெளியே ஓர் இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ஏற்கனவே எங்கள் கிராமத்தை சேர்ந்த பலர் இருந்தனர். நாங்கள் சந்தித்த ஒவ்வொரு நபரும் எதிர்வினையை எண்ணி தங்களின் அடையாளத்தை வெளியிட அஞ்சியதுபோல் இவர்களும் தங்கள் அடையாளத்தை வெளியிட அஞ்சினர். அவர்கள் எங்களை அடித்தனர். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று அவர்களை கேட்டோம். எங்களை பற்றி எங்கள் கிராம மக்களிடம் நீங்கள் கேட்கலாம். ஆனால் நாங்கள் கூறிய எதையும் அவர்கள் கேட்கவில்லை. எங்களை தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தனர்.

என் உடலின் அத்தனை பாகங்களிலும் அவர்கள் அடித்தார்கள். எங்களை உதைத்தார்கள். லத்தியால் அடித்தார்கள். மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். கேபிள்களால் எங்களை தாக்கினார்கள். எங்கள் பின்னங்கால்களில் அடித்தார்கள். நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மீண்டும் மின்சார அதிர்ச்சி கொடுத்து சுயநினைவுக்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் எங்களை லத்தியால் அடித்தபோது நாங்கள்  கதறினோம். எங்கள் வாயில் மண்ணை அடைத்து மூடினார்கள்.’’

“எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினோம். ஏன் இதை செய்கிறார்கள் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் நாங்கள் சொன்னதை கேட்கவே இல்லை. எங்களை அடிக்காதீர்கள், சுட்டு விடுங்கள் என்று நான் கூறினேன். சித்ரவதை தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. என் உயிரை எடுத்துக் கொள்ளும்படி, நான் கடவுளை வேண்டிக் கொண்டேன்.

“மற்றொரு ஒரு இளைஞர் கூறுகையில், “பாதுகாப்புப் படையினர் ‘எங்களை பார்த்து கல்லை எறிந்தவர்கள்’ யார்? கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அப்படி யாரையும் தெரியாது என்று பாதுகாப்பு வீரர்களிடம் கூறியபோது, அவர்கள் தன் முகக்கண்ணாடி, ஆடைகள் மற்றும் காலணிகளை அகற்ற உத்தரவிட்டதாக, அந்நபர் தெரிவித்தார். நான் என் ஆடைகளை களைந்தபோது, கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் லத்தியாலும், கம்பிகளாலும், சுமார் இரண்டு மணி நேரம் என்னை அடித்தார்கள். நான் மயங்கி விழுந்த போதெல்லாம், மின்சார அதிர்ச்சி கொடுத்து என்னை எழுப்பினார்கள்.

“அதனை மீண்டும் எனக்கு செய்தால், நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தேன். நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன். என்னால் இதை தினமும் தாங்கிக் கொள்ள முடியாது”.

பாதுகாப்புப் படைக்கு எதிரான போராட்டங்களில் யாரேனும் ஈடுபட்டால், இதே மாதிரியான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கிராமத்தில் இருக்கும் அனைவரிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் கூறியதாக அந்த இளைஞர் கூறினார்.

இந்திய ராணுவம் பிபிசியிடம் பேசுகையில், “பொதுமக்கள் யாரையும் நாங்கள் மோசமாக கையாளவில்லை. பகைமை உணர்வுகள் உடையவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகள் தூண்டப்பட்டிருக்கலாம்” என ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல்  அமன் ஆனந்த் பிபிசிக்கு தெரிவித்தார்.

-BBC

Comments are closed.