மாயமாகிய அமித்ஷாவின் சொத்து மதிப்பு மற்றும் ஸ்மிர்த்தி இராணியின் பட்டப்படிப்பு குறித்த செய்திகள்

0

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தளத்தின் அலஹாபாத் பதிப்பில் கடந்த ஐந்து வருடங்களில் பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300% மடங்கு உயர்வடைந்துள்ளது என்று ஒரு செய்தி வெளியானது.  கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த செய்தி அது வெளிவந்த சில மணி நேரங்களிலேயே அந்த செய்தி நிறுவனத்தின் இணையதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  இந்த செய்தி நீக்கப்பட்டது குறித்து எந்த ஒரு தகவலும் வாசகர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் இது ஏன் நீக்கப்பட்டது என்பது தொடர்பான கேள்விகளுக்கு எந்த ஆசிரியரும் பதிலளிக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது

கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது அமித்ஷா தனது சொத்து விபரங்கள் தொடர்பாக சமர்ப்பித்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள சொத்து தற்போது 2017 ஆம் ஆண்டில் 300 மடங்காக அதிகரித்துள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜவுளித்துறை மற்றும் தகவல் தொலைதொடர்பு அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி தனது வேட்புமனு தாக்கலில், தான் தனது பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று கூறியுள்ளதும் செய்திகளில் வெளியானது.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அவர் போட்டியிட்ட அமேதி தொகுதி தேர்தலின் வேட்புமனு தாக்கலில் தனது கல்வித்தகுதி குறித்து  ‘B. Com. Part 1, School of Correspondence, Delhi University, 1994’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் 2011 ராஜிய சபா தேர்தல் வேட்புமனு தாக்களிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2004 ஆம் ஆண்டு சாந்தினி சவுக் பகுதியில் இருந்து அவர் போட்டியிட்ட மக்களை தேர்தலின் போது தனது கல்வி தகுதி குறித்து அவர் ‘BA. 1996. Delhi University. School of Correspondence’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்களை கொண்ட செய்திகள் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திதளத்துடன் நவ்பாரத் டைம்ஸ், எகொனாமிக்ஸ் டைம்ஸ் ஆகிய செய்தி தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட இந்த தளங்களில் இருந்தும் இந்த செய்தி நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இச்செய்தியை தனது அச்சுப் பதிப்பில் வெளியிட்ட DNA செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்தும் இந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் DNA நிறுவனத்தின் E-Paperஇல் இந்த செய்தி காணக் கிடைக்கின்றது. கடந்த சனிக்கிழமை ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவர் அவுட்லுக் தளத்தில் இருந்து பகிர்ந்த இந்த செய்தி கூகிள் விரைவு இணைய பக்கங்களில் காணக் கிடைத்தாலும் அவுட்லுக் இந்தி இணைய பக்கத்தில் இதனை காண முடியவில்லை. இது குறித்து ஆவுட்லுக் இந்தி பதிப்பு ஆசிரியரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது தனக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஜூலை 30  ஆம் தேதி அவுட்லுக் ஆங்கில பக்கத்தில் இது போன்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது நடைபெற்றது போல வாசகர்களுக்கு எந்த ஒரு விளக்கமோ அறிவிப்போ தராமல் செய்திகளை நீக்குவது டைம்ஸ் குழுமத்திற்கு புதிதல்ல என்று கூறப்படுகிறது. முன்னதாக உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா மூன்று இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது குறித்த செய்தியும் இது போன்று நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

மேலும் ஸ்மிர்த்தி இராணி எம்.பி. நிதியில் மோசடி செய்துள்ளார் என்று குற்றம் சாட்டிய பொதுநல வழக்கு தொடர்பான செய்தியை கடந்த வாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா தங்களது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளதை தி வயர் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

இது போன்றே கடந்த வாரம் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் இருந்து இந்தியா மீது சீனா தரும் அழுத்தத்தை மோடி கையாளும் விதம் குறித்து சுஷில் ஆரோன் எழுதிய செய்தி நீக்கப்பட்டுள்ளது. இதனால் வாசகர்களின் கடும் அதிருப்தியடைந்த காரணத்தால் இந்த செய்தி மீண்டும் வெளியிடப்பட்டது. மக்களை பிளவுபடுத்தி வன்முறையை தூண்டும் போலிச் செய்திகள் மீது போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நிலையில் ஆளும் கட்சியின் அவலத்தை உணர்த்தும் உண்மைச் செய்திகளை வெளியிடுபவர்கள் மீது அழுத்தம் தரப்படுகிறதா என்ற எண்ணம் இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Comments are closed.