மஹாராஷ்டிராவில் தலித்கள் மீது கொலைவெறி தாக்குதல்: மவுனம் காக்கும் ஊடகங்கள்

0

மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் ஜாதியினறான மராத்தா இன சிறுமியை 14 வயது தலித் சிறுவன் கற்பழித்துவிட்டான் என்கிற செய்தி கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி சமூக வலைதளங்களில் சில விஷமிகாளால் பரவ விடப்பட்டுள்ளது. ஆனால் அப்படி எந்த ஒரு கற்பழிப்பும் நடக்கவில்லை என்றும் அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கிரீஸ் மகாஜன் மறுத்துள்ளார்.

இருந்தும் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து அக்டோபர் 9 ஆம் தேதியில் இருந்து மராத்தா இனத்தவர்கள் அம்பேத்கரிய பெளத்த தலித் சமூகத்தினரை நாஷிக்கின் பல பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளனர்.  இகாத்புரி பகுதியில் பெளத்த தலித் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வாகனங்கள் கலவரக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரக்காரர்கள் தலித் சமூகத்தினரின் வீடுகளில் புகுந்து அங்கிருந்தவர்களை கத்திகளாலும் வாள்களாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அம்பேத்கர் சிலைகளும் பெளத்த வழிபாட்டு தளங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தலேகான் சாலையை மறித்த கலவரக்காரர்கள் அந்த சாலையில் சென்ற பெளத்த அடையாளங்கள் அல்லது அம்பேத்கர் படம் போன்ற தலித்திய அடையாளங்கள் கொண்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். நாஷிக்-ஆக்ரா நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 20   வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தலித் குடும்பத்தினர்களின் இருபதுக்கும் மேலான வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளது என்று செய்தகள் வெளியாகியுள்ளன. இந்த கலவரத்தை தொடர்ந்து தலேகான் பகுதியில் வசித்து வந்த தலித் சமூகத்தினர் பலர் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மராத்தா இனத்தை சேர்ந்த எந்த ஒருவர் மீதும் காவல்துறை வழக்கு பதியவோ அல்லது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவோ மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த கலவரம் தொடர்பாக ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் மாவட்ட நிர்வாகிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை 24 மணி நேரங்களுக்குள் பார்வையிட வேண்டும் என்ற தங்களின் கடமையினையும் செய்ய மறுத்துள்ளதாக தெரிகிறது.

இது போதாதென்று அக்டோபர் 12  ஆம் தேதி நாஷிக் சாலை பகுதியில் உள்ள பெளத்த தலித் குடியிருப்பில் தேடுதல் வேட்டை நடத்துகிறோம் என்கிற பெயரில் காவல்துறையினர் தலித் சமூக மக்களின் வீடுகளில் சென்று அங்குள்ள ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அதே நாளில் சுமார் 500 காவல்துறையினர் அப்பகுதியில் கொடி அணிவகுப்பும் நடத்தியுள்ளனர். மேலும் இது போன்று பீம் நகர், குபர் சொசைடி, நலந்தா சொசைடி, ஆதர்ஷ் சொசைடி, மற்றும் இன்னும் பல பகுதிகளில் வாழும் தலித் மக்களை காவல்துறையினர் தாக்குவது அன்றாடம் வழக்கமாகிவிட்டது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக கொபர்டி பகுதியில் தலித் சமூகத்தினர் சிலர் மராத்தா இன பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இதனை எதிர்த்து மராத்தா சமூக மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தலித் சமூக மக்களும் இதனை கண்டிக்க தவறவில்லை. இந்த கொடூரச் செயலுக்கு எதிரான போராட்டங்களில் தாங்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

ஆனால் சில நாட்களிலேயே இந்த போராட்டங்கள் திசை மாறி ஒட்டுமொத்த தலித்களுக்கு எதிராக மாறியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களுடன் காவல்துறையினரும் இணைந்து வீடுகளை சேதப்படுத்துவதிலும் தலித் சமூகத்தினரை தாக்குவதிலும் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யாமல் பாதிக்கபப்டும் தலித் சமூக மக்கள் வாழும் பகுதிகளில் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் காவல்துறை இத்தகைய அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர பா.ஜ.க அரசின் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸிற்கு தலித் சமூகத்தினரின் கூட்டமைப்பு சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தலித்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் அதில் காவல்துறையின் கூட்டு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்காமல் அவர்களை அவர்களது வீட்டில் வைத்தே காவல்துறை தாக்குவதும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆளும் பா.ஜ.க. மற்றும் சிவ சேனா கட்சியினர் இந்த வன்முறையை இன்னும் பெரிது படுத்தி வருகின்றனர் என்றும் சில அரசியல்வாதிகள் இந்த வன்முறைகளுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் வாழும் தலித் சமூகத்தினருக்கு ஆளும் பா.ஜ.க. சிவ சேனா அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தலித்களை தாக்கி அராஜகம் புரிந்த காவல்துறைதினரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் திட்டமிட்டு தலித் மக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் மராத்தா இனத்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் இந்த வன்முறையை அரசியலாக்கி ஆதாயம் பெற நினைப்பவர்களையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் சர்வதேச தலித்களின் குரல் அமைப்பின் யுஜீன் குலாஸ், அம்பேத்கரிய பெளத்த அமைப்புகளின் கூட்டமைப்பை சேர்ந்த சந்தோஷ் தாஸ், சாதி பாகுபாட்டிற்கு எதிரான கூட்டணியின் ரவி குமார், தலித் ஒற்றுமை இயக்கத்தின் மீனா வர்மா, தெற்காசிய ஒற்றுமை இயக்கத்தின் சுவன்வேதன் அப்ரந்தி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை இந்தியாவில் திரையிடக்கூடாது என்று சிவ சேனா கூறியதையும், மகாராஷ்டிரா அரசு சிவ சேனாவுடன் இந்திப் படங்களை வெளியிடுவது குறித்து பேச்சு வார்த்தை செய்து கொண்டதையும் செய்திகளாக வெளியிட்ட பல முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியை கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கலவரம் / பாதிப்பின் சில புகைப்படங்கள்

dalith - maratha violence pasted-image-0-2 pasted-image-0-3 pasted-image-0-4 pasted-image-0-5 pasted-image-0-6 pasted-image-0-7 pasted-image-0-8 pasted-image-0-9 pasted-image-0-10 pasted-image-0-11 pasted-image-0-12 pasted-image-0-13 pasted-image-0

Comments are closed.