மல்லையா, நிரவ் மோடி வரிசையில் 5000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர்

0

மல்லையா, நிரவ் மோடி வரிசையில் 5000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர்

பாஜக ஆட்சியில் ஆயிரக் கணக்கில் கோடிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பி ஓடும் தொழிலதிபர்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் 5000 கோடி ரூபாயை மோசடி செய்த குஜராத் தொழிலதிபர் நிதின் சந்தசாரா துபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நைஜீரியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் நிதின் சந்தசாரா மற்றும் அவரது சகோதரர் சேட்டன் சந்தசாரா உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் நைஜீரியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்துள்ளது. நைஜீரியா அரசுடன் கைதிகளை பகிர்ந்துகொள்ளும் உடன்படிக்கை எதுவும் இந்திய அரசு கையெழுத்திடாததால் அவர்களை அங்கிருந்து இந்தியா அழைத்து வருவது இயலாதது என்று கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்னதாக நிதின் சந்தசாரா துபாயில் வைத்து ஆகஸ்டு மாதம் இரண்டாம் வாரம் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தி உண்மையல்ல. அவர் கைது செய்யப்படவே இல்லை. அவரும் அவரது குடும்பத்தினரும் அதற்கு முன்னதாகவே நைஜீரியா தப்பியோடிவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இருந்தும் இந்திய புலனாய்வு நிறுவனங்கள் சந்தசாரா கும்பத்தினர் துபாயில் இருந்தால் அவர்களை கைது செய்யும்படியான கோரிக்கையினை துபாய் அரசிற்கு அனுப்ப உள்ளனர் என்று கூறப்படுகிறது. தற்போது சந்தசாரா குடும்பத்தினர் நைஜீரியாவிற்கு இந்திய கடவுச்சீட்டு பயன்பட்டுத்தி சென்றனரா அல்லது வேற்று நாட்டு கடவுச்சீட்டு பயன்படுத்தி சென்றனரா என்பது இன்னும் தெரியவில்லை.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர், ஸ்டேர்லிங் பையோடெக் உரிமையாளர்களான சந்தசாரா குடும்பத்தினர் மற்றும் ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் திக்ஷித், விலாஸ் ஜோஷி, கணக்கு தணிக்கையாளர் ஹேமந்த் ஹாதி மற்றும் ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க் ஆகியோர் மீது வங்கியிடம் 5000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Comments are closed.