மாட்டிறைச்சி வன்முறை:மத்திய பிரதேசத்தில் இரண்டு முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல்

0

மத்திய பிரதேசத்தில் மந்த்சவூர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டி காவல்துறையினர் கண்முன்பே இரண்டு முஸ்லிம் பெண்களை பசு பாதுகாவலர் கும்பல் அடித்து உதைத்துள்ளது.

வீடியோவில் பதிவான இந்த தாக்குதலை இருமனதாக அங்கிருந்த காவல்துறையினர் தடுத்தாக தெரிகிறது. மேலும் முன்னதாகவே காவல்துறையினருக்கு அந்த பெண்கள் மாட்டிறைச்சி வைத்திருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்களை கைது செய்யவே காவலர்கள் அங்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அரை மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் ஒரு பெண் நிலைகுலைந்து விழுந்துள்ளார். அதன் பிறகே காவல்துறையினர் அந்த இரு பெண்களையும் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு பெண்களையும் தாக்கிய கும்பல் “காவ் மாதாகி ஜே” என்று கோஷம் போட்ட வன்னம் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 30 கிலோ இறைச்சி எருமை மாட்டின் இறைச்சி என்றும் பசுவின் இறைச்சி அல்ல என்றும் அப்பகுதி மருத்துவர் தெரிவித்துள்ளார். இருந்தும் இறைச்சி விற்க அந்த இரு பெண்களிடம் உரிமம் இல்லாததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரையும் தாக்கிய கும்பல் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் ராஜிய சபாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பா.ஜ.கவின் முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேள்வி எழுப்பிய மாயாவதி, பசு பாதுகாப்பு என்கிற பெயரில் ஏன் முஸ்லிம்களும் தலித்களும் துன்புற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “உங்கள் சமுதாயத்தை சார்ந்த பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்க்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். பசு பாதுகாப்பு என்கிற பெயரில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத வெட்கக்கேடு” என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்கிற போர்வையில் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

Comments are closed.