மல்லையாவை தொடர்ந்து ஆயுத வியாபாரி சஞ்செய் பந்தாரி லண்டனுக்கு தப்பியோட்டம்

0

தேசத்தின் பல்வேறு விசாரணை நிறுவனங்களின் பட்டியலில் இருந்த ஆயுத வியாபாரியான சஞ்செய் பந்தாரி நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் நேபால் வழியாக லண்டனுக்கு தப்பியோடி இருக்கலாம் என்று அரசு தரப்பில் நம்பப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் லண்டனுக்கு செல்ல இருந்த இவர் பிரிட்டிஷ் விமானத்தில் ஏறுவதை விட்டு தடுக்கப்பட்டார். இவரது வீட்டில் இருந்து பல தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை வருமான வரித்துரை அதிகாரிகள் கண்டெடுத்ததை அடுத்து இவர் மீது Official Secrets Act (OSA) இன் பிரிவுகள் 3 மற்றும் 5 இன் கீழ் டில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பந்தாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பந்தாரியையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவையும் இணைக்கும் மின்னஞ்சல்கள் அதிகாரிகளிடம் சிக்கின. பின்னர் இந்த தொடர்பு வத்ராவின் வழக்கறிஞர்களால் மறுக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் முன் பந்தாரி ஆஜர் ஆனாலும் அவரின் லண்டன், அரபு அமீரகம் மற்றும் துபாய் இணைப்புகள் பற்றி தகவல்களை தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

ஆனால் அவரது வீட்டில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் அவருக்கு துபையிலும் லண்டனிலும் இரண்டு சொத்துக்கள் இருப்பது தெரியவதுள்ளது. மேலும் இவருக்கு நிதி அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடமும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவருடன் நெருக்கமாக இருந்த ஒரு அதிகாரி ஒரு வருடத்திற்கு முன் ஓய்வு பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவருக்கு ஃபிரெஞ்சு பன்னாட்டு நிறுவனம் மற்றும் வணிக மற்றும் இராணுவ விமானங்களை உற்பத்தி செய்யும் European Aeronautic Defence and Space Company (EADS)  உடன் தொடர்பிருப்பதாகவும் இந்திய விமானப்படைக்கு 4000 கொடிகளில் பெறப்பட்ட பயிற்சிவிமானம் வாங்கியதில் பந்தாரிக்கு தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பந்தாரிக்கு சொந்தமான Offset India Solutions Private Limited மற்றும் Avaana Software and Services Private Limited ஆகிய நிறுவனங்கள் மீது பதியப்பட்ட வரியேய்ப்பு வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர் தற்போது நாட்டை விட்டு தப்பி ஓடியது தொடர்பாக டில்லி காவல்துறையும் உள்துறை அமைச்சகமும் மெளனம் காத்து வருகிறது. ஏற்கனவே பல வங்கிகளில் கோடிக்கணக்கான கடன்களை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடிய மல்லையாவை நாட்டிற்கு எப்போது கொண்டுவர போகிறீர்கள் என்று மத்திய அரசிடம் எதிர்கட்சிகளின் கேள்வி எழுப்பிய வன்னம் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப நினைக்கும் பணக்காரர்களின் சொகுசு புகலிடமாக லண்டன் மாறியுள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது. பந்தாரியுடன் இதுவரை 57 நபர்கள் இது போன்று இந்திய சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி லண்டன் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Comments are closed.