மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த இந்தியா

0

மரண தண்டனையை தடை செய்வது தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்தத் தீர்மானம், இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கிறது என்று இந்தியா கூறியுள்ளது

உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து உலகின் பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே இந்த தண்டனை இன்னும் நடைமுறையில் உள்ளது. அதுவும் கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மட்டும் அத்தகைய தண்டனை வழங்கப்பட்டு வருவதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது.

தற்போது மரண தண்டனைக்கு எதிராக ஐ.நா. சபை நடத்திய வாக்கெடுப்பில் ஐ.நா.விற்கான இந்திய பிரதிநிதிகள் மரண தண்டனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் மரண தண்டனையை எதிர்த்து 115 வாக்குகளும், மரண தண்டனைக்கு ஆதரவாக 38 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் மிக அரிதாகவே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் கடந்த 12 ஆண்டுகளில் 3 பேருக்கு மட்டுமே அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று அரசினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி மயங்க் ஜோஷி, “இந்தியாவில் கொடுமையான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், கருணை மனு தாக்கல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனையை எதிர்த்து சட்டரீதியாக முறையிடு செய்வதற்கான அனைத்து உரிமைகளும் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம், மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தை கொண்டது. அது இந்திய அரசியல்சாசனத்தில் இருந்து முரண்பட்டுள்ளதால் அந்தத் தீரமானத்தை இந்தியா எதிர்த்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.