மாட்டிறைச்சி பரிமாறுவதாகக் கூறி ஜெய்பூர் உணவு விடுதி பசு பாதுகாவலர்களால் முற்றுகை

0

கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு நேரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஹயாத் ரப்பானி உணவு விடுதி முன்பு காவல் துறையினர் வெகுவாக குவிக்கப்பட்டனர். இதற்கு காரணம் அந்த உணவு விடுதியில் மாட்டிறைச்சி பரிமாரபடுகிறது என்று பரப்பப்பட்ட வதந்தியும் அதனையடுத்து அங்கு கூடிய பசு பாதுகாவலர் கும்பலும்..

தங்களை பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான நபர்களை கொண்ட கும்பல் அந்த உணவு விடுதியில் மாட்டிறைச்சி பரிமாறுவதாக கூறி ஆறு மணி நேரமாக அந்த உணவு விடுதியை முற்றுகையிட்டுள்ளது. முற்றுகையில் ஈடுபட்டவர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்றும் “நரேந்திர மோடி ஜிந்தாபாத்” என்றும் கூச்சலிட்டு கொண்டு இருந்துள்ளனர்.

இவர்களுடன் அப்பகுதி கவுன்சிலர் நிர்மலா ஷர்மா, ஜெயூர் முனிசிபல் கார்பரேஷன் அதிகாரிகளிடம் அந்த உணவு விடுதியை மூடி சீல் வைக்குமாறு கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தின் காரணமாக போராட்டகாரர்களுள் ஒருவரான சுக்திப் சிங் கூறுகையில், “மதியம், அப்பகுதி மக்கள் இந்த உணவு விடுதியின் ஊழியர்கள் மாட்டிறைச்சி போன்ற கழிவுகளை அப்பகுதியில் உள்ள குப்பையில் கொட்டுவதை கண்டுள்ளனர். இது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.” என்று கூறியுள்ளார். ஆனால் இவர் அப்பகுதியை சேர்ந்தவர் அல்ல என்றும் ராஜஸ்தான் பல்கலைகழகத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. இவரைப் போன்றே இந்த கும்பலில் பலரும் வேற்று பகுதிகளை சேர்ந்தவர்கள். இன்னும் இவர்களில் எவரும் அங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதை கண்ணில் கண்டவர்கள் அல்ல. எவரோ சொல்லக்கேட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இன்னும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரோ, தங்களின் இந்த கூற்றுக்கு ஆதாரமாக அந்த உணவு விடுதியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கரம்வீர் என்ற ஒருவர் குறிப்பிடுகையில்,’அந்த உணவு விடுதியின் பெயரைப் பார்த்தாலே தெரியவில்லையா அவர்கள் இங்கு மாட்டிறைச்சி தான் பரிமாறுகின்றனர் என்று” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கரம்வீரும் அப்பகுதியை சேர்ந்தவர் அல்ல என்று தெரியவந்துள்ளது.

இந்த உணவு விடுதியில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ள பூங்கா ஒன்றில், “மகிலா காவ்ரக்ஷா தள்” அமைப்பின் தேசிய தலைவரான சாத்வி கமல் திதி என்பவர் அங்கு கூடியிருந்த மக்களிடம் தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி உரையாற்றியுள்ளார். அப்போது “நான் பசுவிற்காக எனது உயிரை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன். உங்களுடன் எந்த ஒரு போராட்டத்திலும் பங்கெடுக்கவோ இந்த உணவு விடுதியினருக்கு பாடம் கற்பிக்கவோ நான் தயாராக உள்ளேன். ஆனால் இந்தப் பகுதி மக்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். எந்நிலையிலும் அவர்கள் பின்வாங்க கூடாது.” என்று அவர் கூறியுள்ளார். அவருடன் கூட்டத்தில் இருந்த வெகு சிலரே இதனை ஏற்றுக்கொள்ள கூட்டத்தில் இருந்த மற்றொரு இளைஞரோ ஒரு சில தொலைபேசி அழைப்புகளில் நான் வேறு எங்கிருந்தும் 200 பேரை கூட்டிவிடுவேன். எண்ணிக்கையை பற்றிய கவலை வேண்டாம் என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக தானும் தனது நண்பர்களும் தான் திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை தாக்கியவர்கள்” என்று கூறியுள்ளார்.

அப்பகுதியில் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்க, அப்பகுதியில் கூடி விடுதி மீது சட்டவிரோதமாக தாக்குதல் நடத்த திட்டமிடும்  கும்பல் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்காத காவல்துறை, குறிப்பிட்ட உணவு விடுதியில் இருந்து இறைச்சி மாதிரிகளை எடுத்து சோதனைக்காக ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, ‘காவல்துறை இணை கமிஷனர் அசோக் குப்தா, “அந்த உணவு விடுதியில் இருந்து இறைச்சி மாதிரிகளை எடுத்துள்ளோம். அவை ஆய்வுக்கூடங்களுக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார். மேலும் இந்த விடுதியில் உள்ள இருவரை இது தொடர்பாக கைது செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து துணை கமிஷனர் நீரஜ் பதக் கூறுகையில், “இந்த விடுதியின் மேலாளர் மற்றும் குப்பைகளை கொட்டிய இருவரை CRPC பிரவு 151 இன் கீழ் கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கூற்று வேறு மாதிரியாக உள்ளது. இந்த சம்பவத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அப்துல் ரெஹ்மான், தனது உறவினருக்கு சொந்தமான இந்த உணவு விடுதிக்கு சில வேலைகளின் காரணமாக வந்ததாகவும் அங்கு தன்னை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தான் அவர்களிடம் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர்கள் தன்னை நம்புவதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் மனித உரிமை ஆர்வலர்களின் வற்புறுத்துதலின் பெயரில் காவல்துறையினர் அவரை விடுதலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அந்த உணவு விடுதி முற்றுகையிடப்பட்டது குறித்தும் தங்களது கவலைகளை தெரிவித்துள்ளனர். “ஒரு போலியான புரளி இத்தகைய கும்பலை சேர்க்குமானால் இது நிச்சயம் கவலை கொள்ளக்கூடிய ஒரு விஷயம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டிலும் மாநிலத்திலும் காவி மயமாதல் அதிகரிக்கும் போது இது போன்ற மதவாதத்தை தூண்டும் விளிம்பு நிலை சக்திகளுக்கு எதிராக நாம் அணி திரள வேண்டிய நேரம் இது என்று People’s Union for Civil Liberties அமைப்பை சேர்ந்த கவிதா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தனக்கு இந்த பிரச்சனை குறித்து அந்த விடுதி உரிமையாளரின் குடும்பத்தில் இருந்து அழைப்பு வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த முற்றுகைக்கு எதிராக முஸ்லிம் இயக்கங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். “குப்பையை கொட்டிய ஒரு செயலுக்கு மதவாத சாயம் பூசுவது வருந்தத்தக்க ஒரு செயல். இந்த விடுதியில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது என்பது உணமையல்ல. இது அப்பகுதியில் அமைதியை குலைக்க நடக்கும் முயற்சி” என்று ராஜஸ்தான் ஜாம்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் பொதுச் செயலாளர் முஹம்மத் நஜிமுதீன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. இது போன்று 2015 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி பிர்லோகா கிராமத்தில் அப்துல் கஃபார் குரேஷி என்ற 60 வயது முதியவர், விருந்து ஒன்றிற்காக 200 பசுக்களை முஸ்லிம்கள் கொன்றனர் என்ற வதந்தியின் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது சமூக வலைதளங்களில் பரவிய இந்த செய்தியின் காரணமாக குமாரி கிராமத்தில் உள்ள ஒரு மைதானத்தில் கூடிய ஆயிரக்கணக்கானோர் குரேஷியை அவரது இந்து நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் இரும்பு கம்பிகளால் அடித்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.