மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கின் பிணை மனுவை நிராகரிப்பு

0

2008 ஆம் ஆண்டு 8 பேரை கொன்று 101 பேரை காயப்படுத்திய  மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங்கின் பிணை மனுவை NIA சிறப்பு நீதிமன்றம் கடந்த செவ்வாய் கிழமை நிராகரித்துள்ளது.

இவ்வழக்கில் பிரக்யா சிங்கை முக்கிய குற்றவாளி என்று NIA குறிப்பிட்டிருந்தாலும் அவர் மீது MCOCA சட்டத்தின் கீழ் போடப்பட்ட குற்றங்களை நீக்கியிருந்தது NIA.

கடந்த மே மாதம் 13 ஆம் தேதி NIA தாக்கல் செய்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் (முதல் இரண்டு குற்றப்பத்திரிகை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை தாக்கல் செய்தது) பிரக்யா சிங்கை MCOCA  சட்டத்தின் கீழ் குற்றம் சாட்ட எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறியிருந்தது. இதனை தொடர்ந்து மே 30 ஆம் தேதி பிரக்யா சிங்கின் வழக்கறிஞர் அவர் மீதான MCOCA சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் நீக்கப்பட்டதால் அவருக்கு பிணை மனு வழங்க வேண்டும் என்று கூறி பிணை மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீது பதிலளிக்க NIA விற்கு உத்தரவிட்டு அடுத்த அமர்வை ஜூன் மாதம் 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பில் தனது மகனை இழந்த நிஷார் அஹமத் என்பவர் ஜூன் 17 ஆம் தேதி தாக்கல் செய்த தலையீட்டு மனுவில் பிரக்யா சிங்கின் பிணை மனுவிற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தார். பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்க NIA எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் நிஷார் அஹமதின் வழக்கறிஞர் வாஹாப் கான், பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்கக் கூடாது என்று கடுமையாக வாதாடினார். வாதி, பிரதிவாதிகளின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் அனைத்தையும் கணக்கில் கொண்டு பிரக்யா சிங்கின் பிணை மனுவை நிராகரித்துள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் வஹாப் கான் கருத்து தெரிவிக்கையில்,”பிரக்யாவின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம் NIA -வை கடுமையாக கண்டித்தது” என்று கூறியுள்ளார். இன்னும் “இது NIA விற்கு மாபெரும் தோல்வி. பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்கப் பட்டிருந்தால் அவரை தொடர்ந்து மற்ற அனைத்து  குற்றவாளிகளும் பிணை மனு தாக்கல் செய்திருப்பார்கள். இதனால் இந்த வழக்கு இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் நீட்டிக்கும். தற்போதே 8 வருடங்களாகிவிட்டது. குற்றவாளிக்கு பிணை வழங்குவது இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்தும். இந்த வழக்கில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் NIA வை கடுமையாக கண்டித்தது.” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக மற்றொரு வழக்கறிஞர் குறிப்பிடுகையில், நீதிமன்றம் NIA வை கண்டிக்கவில்லை என்றும் பிரக்யா சிங்கின் பிணைக்கான காரணங்கள் சரி இல்லை என்றும் அவரது பிணையை NIA எதிர்க்காத போதும் வழக்கு விசாரணையை இந்த பிணை உத்தரவு பாதிக்கும் என்பதால் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவ்வழக்கு மறைந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கக்ரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினால் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் பிரக்யா சிங்கின் இருசக்கர வாகனம் இந்த குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக அபினவ் பாரத் என்று அழைக்கப்படும் இந்துத்துவ தீவிரவாத அமைப்பை கண்டறிந்த ATS அதை சார்ந்த பிரக்யா சிங் உட்பட இராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்த லெப்டினன்ட் கர்னல் புரோஹித், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், சாமியார் சுதாகர் திவேதி ஆகியோரை கைது செய்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, பின்னர் 2011  ஏப்ரல் மாதம் இன்னும் 14 நபர்களின் பெயரை குறிப்பிட்டு மற்றொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரக்யா சிங், ரமேஷ் உபாத்யாய், பிரசாத் புரோஹித், சமீர் குல்கர்னி, ராகேஷ் தாவ்டே,சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் பிரவின் தகல்கி ஆகியோர் சிறையில் உள்ளனர்.. ஷிவ்நாராயண் கல்சரங்கா, ஷ்யாம் சாஹு, ராஜா ராஹிர்கர் மற்றும் ஜகதீஷ் மகாத்ரே ஆகியோர் பிணையில் உள்ளனர். ராமச்சந்திர கல்சரங்கா மற்றும் சந்தீப் பாங்கே ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை 2011 ஆம் ஆண்டு NIA விடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பிரக்யா சிங் அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாக கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கூறியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.