மாறுவேடப் புலனாய்வில் மாட்டிக்கொண்ட ஊடகங்கள்

0

மாறுவேடப் புலனாய்வில் மாட்டிக்கொண்ட ஊடகங்கள்

ஊடக உலகில் மிகுந்த மரியாதைக்கு உரியதாகப் புழங்குகிற சொல் ஒன்று உண்டு. அந்தச் சொல் அவ்வப்போது விவாதத்திற்கு உள்ளாவதும் உண்டு. ஆனால் அது ஒரு கவர்ச்சிகரமான, புனிதப்படுத்தப்பட்டுவிட்ட சொல்லேயன்றி வேறொன்றுமில்லை. அதுதான் ‘நடுநிலை’ என்ற சொல். அந்தச் சொல்லில் புனிதமேதும் இல்லை என்று மெய்ப்பிப்பது போல வந்திருப்பதுதான், இணையதள ஊடகமாகிய ‘கோப்ரா போஸ்ட்’ வெளியிட்டுள்ள புலனாய்வுத் தொகுப்பு.

பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ, இணையப் பதிப்புகளோ – பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் – தங்களை நடுநிலையானவையாக அறிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகின்றன. அவ்வாறே இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றன. ஊடக நிறுவனங்கள் மட்டுமல்ல, அவற்றின் வாசகர்களாகிய, நேயர்களாகிய பொதுமக்களும் அதை எதிர்பார்க்கிறார்கள். ஏற்பதற்கு கடினமான ஒரு உண்மை என்னவெனில், எந்த ஊடகமும் நடுநிலையாக இல்லை! அதை விட, செரித்துக்கொள்வதற்குச் சிரமம் தருகிற சிந்தனை என்னவெனில், எந்த ஊடகமும் நடுநிலையாக இருக்கத் தேவையில்லை!

நடுநிலை என்பது யாதெனின்

நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கு நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். அந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதி, விசாரணை முடிவடைகிற வரையில்தான் நடுநிலையாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டுகிறவர், குற்றம் சாட்டப்படுகிறவர் என இரு தரப்பிற்கும் சம வாய்ப்பளித்து அவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டும். விசாரணைக் கட்டம் முடிந்து தீர்ப்புக் கட்டத்திற்கு வருகிறபோது, அங்கே நீதிபதி நடுநிலையிலிருந்து மாறியாக வேண்டும். எந்தத் தரப்பின் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறாரோ, அந்தத் தரப்பிற்கு ஆதரவாகவே தீர்ப்பளிக்க வேண்டும். குற்றம் நடந்திருந்தால் குற்றவாளிக்குத் தண்டனையளித்தும், குற்றம் நடக்கவில்லை என்றால் குற்றம் சாட்டியவருக்குத் தண்டனையளித்தும் தீர்ப்பு அமைய வேண்டும். அப்போது ‘நடுநிலை’ என்று சொல்லி, குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் சாட்டியவர் இருவரையுமே சிறைக்கு அனுப்பத் தீர்ப்பளிப்பாரேயானால், அந்த நீதிபதியை எங்கே அனுப்புவது என்று நாம் பேசத் தொடங்கிவிடுவோம்தானே?

அதே நெறியோடுதான் ஊடகங்களும் இயங்க வேண்டும். ஒரு நிகழ்வு பற்றித் தோண்டித் துருவி விசாரிக்கிறபோது நிச்சயமாக நடுநிலையாக நின்றுதான் செயல்பட வேண்டும். அந்த நிகழ்வோடு தொடர்புடைய எல்லாத் தரப்பினரையும் சந்தித்து, அவர்களது கருத்துகளையும் வாதங்களையும் செவிமடுக்க வேண்டும். அதை வெளியிடுகிறபோது, எந்தத் தரப்பில் நியாயம் இருக்கிறது என்று ஒரு ஊடக நிறுவன ஆசிரியர், துணையாசிரியர்கள், செய்தியாளர்கள் கொண்ட ஆசிரியக்குழு கருதுகிறதோ, அந்த நியாயத்தையே முன்நிறுத்த வேண்டும். அந்தத் தரப்பினர் அப்படிச் சொல்கிறார்கள், இந்தத் தரப்பினர் இப்படிச் சொல்கிறார்கள் என்று இரு தரப்பினர் சொல்வதையும் சமமாக வெளியிட்டு, எந்தத் தரப்பில் நியாயம் என்று முடிவு செய்வதை வாசகர்களிடம் விடுவது நடுநிலை அல்ல.

இந்தியாவில் அரசு நடத்துகிற தொலைக்காட்சி (தூர்தர்ஷன்,- தமிழகத்தில் பொதிகை), வானொலி ஆகிய ஊடகங்கள் பற்றி நமக்குத் தெரியும். ஆட்சியாளர்களது நடவடிக்கைகள்தான் அவற்றில் முன்னிலைப்படுத்தப்படுமேயன்றி, ஒருபோதும் அவற்றில் எதிர்க்கட்சிகளோ பொதுமக்களோ நடத்துகிற போராட்டங்களுக்கு, அவை எவ்வளவு வலிமையான போராட்டங்களானாலும் -முதன்மை நிலை அளிக்கப்பட மாட்டாது. அந்த அரசு நிறுவனங்களும் தங்களை நடுநிலையான ஊடகங்களாகவே சொல்லிக்கொள்வது வேடிக்கை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.