மருத்துவர் கஃபீல் கானை தொடர்ந்து வதைக்கும் உத்திர பிரதேச காவல்துறை

0

பிணையில் வெளிவந்த மருத்துவர் கஃபீல் கானை மீண்டும் கைது செய்த உத்திர பிரதேச காவல்துறை

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்றியதற்காக மருத்துவர் கஃபீல் கானை உத்திர பிரதேச அரசு இன்றும் தண்டித்து வருகிறது. முன்னதாக மருத்துவர் கஃபீல் கானை பஹ்ரைச் காவல்துறை கைது செய்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவரை பிணையில் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை அவரை ஒன்பது வருட பழமையான வங்கி மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளியாக சேர்த்து காவல்துறை அவரை மீண்டும் கைது செய்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மருத்துவர் கஃபீல் கானின் சகோதரர் மீது ஷேக்பூரை சேர்ந்த ஒருவர் வங்கி மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அவரது புகாரின் படி அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு துவங்கியுள்ளனர் என்றும் அந்தக் கணக்கில் இருந்து மொத்தம் 82 லட்ச ரூபாய் மதிப்பிலான பண பரிவர்த்தனையை அவர்கள் செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த கணக்கு மருத்துவர் கஃபீல் கானின் சகோதரர் அதீல் அஹமத் மற்றும் அவரது நண்பர் முஹம்மத் ஃபைசான் ஆகியோரால் தொடங்கப்பட்டது என்றும் இந்த கணக்கில் இருந்து மருத்துவர் கஃபீல் கானின் கணக்கிற்கு பணம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த வங்கிக் கணக்கில் இருந்து தான் மருத்துவர் கஃபீல் கானின் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கணக்கை துவங்கிய முஹ்ஹம்த் ஃபைசான் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் போலியான ஆவனங்கள் மூலம் துவங்கப்பட்ட இந்த கணக்கில் மருத்துவர் கஃபீல் காணும் ஒரு பயனாளியாக இருப்பதால் அவரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மருத்துவர் கஃபீல்கான் மற்றும் அவரது சகோதரரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் வினை குமார் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.