மலிவாகிப்போன தலித், முஸ்லிம்களின் உயிர். பாஜக எம்எல்ஏ மகனின் தவறை எதிர்த்தவரின் 10 வயது மகன் கொலை

0

பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தட்டிக்கேட்ட தலித் சமூகத்தை சேர்ந்த சேத்ராம் என்பவற்றின் பத்து வயது மகன் மணலில் புதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான்.

உத்திர பிரதேசத்தின் பாரைச் மாவட்டத்தில் உள்ள குர்தேவி கிராமத்தை சேர்ந்தவர் சேத்ராம். தலித் சமூகத்தை சேர்ந்த இவர் பாஜக எம்எல்ஏ சுபாஷ் திரிபாதியின் மகன் நிஷான்க் திரிபாதியின் சட்டவிரோத மணல் கொள்ளையை எதிர்த்து வந்துள்ளார். இவர் இது தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதி இதன் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை மாலை சேத்ராம்மின் பத்து வயது மகன் மணலில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

இதனையடுத்து சேத்ராம், நிஷான்க் திரிபாதி, மற்றும் மேலும் ஏழு பேர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில், இவர்கள் நடத்தும் மணற்கொள்ளையை தான் தடுக்கும் காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிடப்போவதாக அவர்கள் மிரட்டியதாக கூறியுள்ளார். “அவர்கள் என்னையும் எனது குடும்பத்தினரையும் JCB யின் கீழ் வைத்து நசுக்கிவிடுவதாக மிரட்டினர்.” என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

காக்ரா நதிக்கரையில் சட்ட விரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை எதிர்க்கும் போராட்டத்தை சேத்ராம் முன்னிலையில் நின்று நடத்தி வருகிறார். இவர் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத்திற்கு இந்த மணல் கொள்ளை குறித்து எழுதிய கடிதத்தால் எந்த வித பலனும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஜூன் 24 ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் தன் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக தனது மகன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்று அவர் கூறியுள்ளார்.

சேத்ராமின் மகன் கரன் மற்றும் அவனது நண்பன் நிசார் (வயது 12) ஆகிய இருவரும் JCB எந்திரங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்பதற்காக சென்றுள்ளனர். மாலை ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை என்றதும் அவர்களை கிராம மக்கள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது கரணின் உடல் மணலில் புதைபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனான நிசாரின் உடல் ஆற்றோரம் உள்ள மற்றொரு மணல் அல்லும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினரின் கூற்று.

இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாரைச் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் சக்சேனா தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாஜக அரசியல்வாதிகளின் உறவினர் இதுபோன்று செயலில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாதம் மாவ் பகுதி பாஜக எம்.எல்.ஏ.ஸ்ரீராம் சோன்கர் என்பவர் வாகனங்கள் செல்லக்கூடாத பகுதி வழியாக சென்ற அவரது வாகனத்தை தடுத்த காவலாளியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை அவர் பொதுமக்களின் முன்னிலையில் செய்தார் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரேம்ஷங்கர் ஷாஹி லக்னோ SSP யிடம் கூறியும் இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் தனிதனி நிகழ்வுகளாக பார்க்க இயலாது. அதித்யனாத்தின் அரசு உத்திர பிரதேச ஆட்சியில் அமர்ந்ததும் இது போன்ற ஏகப்பட்ட நிகழ்வுகள் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் சஹாரன்பூர் எம்.பி. ராகவ் லகன்பால் அவரது ஆதரவாளர்களுடன் மாவட்ட SSP  அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரை சுமார் இரண்டு மணி நேரம் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இது குறித்து சஹாரன்பூர் SSP லவ் குமார் அரசுக்கு அளித்த தனது அறிக்கையில் தன் அலுவலகத்தை சூறையாடிய கும்பலில் பாஜக எம்.பி. யும் ஒரு அங்கமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

இதுபோன்று மே மாதம் கோரக்பூர் பாஜக எம்.எல்.ஏ. ராதா மோகன்தாஸ் அகர்வால், அவர் நடத்திய தர்ணா போராத்தின் போது ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்த IPS அதிகாரி சாரூ நிகாம்-ஐ  பொதுமக்கள் முன்னையில் கடுமையாக திட்டியவர். மேலும் IG மற்றும் SSP ஆகியோரை உயிருடன் அவர்களது தோல் உரிக்கப்படும் என்றும் மிரட்டியவர்.

பைரேலி பாஜக எம்.எல்.ஏ. கேஷர் சிங், வங்கி மேலாளர் ஒருவரை தாக்கி அவரை பணயக்கைதியாக வைத்து அவரது ஆதரவாளர் ஒருவரின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யுமாறு கூறியுள்ளார்.

பாஜக எம்.பி. பிரியங்கா ராவத் ASP கயானன்ஜை சிங்-ஐ மிக மோசமான வார்த்தைகளில் திட்டி அவரை முந்தைய சமாஜ்வாடி கட்சியின் உளவாளி என்று கூறியவர். மேலும் “மாறிவிடு, அரசு மாறிவிட்டது” என்றும் எச்சரித்தவர்.

அதித்யநாத் அரசின் அமைச்சர்கள் குறித்து செய்திகளில் வெளியான சிறு துளிகள் தான் இவை.

Comments are closed.