வறட்சியில் வாடும் மஹாராஷ்டிராவில் பா.ஜ.க மந்திரியின் ஹெலிபேடுக்கு 10000 லிட்டர் தண்ணீர்

0

கடும் வெயில் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் பகுதி கடும் வறட்சியில் வாடுகிறது. பொதுமக்கள் குடிப்பதற்கு கூட நீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி வறட்சி நிலையை பார்வையிட மஹாராஷ்டிரா வேளாண்துறை அமைச்சர் ஏக்நாத் கத்சே ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். மஹாராஷ்டிர அரசில் தேவேந்திர ஃபத்னாவிசுக்கு அடுத்தபடியாக கருதப்படும் இவரின் ஹெலிகாப்டர் வந்து இறங்க தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. அதற்காக 10000 லிட்டர் தண்ணீரை வீணடித்துள்ளனர். இது குடிநீருக்கு கூட கஷ்டப்படும் அப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தனது ஹெலிபேடுக்கு பயன்படுத்தப்பட்ட நீர் குடிநீர் அல்ல என்றும் அருகில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வரும் கழிவு நீர் என்றும் மறுத்துள்ளார் கத்சே. மேலும் அந்த சுத்திகரிப்பு ஆலை பழைய குடிநீர் திட்டத்தின் கீழ் வருகிறது என்றும் அதனை புதுப்பித்து மீண்டும் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் இப்பகுதி மக்களுக்கு அதிர்சியளிக்கவே வந்ததாகவும் ஆனால் இதை வைத்து சர்ச்சைகள் கிளப்பப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் சனிக்கிழமையில் இருந்து லத்தூர் மக்களின் தண்ணீர் பிரச்சனை பெருமளவு குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் இந்த ஹெலிபேடுக்கான வேலை வியாழன் மாலை 3 மணியளவில் துவங்கியது என்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைந்தது என்றும் கத்சே வருவதற்கு முன் பல டேங்கர் லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றபட்டதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மஹாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில்  “கத்சே விற்கான தண்ணீர் வீணடிப்பதில் இருந்து மாநில அரசு மக்கள் பிரச்சனையில் எவ்வளவு அக்கறையுடன் நடந்துகொள்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் தேவைப்படும் இந்த வேளையில் சாலைவழியாக செல்லும் வசதி இருந்தும் ஹெலிகாப்டரில் சென்று தண்ணீரை வீணடிக்கும் குற்றத்தினை கத்சே செய்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.