மரணித்த நீதி – அப்ஸல் குரு

0

-ரியாஸ்

பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது அப்ஸல் குருவிற்கு பிப்ரவரி 9,2013 அன்று டெல்லி திகார் சிறையில் வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 3 அன்று இவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததாகவும் அதனை தொடர்ந்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது. அதி விரைவாகவும் மிகவும் இரகசியமாகவும் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்ஸலின் குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்கப்படாமல் அவர் தூக்கு கயிற்றில் தொங்க விடப்பட்டார். தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்த அப்ஸல் தூக்கிலிடப்பட்டார்.

அப்ஸல் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கான முறையான நீதியும் வழங்கப்படவில்லை. இச்செயல் மூலம் காஷ்மீரில் பிரச்சனையை மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற தாக்குதல், அப்ஸலின் வாழ்க்கை, நடைபெற்ற முறையற்ற விசாரணை, இத்தண்டனையின் எதிர்விளைவுகள் என அனைத்தையும் விவரிக்கிறது இம்மாத அட்டைப்பட கட்டுரை.

டிசம்பர் 13,2001. இந்த தினத்தை இந்தியர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க வாய்ப்பில்லை. நாட்டின் பாராளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு நாட்டின் இறையாண்மையும் பாதுகாப்பும் மீண்டும் ஒரு முறை கேள்விக்குறியாக்கப்பட்டது. அதி பாதுகாப்பு நிறைந்த பாராளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நபர்கள் (மற்றொரு கூற்றின்படி ஆறு நபர்கள்) காலை 11.30 மணியளவில் ஒரு காரில் நுழைந்து எதிர்பாராத தாக்குதலை நடத்தினர்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. சவப்பெட்டி ஊழல் தொடர்பாக ஏற்பட்ட அமளியில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சமயத்தில் தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக களத்தில் குதித்து எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் தாக்குதல் நடத்த வந்த ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் எட்டு பேரும் இதில் கொல்லப்பட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு தோட்டத் தொழிலாளியும் இதில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து டிசம்பர் 21 அன்று பாகிஸ்தானில் இருந்த உயர் கமிஷனரை இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டது. அத்துடன் பாகிஸ்தான் உடனான விமானம், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. ஏறத்தாழ ஐந்து இலட்சம் இராணுவ வீரர்கள் எல்லையை நோக்கி அனுப்பப்பட்டனர். இதில் சில இராணு வீரர்கள் உயிரையும் இழந்தனர். அரசாங்க வரிப்பணம் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி ரூபாய் செலவானது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மாதங்களிலேயே பாராளுமன்ற தாக்குதல் நடைபெற்றது நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்ட டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அடுத்த நாளில் இருந்தே கைது நடவடிக்கைகளை ஆரம்பித்தது. டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அப்துல் ரஹ்மான் ஜீலானி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அப்ஸல் குரு காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரின் உறவினரான ஷவ்கத் ஹுஸைன் மற்றும் அவரின் மனைவி அப்ஸான் குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவிகள் செய்ததாக இவர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் அப்ஸல் குரு முதல் குற்றவாளியõக அறிவிக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் தான் அப்ஸல் குரு என்று சில பத்திரிகைகள் அபாண்டமாக பொய்யை எழுதின. ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. வழக்கின் விசாரணை வேகமாக நடத்தப்பட்டு ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த பொடா சிறப்பு நீதிமன்றம் அப்ஸல் குரு, ஷவ்கத் மற்றும் ஜீலானி ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்ஸான் குருவிற்கு ஐந்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

வழக்கு விசாரணை நடந்த முதல் நாளிலேயே நீதிபதி இவர்களை குற்றவாளிகள் என்று குறிப்பிட்டார். எவ்வித விசாரணையும் முறையாக நடப்பதற்கு முன்னர், இத்தகைய முடிவை அவர் எவ்வாறு எட்டினார்? இத்தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் உஷா மெஹ்ரா மற்றும் பிரதீப் நந்த்ராஜோஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்து அக்டோபர் 2003ல் தீர்ப்பு வழங்கினர். இதில் ஜீலானி சார்பாக பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் அவர்கள் ஆஜரானார்.

ஜீலானி மற்றும் அப்ஸான் குருவின் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள் மற்ற இருவரின் மரண தண்டனையை உறுதி செய்தனர். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும பி.பி. நாலேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரணை செய்தது. ஆகஸ்ட் 4,2005 அன்று தங்களின் 271 பக்க தீர்பபை நீதிபதிகள் வழங்கினர். தேசத்தின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக பாராளுமன்ற தாக்குதலை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. ஜீலானி மற்றும் அப்ஸான் குருவின் தண்டனை ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிபதிகள் ஷவ்கத்தின் மரண தண்டனையை பத்து ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனையாக குறைத்தனர்.

அப்ஸல் குருவின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல்துறையிடம் அவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். குற்றவாளிகளிடம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன என்பதையும் நீதிமன்றங்கள் பெரும்பாலும் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்ஸல் குரு விஷயத்தில் காவல்துறையினர் நீதிமன்ற நடைமுறைகளை மீறியதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்ஸல் குரு கைது செய்யப்பட்டவுடன் அவரை ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவர் என்று தெரிவித்தனர். ஆனால், விசாரணையில் இது நிரூபிக்கப்படவில்லை. அப்ஸலுக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அவர் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

அப்ஸலுக்கு எதிராக நேரடியாக சாட்சிகள் இல்லாத போதும் அவருக்கு எதிராக சூழ்நிலை சாட்சிகளை ஆதாரமாக கொண்டு அவரின் மரண தண்டனையை சரி கண்டனர். நீதிபதிகள் வினோதமான ஒரு வாதத்தை முன்வைத்து அவரின் மரண தண்டனையை உறுதி செய்ததுடன் மட்டுமல்லாமல் அவரின் தண்டனையை மூன்று ஆயுள் தண்டனை மற்றும் இரட்டை மரண தண்டனையாக அதிகரிக்கவும் செய்தனர்.

“குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கினால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த முடியும்” என்ற வாதத்தை முன்வைத்து மரண தண்டனையை உறுதி செய்தனர். ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக இவர்களின் இந்த வாதம் அமைந்தது. தேசத்தின் கூட்டு மனசாட்சி என்று நீதிபதிகள் கூறிய போதும் அந்த கூட்டு மனசாட்சியில் யாரெல்லாம் அடங்குவார்கள் என்ற விளக்கம் இதுவரை எவருக்கும் தெரியவில்லை. தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் அக்டோபர் 20,2006 அன்று அவரின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேதியும் குறித்தனர்.

அப்ஸலுக்கு வழங்கப்பட்ட இத்தண்டனை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்களுடன் தேச நலனில் அக்கறை கொண்டவர்களும் இதனை தொடர்ந்து எதிர்த்து வந்தனர். பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அனைவரும் வன்மையாக கண்டித்தனர். ஆனால், அதில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தேசத்தின் கூட்டு மனசாட்சி என்ற போர்வையின் கீழ் அநியாயமாக ஒருவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என்பதுதான் அனைவரின் வாதமாக இருந்தது.

அப்ஸலின் வழக்கில் அவர் தரப்பு நியாயமான வாதங்கள் செவிசாய்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை ஜம்மு காஷ்மீரின் சட்டமன்ற உறுப்பினர் ரஷீத் செப்டம்பர் 2011ல் அப்ஸலுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அப்ஸல் தூக்கிலிடப்படக்கூடாது என்ற கருத்தை ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாஹ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கூறி வந்தனர்.

அப்ஸலுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கருணை மனுவை அவரின் மனைவி அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடம் சமர்ப்பித்தார். அப்துல் கலாம் மற்றும் அவருக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி பதவி வகித்த பிரதீபா பாட்டீல் ஆகியோர்  அதனை நிராகரிக்கவில்லை. உள்துறை அமைச்சகத்தின் மறு பரிசீலனைக்கு அந்த மனுக்கள் அனுப்பப்பட்டன. மரண தண்டனை விஷயத்தில் இந்த நடைமுறைகள் தான் நமது நாட்டில் பின்பற்றப்படுகின்றன. இது அப்ஸல் குரு விவகாரத்தில் மட்டும் தனித்துவமானது அல்ல. அப்ஸலுக்கு முன்னர் தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்கள் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியலில் தனது இடத்தை இழந்து வரும் பா.ஜ.க. அவ்வப்போது அப்ஸல் குருவின் பிரச்சனையை கிளப்புவது வழக்கம். நாடாளுமன்ற தேர்தலின் போது இவர்களின் சத்தம் சற்று ஓங்கி ஒலிக்கும். இவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரும்போதும் அப்ஸலின் ஞாபகம் இவர்களுக்கு வரும். அப்ஸல் தூக்கிலிடப்படுவதற்கு சில மாதங்கள் (நவம்பர் 2012) முன்புதான்  மும்பை தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்ட அஜ்மல் கஸாப் இரகசியமாகவும் அவசரமாகவும் தூக்கில் போடப்பட்டார். இதனை தொடர்ந்து அப்ஸல் குருவையும் தூக்கில் போட வேண்டும் என்ற பா.ஜ.க.வின் குரல் சற்று வேகமாக ஒலிக்க ஆரம்பித்தது.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பா.ஜ.க. விற்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் கட்சி  நிரூபித்து வருகிறது. கணக்கெடுக்க முடியாத ஊழல், திறமையற்ற நிர்வாகம், தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அடுத்த தேர்தலை எதிர் கொள்வதற்கு ஏதுவாக சில காரியங்களை செய்ய ஆரம்பித்தது. கஸாபிற்கு வழங்கப்பட்ட தூக்கு இதில் ஒரு ரகம்தான். தனது ஓட்டு வாங்கியை அதிகரிக்க இவர்களுக்கு கிடைத்த மற்றொரு சாதனம் தான் அப்ஸலின் மரண தண்டனை.

இதனிடையே உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறிய இந்து தீவிரவாத குற்றச்சாட்டும் இவர்களுக்கு நெருக்கடியை அதிகரித்தது. அப்ஸலின் தூக்கு அனைத்தையும் சரி கட்டும் என்பதை நன்கறிந்தவர்கள் ரகசியமாக அதனை முடிக்கவும் செய்தனர். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறிய போதும் இதில் அரசியல் உள்நோக்கம் இல்லாமல் இல்லை என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர்.

பிப்ரவரி 3 அன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அப்ஸல் குருவின் கருணை மனுவை நிராகரித்தார். ஜனாதிபதி முகர்ஜியும் உள்துறை அமைச்சர் ஷிண்டேயும் பதவி ஏற்கும் போதே இத்தனை கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துவிட்டு பதவி ஏற்றார்களா என்ற சந்தேகம் ஏற்படும் அளவிற்கு கருணை மனுக்களை நிராகரித்து வருகின்றனர்.

ஆனால், மனு நிராகரிக்கப்பட்ட செய்தி அப்ஸல் தூக்கில் போடப்பட்ட பிறகுதான் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் வீரப்பனின் கூட்டாளிகள் நான்கு பேரின் கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்தார். இந்த செய்தி உடனடியாக பத்திரிகைகளில் வெளிவந்தது. அடுத்து எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை அவர்களின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். தற்போது உச்சநீதிமன்றம் இவர்களின் தூக்கை ஆறு  வாரங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அப்ஸல் குருவின் மனு நிராகரிக்கப்பட்ட செய்தி மட்டும் ஊடகங்களில் ஏன் மறைக்கப்பட்டது? வீரப்பனின் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு அப்ஸலுக்கு ஏன் மறுக்கப்பட்டது?

கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தியோ அல்லது அவரின் தூக்கு நிறைவேற்றப்படும் தேதியோ அவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 9 அன்று காலை எட்டு மணியளவில் டெல்லி திஹார் சிறைச்சாலையில் அப்ஸல் தூக்கிலிடப்பட்டார். தூக்கு நிறைவேற்றப்படும் தகவல் அப்ஸல் குருவிற்கே சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் தெரிவிக்கப்பட்டது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்ஸல் தூக்கிலடப்பட்ட செய்தியை சேனல்கள் மூலம் தான் தெரிந்து கொண்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குடும்பத்தினருக்கு தகவலை தெரிவிக்காதது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மரண தண்டனை நிறைவேற்றப்படும் ஒரு கைதிக்கு சில மணித்துளிகளை அவரின் குடும்பத்தினருடன் செலவழிக்க அனுமதி வழங்குவதுதான் மரபு. ஆனால், அப்ஸலின் விஷயத்தில் இதுவும் பின்பற்றப்படவில்லை. இது குறித்து கேள்விகள் எழுந்தவுடன் நமது உள்துறை அமைச்சகம் அப்ஸலின் குடும்பத்தினருக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறியது. ஆனால், இவர்கள் அனுப்பிய ஸ்பீட் போஸ்ட் அப்ஸல் தூக்கிலிடப்பட்டதற்கு தான் அவரின் குடும்பத்தினரை சென்றடைந்தது. நீதி மறுக்கப்பட்டது ஒரு புறம் என்றால் கடுகளவு மனிதாபிமானம் கூட இல்லாமல் நமது அரசாங்கம் செயல்பட்டதைதான் இது காட்டுகிறது. பிப்ரவரி 3 அன்றே கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்திருக்க பிப்ரவரி 8 வரை தகவலை தெரிவிப்பதற்கு தாமதித்தது ஏன்?

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தாலும் அதனை எதிர்த்து முறையீடு செய்வதற்கும் நமது சட்டம் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால், அப்ஸல் குருவிற்கு இந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. நீதி, ஜனநாயகம், மனிதாபிமானம் என அனைத்தும் அப்ஸலின் விஷயத்தில் மீறப்பட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது.

பாராளுமன்ற தாக்குதல் குறித்த நியாயமான சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்பட்டன. அப்ஸல் குருவின் மரண தண்டனையுடன் இந்த கேள்விகளுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டதாகவே நமக்கு தென்படுகிறது.

பாராளுமன்ற தாக்குதல் ஏற்படுத்திய சந்தேகங்கள்

பாராளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் இருந்தே அதில் பல சந்தேகங்களை சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் எழுப்பினர். பிரபல எழுத்தாளரும் மனித உரிமை போராளியுமான அருந்ததி ராய் அவர்கள் இந்த தாக்குதல் குறித்து பதிமூன்று கேள்விகளை எழுப்பினார். கேட்கப்பட்ட கேள்விகள் எதற்கும் இதுவரை முறையான பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை. பாராளுமன்ற தாக்குதல் குறித்த சில முக்கியமான சந்தேகங்களை வாசகர்களுக்கு முன் வைக்கிறோம்.

 1. பாராளுமன்ற தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் நாட்டில் இருந்த சூழ்நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கார்கில் போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்த புகாரில் அப்போதைய பா.ஜ.க. கூட்டணி அரசு சிக்கி கொண்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் எதிர் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தார். மக்கள் விரோத பொடா சட்டம் நிறைவேறுவதிலும் சிக்கல் நீடித்து கொண்டிருந்தது. இத்தருணத்தில் தான் பாராளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் சவப்பெட்டி ஊழலை மறந்தனர். பாராளுமன்றத்திற்கே பாதுகாப்பு இல்லை என்று கூறி பொடா சட்டமும் பிரச்சனையின்றி நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற தாக்குதல் யாருக்கு அதிக அளவில் இலாபமாக இருந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 12,2001 அன்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரதமர் வாஜ்பாய் சந்தேகம் கிளப்பினார். இது தற்செயலாக கூறப்பட்ட வார்த்தைகள்தானா என்பதை வாஜ்பாய் தான் விளக்க வேண்டும்.

 1. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சகல விதமான ஆதாரங்களுடனும் வந்து இந்த தாக்குதலை நடத்தியது ஆச்சர்யமாக உள்ளது. இவர்களிடமிருந்து மொபைல் போன்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள் என அனைத்தும் கைப்பற்றப்பட்டன. ஒரு காதல் கடிதம் கூட கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்த வந்தவர்கள் எதற்காக இத்தனை ஆதாரங்களையும் கொண்டு வரவேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இவர்கள் வந்த காரின் கண்ணாடியில் இந்தியாவிற்கு எதிராக பிழையான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. கண்ணாடியில் ஒரு வாசகம் ஒட்டப்பட்டிருப்பதை கண்ட பின்னரும் சோதனைக்கு நின்ற காவலர்கள் காரை சோதனை செய்யாமல் எப்படி பாராளுமன்ற வளாகத்திற்குள் அனுமதித்தனர்? அத்துடன் கொல்லப்பட்ட ஐந்து நபர்களும் யார் என்பது இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை.
 2. பாராளுமன்ற தாக்குதலின் பதிவுகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராக்களில் தெளிவாக பதிவு செய்யப்பட்டன. காரில் இருந்து ஆறு நபர்கள் இறங்கியதை தான் கண்டதாக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார். ஆனால், ஐந்து நபர்கள் தான் கொல்லப்பட்டனர். அந்த ஆறாவது நபர் யார்? சி.சி.டி.வி. பதிவுகளை பார்வையிட்டால் இந்த குழப்பம் தீர்ந்திருக்கும். சி.சி.டி.வி. பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போட்டுக்காட்ட வேண்டும் என்று கபில் சிபில் அப்போது கூறினார். ஆனால், இதில் எதுவும் நடைபெறவில்லை. சி.சி.டி.வி. பதிவுகளை கண்டிருந்தால் பல்வேறு குழப்பங்களுக்கும் தெளிவு கிடைத்திருக்கும். ஆனால், குழப்பங்களுக்கு தீர்வு காண எவரும் தயாராக இல்லை.
 3. ஜம்மு காஷ்மீர் சிறப்பு காவல் படையின் (எஸ்.டி.எஃப்) கண்காணிப்பின் கீழ் அப்ஸல் இருந்ததாக அவர்களே ஒப்புக் கொண்டனர். கண்காணிப்பின் கீழ் இருந்த ஒருவர் பாராளுமன்ற தாக்குதலை திட்டமிட்டு எவ்வாறு நிறைவேற்றினார்? அதுவரை இந்த சிறப்பு காவல் படை என்ன செய்து கொண்டிருந்தது?
 4. முகம்மது யாஸின் ஃபதாஹ் முகம்மது என்பவரும் கொல்லப்பட்ட ஐவரில் ஒருவர் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்தனர். ஆனால், மஹாராஷ்டிராவின் தானே பகுதியின் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் இந்த முகம்மது யாசின் என்ற நபரை தான் நவம்பர் 2000ல் மும்பையில் கைது செய்ததாகவும் அவரை ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் இவர் லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சார்ந்தவர் என்றும் தெரிவித்தார். காஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் பாராளுமன்ற தாக்குதலில் எவ்வாறு ஈடுபட்டார்? விசாரணை முறையாக நடந்திருந்தால் யார் குற்றவாளிகள் என்பது நிரூபனம் ஆகியிருக்கும்.

ஆனால், தற்போது இந்த சந்தேகங்களையும் இன்னும் அதிகமான சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு பலரும் கோரிக்கை வைத்த போதும் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். ஜீலானி அவர்கள் இந்த சம்பவம் சம்பந்தமாக அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

மொத்தத்தில் அப்ஸலின் மரணத்துடன் இந்த கேள்விகளும் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளன. தேசத்தின் மனசாட்சி என்ற போர்வையின் கீழ் ஒரு மனிதனின் வாழ்க்கை சீரழித்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதியின் கீழ் தண்டிக்க முடியாத ஒரு நபரை அரசியல் ஆதாயங்களின் கீழ் தண்டித்துள்ளனர்.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்த நபரை சில குறுமதியாளர்களும் சுயநலவாதிகளும் தேச நலனிற்கு எதிரானவர்களும் இணைந்து தூக்கு கயிற்றிற்கு இரையாக்கியுள்ளனர்.

அப்ஸலின் வாழ்க்கை

காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் உள்ள சீர் ஜஹீர் என்ற இடத்தில் அப்ஸல் குரு பிறந்தார். மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் இவருடைய கனவு. கனவை நனவாக்குவதற்கு ஜீலம் வேலி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். இக்பாலின் கவிதைகளில் நாட்டம் கொண்ட, நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு சாதாரண இளைஞராகத்தான் இவரின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. 1980களின் இறுதியில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட ஒரு சில நடவடிக்கைகள் காஷ்மீர் மக்கள் மனதில் ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்தின. அத்துடன்  1984ல் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டு அங்கேயே  அடக்கம் செய்யப்பட்ட முகம்மது மக்பூல் பட்டின் மரணமும் இளைஞர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது. ஆயுத போராட்டம் ஒன்றுதான் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

இதே சிந்தனை அப்ஸலையும் ஆட்கொண்டது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் இணைந்தவர் பயிற்சியை மேற்கொள்ள எல்லையை தாண்டி பாகிஸ்தானிற்கு சென்றார். அங்கு சென்ற பிறகுதான் இந்திய அரசியல்வாதிகளை போன்று பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் சுயநலமிக்கவர்களாக இருப்பதை கண்டு கொண்டார். காஷ்மீர் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு காண அவர்களும் தயார் இல்லை என்பதை அறிந்தவர் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பினார்.

பாகிஸ்தானில் அவர் இருந்த மூன்று மாத காலங்களில் எவ்வித பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை. இந்தியா திரும்பிய அவர் எல்லை பாதுகாப்பு படையிடம் (பி.எஸ்.எஃப்) சரணடைந்தார். இவர் ஒரு சரணடைந்த தீவிரவாதி என்பதற்கான சõன்றிதழையும் அவர்கள் வழங்கினர். ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்த மருத்துவ படிப்பை அவரால் தொடர முடியவில்லை. இருந்த போதும் டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்பில் அரசியல் அறிவியலில் (பொலிட்டிகள் சயின்ஸ்) பட்டம் பெற்றார். மருத்துவம் மீது கொண்ட ஆர்வம் அவரை விட்டும் சிறிதும் குறையவில்லை. மருத்துவ படிப்பு படிக்க முடியாவிட்டாலும் 1997ல் மருந்து மற்றும் மருந்து சாதனங்கள் விற்பனை செய்யும் சிறிய கடை ஒன்றை ஆரம்பித்தார்.

பொதுவாக காஷ்மீரில் வாழ்க்கையை நடத்துவது என்பது கடினமான ஒன்றுதான். சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் எப்போதும் இராணுவத்தினரால் அழைத்து செல்ல முடியும். அதுவும் ஒரு சரணடைந்த தீவிரவாதியாக வாழ்வது எவ்வளவு கடினமானது என்பதை அப்ஸல் உணர ஆரம்பித்தார். எங்கு தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் இராணுவத்தினர் அப்ஸலை தேடி வருவர். அதுவும் எஸ்.டி.எஃப் என்ற சிறப்பு படையினர் புரிந்த அட்டூழியங்களை சொல்லிமாளாது. இவரை கைது செய்து அழைத்து செல்பவர்கள் கடுமையான சித்ரவதைகளுக்கு அவரை ஆட்படுத்துவர். பெருந்தொகையை அவரிடமிருந்து பிணையாக பெற்ற பிறகே அவரை விடுவிப்பர்.

22 ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவை சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய் ஒரு முறை அப்ஸலை அழைத்து சென்று கடுமையாக சித்ரவதை செய்தார். அவரின் பிறப்புறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி தன்னுடைய கொடூரத்தை வெளிப்படுத்தினார். அப்ஸலின் திருமணத்திற்கு பின்னரும் அவரின் சோதனைகள் தொடர்ந்தன. ஹம்ஹமா எஸ்.டி.எஃப் கேம்பில் தனக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை தனக்கு கொடுக்கப்பட்ட உச்சகட்ட சித்ரவதையைõக அப்ஸல் தெரிவித்தார். அப்ஸல் சித்ரவதை செய்யப்பட்டதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

டி.எஸ்.பி. வினய் குப்தா மற்றும் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் ஆகிய இருவரும் அப்ஸலை அழைத்துச் சென்று அவருக்கு கொடுக்கப்பட்ட சித்ரவதைகளை மேற்பார்வையிட்டனர். சாந்தி சிங் என்ற அதிகாரி சித்ரவதைகளை மேற்கொண்டார். தலைகீழாக தொங்கவிடுவது, குளிர்ந்த நீரில் படுக்க வைப்பது என மூன்றாம் தர சித்ரவதைகள் அனைத்தையும் மேற்கொண்டனர். தொடர்ந்து மூன்று மணி நேரம் மின்சாரத்தை பாய்ச்சினர். ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட பின்னரே அவரை விடுவித்தனர்.

தன்னிடமிருந்த  ஸ்கூட்டர் மற்றும் மனைவியின் நகைகளை விற்று இந்த பணத்தை கொடுத்தார் அப்ஸல். இந்த சித்ரவதைகளால் அப்ஸல் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டார். உடல் ரீதியான சிகிச்சைகளை பல மாதங்களாக அவர் மேற்கொண்டதாக அவரின் மனைவி தெரிவித்தார். வினோத் கே.ஜோஸ் என்ற பத்திரிகையாளர் 2006ம் ஆண்டு அப்ஸலை திகார் சிறையில் சந்தித்து பேட்டி எடுத்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அப்ஸல் அவரிடம் விவரித்தார். “என்னுடைய வரிப்பணத்தில் இயங்கி கொண்டிருக்கும் பாதுகாப்பு படைகளின் திகில் கதைகளை என்னால் காது கொடுத்து கேட்க முடியவில்லை’ என்று வினோத் தெரிவித்தார். அப்ஸல் அனுபவித்த கொடுமைகளை மேற்கொண்டு கேட்க முடியாமல் வேறு கேள்விகள் கேட்டு அவரை திசை திருப்பியதாக வினோத் தெரிவித்தார்.

இவர்களின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக டெல்லிக்கு சென்றார் அப்ஸல். ஆனால், அங்கும் தங்களின் தொல்லைகளை தொடர்ந்தனர் இந்த சிறப்பு படையினர். டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் காஷ்மீரில் இருந்து முகம்மது என்ற நபரை டெல்லிக்கு அழைத்து வந்து அவருக்கு ஒரு வாடகை வீட்டையும் பார்த்து கொடுக்குமாறு அப்ஸலை வற்புறுத்தினார். இதன் அடிப்படையில் காஷ்மீர் சென்ற அப்ஸல், முகம்மது என்ற நபரை அழைத்து வந்தார். அந்த நபர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்றும் அவர் காஷ்மீரை சார்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்றும் அப்ஸல் பின்னர் தெரிவித்தார்.

இந்த முகம்மது தான் பாராளுமன்ற தாக்குதலின் முக்கிய நபர் என்று கூறப்பட்டார். இதன் பின்னர் நடந்ததை நாடறியும். பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அப்ஸல் கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர் பஸ் நிலையத்தில் வைத்து அப்ஸலை கைது செய்தவர்கள் அங்கிருந்து பரிம்போரா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் டெல்லிக்கு அழைத்து வந்தவர்கள் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் வைத்து சித்ரவதைகளை தொடர்ந்தனர்.

முகம்மது என்ற நபர் குறித்து தான் தெரிந்த அனைத்தையும் அப்ஸல் தெரிவித்தார். ஆனால், தாங்கள் அமைத்த திரைக்கதையின் படி, அப்ஸல், அவரின் உறவினர் ஷவ்கத், அவர் மனைவி அப்ஸான் குரு மற்றும் பேராசிரியர் ஜீலானி ஆகியோர்தான் இதை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர். இதனை ஊடகங்கள் முன்னர் கூறுமாறும் தெரிவித்தனர். அப்ஸல் இதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்ஸலின் குடும்பத்தினர் தங்களின் கஸ்டடியில் இருப்பதாகவும் அப்ஸல் தங்களின் கட்டளைகளுக்கு இணங்க மறுத்தால் அவர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். வேறு வழியின்றி அப்ஸல் இதற்கு ஒப்புக்கொண்டார். ஏராளமான வெற்று காகிதங்களில் அவரிடம் கையெழுத்தும் வாங்கினர்.

ஊடகங்கள் முன் அப்ஸல் பேசிக் கொண்டிருக்கும் போது, பாராளுமன்ற தாக்குதலில் பேராசிரியர் ஜீலானியின் பங்கு என்ன என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். ஜீலானி ஒரு அப்பாவி என்று அப்ஸல் அதற்கு பதில் அளித்தார். இதனை கேட்டவுடன் ஏ.சி.பி. ரஜ்பீர் சிங், அப்ஸலை கடுமையாக சாடினார். தாங்கள் சொல்லிக் கொடுத்ததை தவிர்த்து வேறு எதுவும் சொல்லக் கூடாது என்று ஊடகங்கள் முன்னிலையிலேயே கூறினார். ஜீலானி குறித்து அப்ஸல் கூறிய கருத்தை மட்டும் வெளியிட வேண்டாம் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அனைத்து பத்திரிகையாளர்களும் இவரின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டனர். இதுதான் இவர்கள் மேற்கொள்ளும் பத்திரிகை தர்மம் போலும்.

இதன் பின்னர் வழக்கு விசாரணை ஆரம்பமானது. இவருக்காக வாதாடும் ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புகளை அவரின் குடும்பம் பெற்றிருக்கவில்லை. பின்னர் நீதிமன்றம் இவருக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவர் வழக்கில் ஆஜராகவில்லை. தனக்காக வாதாடுவதற்கு நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களை அப்ஸல் பரிந்துரைத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டதாக நீதிபதி எஸ்.என். திங்ரா தெரிவித்தார். பின்னர்  வழக்கறிஞர் நீரஜ் பன்சாலை நீதிமன்றம் நியமித்தது. இவரின் நியமனம் அப்ஸலுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. அப்ஸலுக்கு வாதாட தான் விரும்பவில்லை என்று பன்சாலும் தெரிவித்தார். அப்ஸலுக்கு வழக்கறிஞராக இல்லாமல் வழக்கை நடத்துவதற்கு ஒத்துழைப்பவராக (அமிகஸ் கூரே) செயல்படுமாறு நீதிமன்றம் கூறியது. அவரும் அவ்வாறுதான் செயல்பட்டார்.

இவ்வாறு வழக்கின் ஆரம்ப முக்கிய கட்டங்களில் ஒரு முறையான வழக்கறிஞர் இல்லாமல் அப்ஸல் தவித்தார். ஒரு முறையான வழக்கறிஞர் இல்லாமல் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை நாம் ஒரு கனம் சிந்தித்து பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம்.

உச்சநீதிமன்றத்தில் அப்ஸலின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் வாதாடினார். ஆனால், கீழ் நீதிமன்றங்களில் அனைத்து விசாரணையும் முடிந்து விட்டதால் உச்ச நீதிமன்றத்தில் பெரிதாக வாதாடுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை. இதனால் தான் இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

டெல்லி திகார் சிறையில் இருப்பதால் காஷ்மீரில் இருந்து தன்னுடைய குடும்பத்தினர் தன்னை சந்திக்க வருவது சிரமமாக உள்ளது. எனவே ஸ்ரீநகர் சிறைக்கு தன்னை மாற்றுமாறு ஒரு கோரிக்கையையும் அப்ஸல் முன்வைத்தார். அந்த கோரிக்கையும் நிலுவையில் வைக்கப்பட்டது. அப்ஸல் மரணிக்கும் வரை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. தனது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு மறுக்கப்பட்டது. கடைசியாக ஆகஸ்ட் 2012 அன்றுதான் அவரின் மனைவி அவரை சிறையில் சந்தித்தார். செப்டம்பர் 2012ல் அப்ஸலின் தாயார் மரணமடைந்தார்.

நீதி மற்றும் மனிதாபிமானம் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில்தான் அவரின் கருணை மனுவும் மறுக்கப்பட்டு மரண தண்டனையும் ரகசியமாக நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அப்ஸலுக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டது. அன்று காலை 6.45 மணிக்கு கடைசியாக தன்னுடைய குடும்பத்தினருக்கு கடிதமும் எழுதினார். அவர் மரணித்த ஒரு தினம் கழித்துதான் இந்த கடிதம் அவரின் குடும்பத்தினரை சென்றடைந்தது.

தேசத்தின் கூட்டு மனசாட்சி என்ற பதத்தின் கீழ் அப்ஸலின் வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் கேட்டது போல், ‘தேசத்தின் மனசாட்சி அப்ஸலின் மரணத்துடன் திருப்தி அடைந்துவிட்டதா? அல்லது அதன் இரத்த தாகம் இன்னும் தீரவில்லையா?

அப்ஸலின் கருணை மனுவை ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கொடுக்க சென்ற போது, தான் ஒரு மருத்துவராக ஆசைப்படுவதாக அப்ஸலின் மகன் காலிப் தெரிவித்தான். தந்தையின் ஆசைதான் நிறைவேறவில்லை. மகனின் ஆசையாவது நிறைவேறுமா?

விடைகளை தேடும் வினாக்கள்

பாராளுமன்ற தாக்குதல் ஆரம்பித்து அப்ஸலின் மரணம் வரை பல்வேறு கேள்விகள் விடைகளை தேடி நிற்கின்றன. அந்த கேள்விகளுடன் இணைந்து இன்னும் சில கேள்விகளும் கடமைகளும் நமது அரசாங்கத்தின் முன் உள்ளன. அதனை நம்முடைய அரசாங்கம் நிறைவேற்றுமா? இல்லை வழமை போல் மௌனம்தான் சாதிக்குமா?

 1. அப்ஸலை தூக்கிலிட்டதன் மூலம் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மத்திய அரசாங்கம் மீண்டும் சிதைத்துவிட்டது என்பதே பல அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. சமீப ஆண்களில் காஷ்மீர் மக்கள் தேர்தல்களில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல்வேறு அடக்குமுறைகள் இருந்தபோதும் இந்த அரசாங்கம் தங்களுக்கு நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் சிறிய அளவேனும் இருந்தது. ஆனால், அந்த சிறு நம்பிக்கையையும் அரசாங்கத்தின் இந்த செயல் சீரழித்துள்ளது. 1980களின் இறுதியில் அப்போதைய அரசாங்கம் செய்த அதே தவறைதான் இந்த அரசும் செய்துள்ளது. 1987ல் நடைபெற்ற தேர்தலில் காஷ்மீர் மக்கள் பெருவாரியாக பங்கு பெற்றனர். முஸ்லிம் யுனைடட் ஃப்ரண்ட் என்ற பெயரில் கட்சி அமைத்து தேர்தலில் போட்டியும் இட்டனர்.

ஆனால், இவர்கள் வெற்றி பெற்று விடுவார்களோ என்று அஞ்சிய அதிகார வர்க்கத்தினர் அந்த தேர்தலில் குளறுபடிகளை செய்தனர். இதனால் மனம் நொந்தவர்கள் ஆயுதங்களின் பக்கம் திரும்பினர். தேர்தலில் போட்டியிட்ட பலரும் தான் பின்னர் பிரிவினை வாத இயக்கங்களின் தலைவர்களாக மாறினர் என்பதை நாம் மறந்துவிட முடியாது. அத்துடன் 1984ல் திகார் சிறையில் தூக்கில் போடப்பட்ட முகம்மது மக்பூல் பட்டின் மரணமும் இதனுடன் இணைந்து கொண்டது.  இன்று அப்ஸலின் மரணமும் அத்தகைய ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம்தான் அனைவரிடமும் உள்ளது.

ரகசியமாக தூக்கிலிடப்பட்டது மட்டுமல்லாமல் அவரின் உடலை சிறையில் புதைத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை ஒப்படைக்குமாறு அவரின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுவதாக தெரியவில்லை. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பேராசிரியர் ஜீலானி அவர்கள் கூறியது போல், பிரார்த்தனையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால், அவரின் உடலை அவரின் குடும்பத்தினரிடம்தான் ஒப்படைக்க வேண்டும்.

ஒரு முறையான சட்ட நியதிகள் அப்ஸலுக்கு வழங்கப்படாததும் மக்கள் மன்றத்தில் மாற்று சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்ஸல் குருவை போன்று ஏராளமான மக்கள், குறிப்பாக காஷ்மீர் மக்கள், போதுமான சட்ட உதவிகள் கிடைக்காமல் சிறைகளில் இருந்து வருகின்றனர். இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அப்ஸலை தூக்கில் இட்டவுடன் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பத்திரிகைகள் மூன்று நாட்களாக வெளிவரவில்லை. ஒரு வாரம் கழிந்த பின்னரே சகஜ நிலை திருப்பி கொண்டு வரப்பட்டது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்று பேசியவர்கள் எங்கே சென்றனர்? இவ்வாறு அனைத்து நிலைகளிலும் காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது?

 1. அப்ஸலின் விவகாரத்தில் காஷ்மீரில் செயல்பட்டுவரும் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினரின் மோசமான செயல்பாடுகள் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கும் பதக்கங்களை பெறுவதற்கும் அப்பாவி மக்களின் வாழ்க்கையை இவர்கள் தொடர்ந்து சீரழித்து வருகின்றனர். எங்கேனும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் ஆண்களை கைது செய்வதும் பெண்களை மானபங்கம் செய்வதும் இவர்களின் வாடிக்கையாக உள்ளது. தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து மக்களையும் இன்ஃபார்மர்களாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு குடும்ப உறவுகளை சீரழித்து வருகின்றனர். இவர்களின் அட்டூழியங்கள் காரணமாக காஷ்மீரில் அனைத்து மக்களின் வாழ்க்கையும் சோதனையாக மாறியுள்ளது.

தனக்கு சித்ரவதைகளை இழைத்தவர்களின் பெயர்கள், முகம்மது என்ற நபரை அழைத்து வர சொன்னவரின் பெயர், அநியாயமாக தூக்கி சென்று பணம் பறித்தவர்களின் பெயர்கள் என அனைவரின் பெயர்களையும் அப்ஸல் தெளிவாக குறிப்பிட்டார். இவ்விபரங்களை விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும் போதே அப்ஸல் தெரிவித்தார். ஒரு சரணடைந்த தீவிரவாதியை இவர்கள் நடத்தும் முறையை அப்ஸலின் வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்று அப்ஸலுக்கு தூக்கு தண்டனை அளித்தவர்கள் இந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்கள்? ஊடகங்களின் முன்னிலையிலேயே அப்ஸலை மிரட்டிய காவல்துறை அதிகாரிக்கு இவர்கள் என்ன தண்டனை வழங்கினார்கள்? இன்று அப்ஸல் மரணித்து விட்டார். அடுத்து மற்றுமொரு அப்ஸலை தேடி இவர்கள் செல்லமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவர்களை போன்ற அதிகாரிகளால் தான் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை எவரும் தெளிவாக கூறுவர். டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவின் கொடுமைகள் பல்வேறு வழக்குகளிலும் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இவர்கள் போன்ற அதிகாரிகளுக்கு எதிராக நாட்டு நலனில் அக்கறை கொண்ட நமது அரசாங்கம் என்ன செய்ய உள்ளது?

 1. இன்று நம்முன் நிற்கும் மற்றுமொரு மிகப்பெரும் கேள்வி, ‘கூட்டு மனசாட்சி’ என்ற பதம் யாரை குறிப்பிடுகிறது? அப்ஸல் உண்மையிலேயே குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட சிலர் அவரின் தண்டனையை ஆதரித்து இருக்கலாம். ஆனால், முறையற்ற விசாரணையும் மனிதாபிமானமற்ற தண்டனையும் பலரின் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது. பல்வேறு தேசிய ஊடகங்களும் இந்த அநீதியை எதிர்த்து இன்று வரை தொடர்ந்து எழுதிய வண்ணம் உள்ளன. பல்வேறு மக்களும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டை துண்டாட விரும்பும் பாசிச சக்திகள் இத்தண்டனையை வரவேற்றுள்ளனர். ஆக தேசத்தின் கூட்டு மனசாட்சி என்பது இவர்களை தான் குறிக்கிறதா?

அப்ஸலுக்கு வழங்கப்பட்ட இதே அளவுகோல் மற்றவர்களுக்கும் பின்பற்றப்படுமா என்பதுதான் தற்போதுள்ள கேள்வி. குஜராத்தில் அப்பாவி பெண்களை மானபங்ம் செய்து அதனை வெளிப்படையாக கூறிய பாபு பஜ்ரங்கிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? இதில் யாருடைய மனசõட்சியின் ஒப்புதல் இவர்களுக்கு தேவைப்படுகிறது? நாடு முழுவதும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அதனை ஒப்புதல் வாக்குமூலமாகவும் கொடுத்த அசிமானந்தா குழுவினருக்கு இவர்கள் இதே தண்டனையை வழங்குவார்களா? ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரங்களையும் மானபங்கங்களையும் நிகழ்த்தியவர்களுக்கு இதே தண்டனை வழங்கப்படுமா? இல்லையென்றால்  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல், சிறுபான்மையினருக்கு எதிராகத்தான் தூக்கு தண்டனை முனைப்புடன் செயல்படுத்தப்படுகிறதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் பதில் என்ன?

 1. அப்ஸல் குரு விஷயத்தில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தையும் நாம் உற்று நோக்க வேண்டும். செய்தியாளர்களாக செயல்பட வேண்டிய பத்திரிகைகள் நீதிமன்றங்களாக செயல்பட்டன. அப்ஸல் குருவை ஒரு அதி பயங்கர தீவிரவாதியாக சித்தரிப்பதற்கு இல்லாத கதைகளை ஏற்படுத்தி கொடுத்தனர். பாராளுமன்ற தாக்குதலை நடத்திய நபர்களில் அப்ஸலும் ஒருவர் என்று கூட சில பத்திரிகையாளர்கள் எழுதினர். ஸி டிவி இன்னும் ஒரு படிமேலே சென்று காவல்துறையின் கூற்றுக்களை அடிப்படையாக கொண்டு ஒரு டாக்குமெண்டரியை தயாரித்து வெளியிட்டது. அப்போதைய பிரதமனர் வாஜ்பாய் மற்றும் துணை பிரதமர் அத்வானி ஆகியோருக்கு அதனை போட்டு காட்டி வாழ்த்துக்களையும் பெற்றது. இதே ஸி டி.வி. தான் அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்). ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் பத்திரிகைகள் தங்களின் கடமையை மறந்து செயல்பட்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அப்ஸலுடன்  கைது செய்யப்பட்ட மற்றவர்கள் குறித்தும் அவதூறுகளை அள்ளி வீசினர். பேராசிரியர் ஜீலானி குறித்து எழுதும் போது, ‘அவர் பகுதி நேரமாக ஜிஹாதிய பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார்’ என்றும் ‘உலகம் முழுவதும் ஜிஹாதிய விதைகளை தூவியவர்’ என்றும் அள்ளி வீசினர். ஆனால், ஜீலானி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு எந்தவொரு பத்திரிகையும் அவதூறை எழுதியதற்காக மன்னிப்பு கோரவில்லை.

‘தேசத்தின கூட்டு மனசாட்சி’ என்ற வார்த்தை உபயோகப்படுத்துவதற்கு பத்திரிகைகள் முக்கிய காரணமாக அமைந்தன என்றால் அது மிகையல்ல. விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே குற்றவாளியை தீர்மானித்து அவருக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் இட்ட கூச்சல் அப்ஸலின் மரணத்துடன் முற்று பெற்றது. (அப்ஸலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இன்று வரை சில பத்திரிகைகள் எழுதி வருவதை நம்மால் மறுக்க முடியாது).

தங்கள் முன்னிலையில் ஏ.சி.பி.ரஜ்பீர் சிங், அப்ஸலை மிரட்டியதை பத்திரிகைகள் வெளியுலகிற்கு உணர்த்தி இருக்க வேண்டும். ஆனால், இந்த கடமையை எந்த ஊடகமும் செய்வதற்கு முன்வரவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. வெறும் உணர்ச்சிகளை கிளப்ப கூடிய கருவிகளாக இல்லாமல் தங்களின் கடமையை உணர்ந்து பத்திரிகைகளை இனியேனும் செயல்படுமா?

 1. அப்ஸலின் விஷயத்தில் நீதித்துறையும் பதில் அளிப்பதற்கான கேள்விகள் ஏராளமாக உள்ளன. அநீதிக்கு ஆளான மக்கள் இறுதி வரை நம்பியிருப்பது நீதித்துறையைதான். அங்கும் நீதி மறுக்கப்படும் போது பாதிக்கப்பட்ட மக்கள் இனி எந்த கதவை சென்று தட்டுவார்கள்? அப்ஸலுக்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதை தெளிவாக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேசத்தின் மனசõட்சியை திருப்திப்படுத்த தூக்கு தண்டனையை கொடுத்ததை எந்த விதத்தில் சரி காண முடியும்? சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வேண்டுமே அல்லாமல், மக்களின் உணர்வுகளை திருப்திபடுத்துவதற்கு தீர்ப்புகளை வழங்கக்கூடாது. நீதித்துறையில் உள்ள சிலர் செய்யும் இதுபோன்ற தவறுகள் ஒட்டுமொத்த நீதித்துறை மீதும் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அப்ஸலுக்கு வழங்கிய தீர்ப்பு மூலம் தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்துதல் என்ற மோசமான முன்னுதாரணத்தை நீதிபதிகள் ஏற்படுத்தியுள்ளனரோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நியாயமான அச்சத்தை போக்குவதற்கு நீதித்துறை என்ன செய்யவுள்ளது?

 1. அப்ஸல் குரு தூக்கில் போப்பட்டவுடன் காஷ்மீர் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் காவல்துறை கைது செய்தது. பலரை வீட்டுக் காவலில் வைத்தது. பேராசிரியர் ஜீலானி அவர்களும் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர் இஃப்திகார் ஜீலானியும் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா ஜீலானியின் மருமகன் ஆவார். இவரின் குழந்தைகளையும் தனி அறையில் அடைத்து காவல்துறையினர் பீதிவயப்படுத்தினர். இஃப்திகார் ஜீலானியின் கைதை குறித்து அறிந்த பத்திரிகையாளர்கள் அவரின் இல்லம் முன கூடினார். இதனால் ஐந்து மணி நேரத்திற்கு பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். இவரின் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை வைத்துள்ளார்.

அப்ஸல் தூக்கிலிடப்பட்டத்தை கண்டித்து டெல்லியில் சில மாணவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை சீர்குலைத்த பஜ்ரங் தளத்தின் குண்டர்கள் ஆõப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கினர். இவை அனைத்தையும் காவல்துறையினர் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். பஜ்ரங் தளத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன்மூலம் அரசாங்கமும் காவல்துறையும் மக்களுக்கு உணர்த்த விரும்பும் செய்தி என்ன? அரசாங்கத்தை எதிர்த்து எவ்வித கேள்விகளையும் கேட்கக்கூடாது. அவ்வாறு கேள்வி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் இதுதான் அவர்களின் நிலை என்று சொல்லுகின்றனரா? இல்லை காஷ்மீரில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவில் எங்கும் நிம்மதியாக வாழமுடியாது என்ற செய்தியை உணர்த்துகின்றனரா?

இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிப்பார்களா? இல்லை பதில் கிடைக்காத கேள்விகளின் பட்டியலில் இவையும் இடம்பெறுமா?

தேசத்திற்கு ஆபத்து என்ற குரல் அவ்வப்போது நமது நாட்டில் ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. ஆனால், இந்த ஆபத்திற்கு உண்மையான காரணிகள் யார் என்பதுதான் விசாரணை இல்லாமல் செல்கிறது. குண்டுவெடிப்புகளால் நாட்டிற்கு ஆபத்து என்று சொல்லப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் கூட்டங்கூட்டமாக அடைக்கப்பட்டார்கள். ஆனால், இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்ளவர்கள் காவித்தீவிரவாதிகள் என்ற உண்மை பின்னர்தான் வெளிவந்தது. ஆனால், இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை ஆமை வேகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. வாழ்வின் முக்கிய பகுதியை சிறையில் கழித்த அப்பாவிகளுக்கு அதனை திரும்ப கொடுப்பவர்கள் யார்?

பாராளுமன்ற தாக்குதலை நடத்திய உண்மை குற்றவாளிகள் யார் என்ற உண்மை தேச மக்களுக்கு இன்னும் சொல்லப்படவில்லை. மக்களின் வாழ்வையும் தேசத்தின் நலனையும் சீரழித்து கொண்டிருக்கும் சில அதிகாரிகளின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டு குற்றம் சுமத்தப்பட்ட போது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் ஒரு சிறு விசாரணை கூட நடத்தப்படவில்லை. இவ்வாறு தேச நலனுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இது போன்ற செயல்களை செய்வதற்கு மற்றவர்களும் தயங்கமாட்டார்கள். இத்தகைய அதிகாரிகள் பதவியில் இருப்பது நமது நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல. எனவே இவர்களுக்கு எதிரான ஒரு முறையான விசாரணை நடத்தப்பட்டு இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை செய்வது கொண்டு மட்டுமே நமது நாட்டை தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும். மக்களின் மனதிலும் நம்பிக்கையை விதைக்க முடியும்.

அப்ஸலின் இறுதி தருணங்கள்

அப்ஸல் குருவின் இறுதி தருணங்கள் குறித்த விவரங்களை திகார் சிறையின் காவலர்கள் தெரிவித்தனர். அப்ஸல் குருவிற்கு அவரை தூக்கில் போடுவது குறித்த செய்தி அன்று காலை தான் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் தன்னுடைய குடும்பத்திற்கான கடிதத்தை அவர் எழுதியுள்ளார். இதனை எழுதும் போது அவரிடம் எவ்வித பதற்றமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திகார் சிறையில் ஏறத்தாழ 25 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் பத்து தண்டனைகள் நிறைவேற்றப்படுவதை சீனியர் அதிகாரிகள் கண்டுள்ளனர். ஆனால், தன்னுடைய மரணச் செய்தியை கேட்ட பிறகு இவ்வளவு சாந்தமாக இருந்த எந்தவொரு நபரையும் நாங்கள் பார்த்ததில்லை. தங்களின் மரண செய்தியை கேட்டவுடன் நடுங்கிய கைதிகளைதான் இதுவரை பார்த்தோம். ஆனால், தூக்கு மேடைக்கு புன்னகையுடன் சென்றவரை இப்போதுதான் பார்த்தோம் என்றும் கூறினர்.

‘காஷ்மீர் பிரிவினை குறித்து அவர் எதுவும் பேசவில்லை. தான் தேவையில்லாமல் இப்பிரச்சனையில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அப்ஸல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தூக்கில் போடுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர்,சிறை அதிகாரிகள் சிலருடன் அப்ஸல் உரையாடியுள்ளார். ‘மனித குலம் ஒன்று என்பது குறித்தும் சர்வதேச சகோதரத்துவம் குறித்தும் அவர் பேசினார். அனைத்து மனிதர்களின் ஆத்மாவையும் ஒரே கடவுள் தான் படைத்தார். சத்தியத்தின் பாதையில் செல்வதுதான் மிகப்பெரும் வெற்றி என்றும் கூறினார்’ என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

அவருடைய குடும்பத்தினரின் நிலை குறித்தும் அவர்களை யார் கவனிப்பார்கள் என்றும் சிறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ‘நம் அனைவரையும் கடவுள் தான் கவனித்து வருகிறான். தற்போதும் அவன் தான் கவனிப்பான் என்று பதில் அளித்துள்ளார்.

சாதாரண காஷ்மீர் உடையை அணிந்திருந்தவர், குளித்துவிட்டு குர்தா பைஜாமா அணிந்து தொழுகையை நிறைவேற்றியுள்ளார். தூக்கு மேடைக்கு செல்லும் வழியில் அதிகாரிகளை அவர்களின் பெயர்களை கூறி அழைத்து முகமன் கூறினார். அவருடைய பலம் அவரின் ஆன்மீகம் மூலம் அவருக்கு கிடைத்ததாகும். அனைவரிடமும் நன்றாக பழகியவர். தூக்கில் போடுவதற்கு முன் ஒரேயொரு கோரிக்கையை தான் அவர் முன்வைத்தார். எனக்கு வலியை தர மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்பதுதான் அந்த கோரிக்கை. அவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

ஒரு நிமிடத்தில் அவரின் உயிர் பிரிந்தது. திகார் சிறையிலே அவர் அடக்கமும் செய்யப்பட்டார். நாட்டில் உள்ள வலதுசாரிகள் இவரின் மரணத்தை வரவேற்றனர். ஆனால் தண்டனையை நிறைவேற்றிய அதிகாரிகள் மற்றும் திகார் சிறையில் சோகம்தான் சூழ்ந்திருந்தது. “ஒரு தீமையின் முடிவில் நீங்கள் சந்தோஷம் அடையலாம். ஆனால், பயபக்தியுள்ள ஒரு ஆன்மா மரணிக்கும் போது உங்களை சோகம் ஆட்கொள்ளும்” என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

(செய்தி ஆதாரம்: தி இந்து பிப்: 11,2013)

தவறுதலாக வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புகள்!

பிரணாப் முகர்ஜி நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் முன்னாள் நீதிபதிகள் பதினான்குபேர் அவருக்கு கோரிக்கை கடிதத்தை எழுதினார்கள். தனித்தனியாக எழுதப்பட்ட இந்த கோரிக்கை கடிதங்களில் உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பதிமூன்று நபர்களின் தண்டனைகளை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். இவர்களில் சிலர் தூக்கு தண்டனைகள் கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தபோதும் அதனை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அவர்கள் வைக்கவில்லை.

தண்டனை வழங்கப்பட்ட பதிமூன்று நபர்களுக்கும் தவறுதலாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவறாக தண்டனை வழங்கப்பட்டிருப்பதை உச்சநீதின்றமே ஏற்றுக்கொள்ளவும் செய்தது. எனவே இவர்களின் தண்டனைகளை ரத்து செய்யுமாறு இவர்கள் கோரிக்கை வைத்தனர். இதில் வேதனை என்னவென்றால் இந்த பதிமூன்று நபர்களில் இருவருக்கு ஏற்கெனவே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. ராவ்ஜி ராவ் மே 4,1996 அன்றும் சுர்ஜா ராம் ஏப்ரல் 7,1997 அன்றும் தூக்கில் போடப்பட்டனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தானை சார்ந்தவர்கள்.

தூக்கு தண்டனை வழங்கப்படும் வழக்ககளிலேயே தவறுகள் நிகழ்ந்தால் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை பிறக்கும்? தவறுதலாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக இந்த பதிமூன்று வழக்குகள் தான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளன. வெளியுலகிற்கு தெரியாமல் எத்தனை வழக்குகளில் தவறுதலாக தீர்ப்புகள் வழங்கப்பட்டனவோ?

மார்ச் 2013 விடியலில் வெளியான அட்டைப்பட கட்டுரை.

 

Comments are closed.