மாற்றத்திற்கான தொடக்கமா?

0

 – ரியாஸ் 

தேசத்தின் மனநிலை என்னவோ, அதுதான் டெல்லியின் மனநிலையும்’ டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி கூறிய வார்த்தைகள் இவை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிப்ரவரி 10 அன்று எதற்காக இப்படியொரு வார்த்தையை கூறினோம் என நிச்சயம் நொந்து இருப்பார் மோடி.

மோடி மாத்திரம் ஐந்து இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், மொத்தத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற இடங்களோ வெறும் மூன்று.

முடிவுகள் வெளியான போது மோடியை விட அதிகம் தலையை தொங்கப் போட்டவர் அமித் ஷா. பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர். அன்றுதான் இவருடைய மகனின் திருமணம் நடைபெற்றது. எதற்காக இந்த தினத்தை திருமணத்திற்காக தேர்வு செய்தோம் என்று இவரும் நொந்து இருப்பார். ‘வெற்றிக் கூட்டணி’ என்று மார்தட்டி வந்த இந்த கூட்டணியின் படுதோல்வியை கண்டு பாரதிய ஜனதாவில் உள்ள பலர் ரகசியமாக சந்தோஷம் கொண்டனர் என்பது சுவாரஸ்யமான தனிக்கதை.

பா.ஜ.க.வின் தோல்வி முடிவுகள் வெளியான நேரத்தில் இருந்து இணையத்தில் கருத்துகள் வேகமாக பதிவு பெற ஆரம்பித்தன. இதுவரை சமூக வலைதளங்களை தங்கள் ஏகபோக உரிமையாக வைத்திருந்த சங்பரிவார்கள் இம்முறை ஸ்தம்பித்து நின்றனர். செய்வதறியாது திகைத்தனர். தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்ற இறுமாப்பில் இருந்த பா.ஜ.க.வினர் இவ்வளவு சீக்கிரம் தோல்வியை, அதுவும் படுதோல்வியை சந்தித்தது எப்படி?

டெல்லி சட்டமன்றத்திற்கு 2013 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. ஆனால், ஆட்சி அமைத்த 49 நாட்களில் லோக்பால் மசோதா குறித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். வேறு யாரும் ஆட்சி அமைக்க கூடிய சூழல் இல்லாததால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

அர்விந்த் கெஜ்ரிவாலின் நிர்வாக குறைபாடுகளை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்ட பா.ஜ.க. மோடியின் பிம்பத்தை பயன்படுத்தி எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால், வாக்காளர்கள் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது என்பதை இந்த தேர்தல் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியை பெற்றது. தாங்கள் கூட இப்படியொரு வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்களே தெரிவித்தனர். அத்துடன் 54.3 சதவீத வாக்குகளையும் பெற்றது அக்கட்சி. சுதந்திர இந்தியாவில் ஒரு கட்சி இத்தகைய வெற்றியை பெற்றிருப்பது இதுவே முதல் முறை (சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் இதற்கு விதிவிலக்கு).

2

பா.ஜ.க.விற்கு வெறும் மூன்று இடங்களே  கிடைத்தன. முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிரண் பேடி, கிருஷ்ண சாகர் தொகுதியில் தோல்வியை தழுவினார். பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ் வர்தன் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்ற தொகுதி இது என்பது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எழுபது தொகுதிகளில் போட்டியிட்ட அதன் வேட்பாளர்கள் 63 தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். ஆனால், அதை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பா.ஜ.க. தோற்றதை மிகப்பெரும் சந்தோஷமாக பேசி வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் பலத்தை நம்பியுள்ள கட்சிகள். பிரச்சாரத்தின் போது இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே தென்பட்டது. தொண்டர் பலம் இல்லாததுதான் காங்கிரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு. நேர்த்தியான பிரச்சார முறை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் ஆதரவு ஆகியவை ஆம் ஆத்மியின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக கூறப்பட்டன. ஆனால், வெற்றி பெற்றவனின் பலத்தை போன்று தோற்றவனின் பலஹீனங்களும் வெற்றிக்கு காரணமாக அமைகின்றன என்பதை மறந்துவிட முடியாது.

‘இந்த தேர்தலை மோடி அரசாங்கம் மீதான வாக்களிப்பாக கருதக்கூடாது’ என்று பா.ஜ.க. தலைவர்கள் பலர் கருத்து கூறினார். ஒரு மாநிலத்தில் நடைபெறும் தேர்தலை ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிபலிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மைதான் என்றாலும் டெல்லி தேர்தலை தேசிய தேர்தல் போல் மாற்றியவர்கள் பா.ஜ.க.வினர்தான். தொட்டவற்றை எல்லாம் தங்கமாக மாற்றும் வல்லமை கொண்டதாக சித்தரிக்கப்பட்ட மன்னன் மிடாஸ். தங்கள் கட்சியின் மிடாஸாக  பிரதமர் மோடியை பா.ஜ.க.வினர் முன்னிறுத்தினர். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற மிகப்பெரும் ஆரவாரம் இவ்வளவு சீக்கிரம் அடங்கிப்போகும் என்று எவரும் நினைக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து அதிகார மமதையும் ஆணவ ஆட்டமும் ஆடினர் பா.ஜ.க.வினர். அந்த ஆட்டத்தை நிறுத்தியுள்ளது டெல்லி தேர்தல். இந்த ஆட்டத்தை முன்னின்று ஆடியவர்கள் மோடியும் அமித் ஷாவும். தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பை முழுமையாகக் கொண்டவர் மோடி. இதனை அவர் பிரச்சாரத்திலும் வெளிப்படுத்தினார். தனிப்பெரும்பான்மையை நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுவிட்டதால், தான் என்ன பேசினாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்தார் மோடி.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து தனது தாக்குதலை மேற்கொண்டார். அவரை நக்ஸல்களுடன் ஒப்பிட்டு பேசினார். கெஜ்ரிவால் காட்டிற்கு சென்று வாழ வேண்டும் என்று கூறினார். தான் ஒரு அதிர்ஷ்டக்காரன் என்பதால் மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தில் பேசினார்.

மத்திய அரசாங்கத்துடன் ஒத்துப்போகும் அரசாங்கம் டெல்லியில் அவசியம் என்று கூறியவர் அத்துடன் நிற்கவில்லை. பா.ஜ.க. டெல்லியில் வெற்றி பெற்றால் தன் மீதான அச்சத்தின் காரணமாக அவர்கள் ஒழுங்காக செயல்படுவார்கள் என்றும் கூறினார். தன்னை ஒரு ரிங் மாஸ்டராகவே காட்டிக் கொண்டார் மோடி.

தனது எட்டுமாத கால ஆட்சியின் சாதனைகளை அவர் எங்கும் கூறவில்லை. சாதனை என்று ஏதாவது இருந்தால்தானே கூறுவார். தான் ஒரு பிரதமர் என்பதை மோடி அடிக்கடி மறந்துவிடுகிறார். தன்னை ஒரு பிரச்சார நாயகனாகவே அவர் இன்னும் நினைத்துக் கொள்கிறார். ஆனால், மக்கள் அந்தளவிற்கு மறதியாளர்கள் அல்ல. எட்டுமாத கால ஆட்சியை நன்றாகவே உற்று கவனித்து வருகின்றனர்.

மோடி ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்பி பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த டெல்லி மக்கள் அப்படி எந்த ஆறும் ஓடவில்லை என்பதோடு இருக்கும் ஆற்றையும் இவர்கள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர் என்பதையும் கண்டனர். தன்னை ஒரு டீ விற்பனை செய்தவன் என்று விளம்பரப்படுத்தினார் மோடி. அத்தகைய சாமான்ய மக்களின் நிலையை அறிந்து இவர் ஆட்சி செய்வார் என்று எதிர்பார்த்தனர் மக்கள்.

ஆனால், அவரோ ஆடை அலங்காரத்தில் காட்டிய அக்கறையில் ஒரு பகுதியை கூட மக்கள் நலனில் காட்டவில்லை. பத்து இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடையை அணிந்து அழகு பார்த்தவர், அதை குறித்து மக்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்.

ஆணவத்தை நாடாளுமன்றத்திலும் வெளிப்படுத்தினர் பா.ஜ.க.வினர். முக்கிய சட்டங்களை நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தாமல், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றாமல் சிறப்பு சட்ட வரைவுகளை கொண்டு நிறைவேற்றினர். இவர்களின் ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். பாதிக்கப்படாத ஒரே இனம் கார்ப்பரேட் இனம் மட்டும்தான். பொதுமக்களுக்கு வாக்குறுதியையும் கார்ப்பரேட்டுகளுக்கு நலனையும் மோடி வழங்கி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடிக்கு கைகொடுத்த முக்கிய விவகாரம் கருப்பு பண விவகாரம். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் ரூபாயை டெபாசிட் செய்வோம்’ என்றார் மோடி. எட்டு மாதங்களில் யாருக்கும் எந்த பணமும் வரவில்லை. இது குறித்து கட்சி தலைவர் அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘அது தேர்தல் தந்திரம்’ என்று பதில் அளித்தார். மக்களால் தங்களை எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டார் போலும்.

தலைவர் ஆடிய ஆட்டத்தில் கூட்டாளிகளும் சேர்ந்து ஆட்டம் போட்டனர். லவ் ஜிஹாத் பொய் பிரச்சாரம், மதமாற்றம், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், கலவரங்கள் என அராஜகங்கள் நீண்டன. இது போதாதென்று அவ்வப்போது கருத்துகள் வேறு கூறி மக்களின் கோபத்தை ஆழம் பார்த்தனர் சங்பரிவார் தலைவர்கள். பெண்கள் எத்தனை குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் அளவிற்கு தரம் தாழ்ந்து போயினர்.

நாட்டில் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் போது எதுவும் கூறாமல் மௌனம் சாதித்து வருகிறார் மோடி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ‘மௌன்’ மோகன் என்று கிண்டலடித்த மோடி, பிரதமர் பதவியுடன் சேர்த்து அந்த பட்டத்தையும் வாங்கிக் கொண்டாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. அனைத்தையும் கவனித்து வந்த டெல்லி மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதில் கூறினர்.

பெற்ற தோல்வியில் இருந்து பா.ஜ.க.வினர் பாடம் படிப்பார்களா? நிலைமையை ஆராய்ந்து வருகிறோம் என்று பா.ஜ.க. மேலிடமும் தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் கூறி வருகின்றன. வெறும் வாக்குறுதிகளால் மட்டும் அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை மோடி உணர்ந்து கொள்வாரா? விஷக் கருத்துகளை பரப்பி வரும் சங்பரிவார்களை கண்டிப்பாரா?

ஒரு வழியாக பிப்ரவரி 17 அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மௌனத்தைக் கலைத்தார் மோடி. இந்தியாவில் அனைத்து மதத்தினரும் அவர்களின் மதங்களை பின்பற்ற உரிமை இருக்கிறது. மத சுதந்திரம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். யாரும் அதில் தலையிட முடியாது என்று நீட்டி முழக்கினார். வார்த்தைகளை விட செயல்கள் வலிமையாக பேசக்கூடியவை என்று மக்கள் பதில் கூறினர்.

தேர்தல் தோல்வி குறித்து கருத்து கூறிய டெல்லி பா.ஜ.க. தலைவர் சதீஷ் உபாத்யாயா, ‘வார்த்தைகளை வெளியிடும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். அவர் யாரையும் குறிப்பிடாவிட்டாலும் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு அவர் கூறிய கருத்துகள் இவை என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சங்பரிவார்கள் கவனமாக இருப்பார்களா?

“15 கோடி மக்களை மதம் மாற்றம் செய்யும் வரை ஓயமாட்டோம்” என்று தேர்தல் முடிவு வெளியான அன்றே அறிக்கை வெளியிட்டது விஷ்வ இந்து பரிஷத். பரிவார்கள் இன்னும் திருந்தவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இனியும் திருந்துவார்களா என்பதும் சந்தேகம்தான்.

தேர்தல் தோல்விக்கு மோடி காரணமில்லை என்று கூறியவர்கள் பழியை முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி மீது போட்டனர். அவரோ தோற்றது பா.ஜ.க.தான். அவர்கள்தான் நிலைமையை ஆய்ந்தறிய வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார். டெல்லி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்தான் கட்சியில் சேர்ந்தார் கிரண் பேடி. சேர்ந்தவுடன் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருடைய கூட்டங்களிலேயே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் பா.ஜ.க.வினர்.

கட்சியில் சேர்ந்ததில் இருந்து தன்னை ஒரு மோடி ரசிகையாக காட்டிக் கொண்டார். மோடியை புகழ்ந்தார். பிரச்சார கூட்டத்தில் அழுதார். ஆனால், எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை. தோல்வி குறித்து ஆராய நடத்தப்பட்ட கூட்டத்திற்கு கூட பேடி அழைக்கப்படவில்லை. அவர் கட்சியில் இருந்து விலகினாலும் அல்லது ஒதுங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

டெல்லி தேர்தல்களில் பா.ஜ.க.வின் பொறுப்புதாரியாக (பிரபாரி) நியமிக்கப்பட்டவர் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி. வழக்கமாக மற்ற கட்சிகள் தோல்வியை தழுவினால் அதற்கு பொறுப்பானவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. ஒப்பாரி வைப்பது வழக்கம். ஆனால், இந்த தோல்விக்கு பிறகு அருண் ஜேட்லி பெயரை யாரும் உச்சரிக்கவில்லை. ‘அருண் ஜேட்லி தேர்தலில் ஜெயிப்பதில்லை, தேர்தல் பொறுப்பாளியாக நியமிக்கப்பட்டாலும் அப்போதும் வெற்றியை கொடுப்பதில்லை’ என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

3

இது ஒரு புறம் இருக்க, மாபெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியை மக்கள் உற்று நோக்குவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனை அவர்களும் உணர்ந்ததாகவே தெரிகிறது. மக்கள் ஒரு மிகப்பெரும் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸ், பா.ஜ.க. என்று மாறி மாறி வாக்களிக்கும் போக்கு மாறியுள்ளது. இருவரையும் விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலையும் மாறியுள்ளது. இருவருக்கும் மாற்றமாக ஒரு வாய்ப்பு இருக்கும் போது மக்கள் அதனை வரவேற்று ஆதரவளிக்க தயாராகவே உள்ளார்கள்.

ஆணவம் அதிகாரத்திற்கு உதவாது என்பதை கெஜ்ரிவால் உணர்ந்ததாகவே தெரிகிறது. அனைத்து சமூக மக்களும் நலன் பெறும் வகையில் ஆம் ஆத்மியின் ஆட்சி இருக்க வேண்டும். பெயரில் மட்டும் இல்லாமல் உண்மையில் ஆம் ஆத்மிகளின் ஆட்சியாக, சாமான்ய மக்களின் ஆட்சியாக இருக்க வேண்டும். அதுதான் மக்களின் நம்பிக்கையை வலுக்க செய்யும். இதுபோன்ற மாற்று சக்திகளை மற்ற மாநிலங்களிலும் மக்கள் ஆதரவளிக்க தூண்டுகோலாக அமையும்.

(மார்ச் 2015 இதழில் வெளிவந்த கட்டுரை)

Comments are closed.