மருத்துவர் கபீல்கானின் சகோதரர் மீது மோசடி வழக்கு

0

மருத்துவர் கபீல்கானின் சகோதரர் மீது மோசடி வழக்கு

மருத்துவர் கபீல்கானின் இளைய சகோதரர் மீது சமீபத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில் தற்போது அவரது மற்றொரு சகோதரர் மற்றும் அவரது நண்பர் மீது போலியான ஆவனங்களை வைத்து வங்கி கணக்கு தொடங்கியதாக அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

உத்திர பிரதேச மாநிலம் BRD மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து கொண்டிருந்த குழந்தைகளை மருத்துவர் கபீல்கான் தனது சொந்த முயற்ச்சியில் உயிர்பிழைக்க வைத்தார். அதனை தொடர்ந்து அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு விதமான அடக்குமுறைகளை உத்திர பிரதேச அரசு கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே கபீல்கானின் மூத்த சகோதரர் ஆதில் மற்றும் அவரது நண்பர் முஹம்மத் பைசான் மீதான வழக்கும் பார்க்கப்படுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, பைசானின் பெயரில் திறக்கப்பட்ட அந்த வங்கிக் கணக்கு ஆவணங்களில் பெயரில் பைசானின் பெயரும் ஆனால் புகைப்படத்தில் முசப்பர் ஆலம் என்பவரது புகைப்படமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமமும் போலியானது என்றும் இந்த வங்கி கணக்கு மூலம் சுமார் இரண்டு கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, போலி ஆவணங்கள் மற்றும் தனது புகைப்படங்கள் வைத்து ஆதில் மற்றும் பைசான் ஆகியோர் கடந்த 2009 ஆம் ஆண்டு வங்கி கணக்கு ஒன்றை தொடங்கியதாக ஷேக்பூர் பகுதியை சேர்ந்த ஆலம் காவல்துறையில் புகாரளித்துள்ளர்.

இந்த புகாரை பெற்றதும் இது குறித்து விசாரணை நடத்த கோட்வாலி வட்ட காவல்துறை அதிகாரி அதுல் சவ்பேவிற்கு காவல்துறை உத்தரவிட்டப்பட்டுள்ளது.

தன் மீதான வழக்கு குறித்து கருத்து தெரிவித்த ஆதில் தனது சகோதரர் மீது துப்பக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு போலியான வழக்கில் தன்னை சிக்க வைக்க காவல்துறை முயற்சித்து வருகிறது என்றும் இதற்கு தன் சகோதரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை பின்னியில் இருந்து இயக்குவது பாஜக எம்.பி. ஒருவர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.