மானிய சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, விமான எரிபொருள் விலை 4% அதிகரிப்பு

0

சமையல் எரிவாயு விலையை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை அடுத்து மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எழு ரூபாய் அதிகரித்துள்ளது மோடி அரசு.

டில்லியில் 479.77 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 14.2கிலோ மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 487.18 ரூபாயாக விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எண்ணெய்வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு 4 ரூபாய் உயர்த்த வேண்டும் என்றும் இதன் மூலம் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து மானியங்களையும் நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1 இல் ஒரு சிலிண்டருக்கு 2.31 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. கடந்தவருடம் ஜூலை மாதத்தில் 2 ரூபாய் அதிகரித்ததில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 68 ரூபாய்கள் அதிகரித்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்பரேஷன்,BPCL, HPCL  ஆகிய எண்ணெய் நிறுவனங்களிடம் 14.2கிலோ மானிய விலை எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதம் 2 ரூபாய் உயர்த்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் தற்போது இந்தத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது பாஜக அரசு,

இத்துடன் விமான எரிபொருளின் விலையும் 4% அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு கிலோ லிட்டர் 48,110 ரூபாய்களுக்கு விற்கப்பட்டு வந்த எரிபொருளின் விலை தற்போது 50,020 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைமுறை படுத்தப்பட்ட 2.3% விலை உயர்விற்குப் பிறகான விலையாகும்.

பொது விநியோக முறைப்படி வழங்கப்படும் மண்ணெண்ணெய்யின் விலையும் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் அற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்ட டில்லியில் அதன் விலை தற்போது லிட்டருக்கு 22.27 ரூபாய்கள் ஆகும். மும்பையில் இதன் விலை 22 ரூபாய். 2016 ஜூலை மாதம் மும்பையில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு 15.02 ரூபாய்களுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொத்தம் 18.11 கோடி பேர் மானிய விலையில் சமையல் எரிவாயு பெற்று வருகின்றனர். இதில் பிரதமரின் உஜ்வாளா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த வருடம் இலவசமாக இணைப்பு வழங்கப்பட்ட 2.6 கோடி ஏழை பெண்களும் அடக்கம்.

Comments are closed.