மாட்டிறைச்சிக்காக மனிதர்களை கொலை செய்யும் பாசிசம்

0

 

 உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி அருகே உள்ள கிராமம் பிசோதா. இங்கு 50வயதான முஹம்மது அக்லாக் கடந்த செப்டம்பர் 28 அன்று இரவு கொல்லப்பட்ட சம்பவம் நமது நாடு எவ்வளவு தூரம் மத வெறியின் உச்ச நிலையை கடந்து செல்கிறது என்பதற்கான அண்மைய உதாரணமாகும். பசுவை அறுத்து சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் இரவு பத்து மணிக்கு அக்லாக்கின் வீட்டை சுற்றி வளைத்து அவரை அடித்துக் கொலைச் செய்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த அக்லாக்கின் மகன் தானிஷ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இந்த வதந்தி அருகில் உள்ள கோயிலில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அக்லாக்கின் வீடு தாக்கப்பட்டது. ஆனால், தங்களது வீட்டில் இருந்தது ஆட்டிறைச்சியே என்றும் பசு இறைச்சியை சாப்பிடவோ, பாதுகாக்கவோ இல்லை என்றும் அக்லாக்கின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். “நாங்கள் சாப்பிட்டது மாட்டிறைச்சி இல்லையென்றால் எனது தந்தையை திருப்பி தர முடியுமா?” என்று அக்லாகின் மகள் எழுப்பும் கேள்வியில் அடங்கியுள்ள வேதனையை மனித மனம் படைத்தவர்களால் நிச்சயமாக புரிந்து கொள்ள இயலும். ஆனால், இவ்வளவு கொடூரமாக ஒருவர் கொல்லப்பட்ட பிறகும் அவர் சாப்பிட்டது மாட்டிறைச்சியா என்பதை கண்டறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பிய அகிலேஷ் யாதவ் அரசின் கீழ் இயங்கும் காவல்துறையின் நடவடிக்கையை எவ்வாறு புரிந்து கொள்வது? அக்லாக் கொலையை விட, இருந்தது ஆட்டிறைச்சியா அல்லது மாட்டிறைச்சியா என்பதில்தான் தற்போது முழு கவனமும் இருக்கிறது.

இந்தியாவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்று சிலிக்கான் வேலியில் சி.இ.ஓ.க்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வகையில் உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கும் போதுதான் தலைநகருக்கு மிக அருசில் உள்ள கிராமத்தில் இந்த அநியாய படுகொலையை பாசிச கல் நெஞ்சக்காரர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை காரில் சக்கரங்களில் சிக்கிய நாய் குட்டியின் நிலையோடு ஒப்பிட்டவர் அக்லாக்கின் படுகொலை குறித்து வாய் திறக்கவில்லை. அமைச்சரவை சகாகளும் பா.ஜ.க. தலைவர்களும் படுகொலை செய்தவர்களை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். மாட்டிறைச்சி தொடர்பாக இத்தகையதொரு ஈவு, இரக்கமில்லாத வெறித்தனத்தை உருவாக்கியவர்கள் மோடி உள்ளிட்ட சங்பரிவார்களே. பச்சைக் காய்கறிகளின் மகத்துவதை பரப்புரை செய்து, மனிதர்களை பகிரங்கமாக கொலை செய்யும் சங்பரிவார் சித்தாந்தத்தின் இரைகளில் முஹம்மது அக்லாக்கும் இணைந்துள்ளார்.

பசுவதை தடை சட்டம் தற்போது சில மாநிலங்களில் அமலில் உள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளுடன் மோதும் இச்சட்டம் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத பா.ஜ.க. அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில்தான் முனைப்புடன் உள்ளன.

‘அனைவருக்கும் முன்னேற்றம்’ என்று நீட்டி முழங்கும் பிரதமர் மோடி இத்தகைய பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து மௌனம் சாதிக்கிறார். அரசாங்கத்தால் ஸ்பான்சர் செய்யப்படும் தீவிரவாதம்தான் தற்போது நடைபெறும் சம்பவங்களா என்ற சந்தேகத்தை மோடியின் கொடூர மௌனம் உறுதிப்பதுகிறது.

விலங்குகளுக்காக மனிதர்களை கொலை செய்யும் இந்த கயவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டால், அந்த விலங்குகள் கூட எதிர்ப்புக்குரல் எழுப்பும்.

(அக்டோபர் 2015 இதழின் தலையங்கம்)

Comments are closed.