மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கை காப்பாற்ற போராடும் NIA?

0

பாஜக ஆட்சிக்கு வந்ததும் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் மீது மென்மைப்போக்கு கையாளப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாகூரை பிணையில் விடுவிக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பிரக்யா சிங்கை பிணையில் விடுவிக்க தங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் கூறியிருந்தது. தற்போது இது தொடர்பான விசாரணையின் போது மேலும் ஒரு படி மேலே சென்று மாலேகான் குண்டு வெடிப்பு சதித்திட்டங்களில் பிரக்யா சிங் ஈடுபட்டதன் ஆதாரமாக கூறப்பட்ட பதிவுகள் மற்றும் குறிப்புகள் கூட தங்களிடம் இல்லை என்று என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இந்த வழக்கை முன்னதாக விசாரித்த மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை (ஏ.டி.எஸ்.), இந்த குண்டு வெடிப்பை திட்டமிட்ட பல கூட்டங்களை வலது சாரி இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் அமைப்பு போபால், இந்தூர், ஃபரீதாபாத், தரம்கோட் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களில் நடத்தியதாகவும் அதில் பிரக்யா சிங் தாகூர் பங்குபெற்றதாகவும் தெரிவித்திருந்தது.

குண்டுவெடிப்பிற்கான சதித் திட்டங்களை 2008 ஏப்ரல் 11ஆம் தேதி போபாலில் நடைபெற்ற ரகசிய கூட்டம் ஒன்றில் பிரக்யா சிங் தாகூர் திட்டமிட்டதை தான் கேட்டதாக சாட்சி ஒருவர் தெரிவித்திருந்தார். இக்கூட்டம் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரக்யா சிங் பங்கெடுத்த முதல் சந்திப்பு என்றும் அங்கு நடைபெற்ற விஷயங்கள் அனைத்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு குற்றவாளியான சுதாகர் திவேதியின் கணினியில் பதிவு செயப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை தெரிவித்திருந்தது.

இந்த மடிக்கணினியை கைப்பற்றிய மகாராஷ்டிரா ஏ.டி.எஸ். அதன் வன்தட்டை(ஹார்ட் டிஸ்க்) கைப்பற்றி பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதில் இருந்து ஆடியோ மற்றும் வீடியோ தரவுகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

பிரக்யா சிங் தாகூரின் பிணை மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.வி.மூர் தலைமையிலான அமர்விடம் இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.ஏ.தேசாய் இந்த சந்திப்புகள் குறித்து விளக்கினார். இந்த வீடியோ பதிவுகள் மற்றும் இந்த சந்திப்பு குறித்த குறிப்புகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் கூறவே தங்களுக்கு அப்படியான தகவல்கள் ஏதும் இருப்பதே தெரியாது என்று கூறியுள்ளது என்.ஐ.ஏ.

என்.ஐ.ஏ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அணில் சிங், தங்களிடம் ஃபரீதாபாத்தில் நடைபெற்றதாக கூறப்படும் கூட்டம் தொடர்பான தகவல் மட்டுமே இருப்பதாகவும் வேறேதுவும் தங்களுக்கு தெரியாது என்றும் அப்படியேனும் தகவல்கள் இருந்திருந்தால் தங்களுக்கு அதனை ஏ.டி.எஸ். தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகளின் , ஃபரீதாபாத் சந்திப்பு போபால் சந்திப்பிற்கு முன்னதாக நடைபெற்றுள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டவர் பற்றிய குறிப்பு போபால் சந்திப்பில் தான் முதலில் எழுந்துள்ளது, என்.ஐ.ஏ. விடம் முதல் சந்திப்பு பற்றிய குறிப்புகள் இருந்தால் அதனை தொடர்ந்து நடைபெற்ற சந்திப்புகள் பற்றிய குறிப்புகளும் இருந்திருக்க வேண்டும். அதனை என்.ஐ.ஏ. என்ன செய்தது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சந்திப்புகள் மிகவும் முக்கியமானது என்றும் அது தொடர்பான குறிப்புகள் முக்கியமான ஆதாரங்களாக இருக்கும் நிலையில் அவை எப்படி காணாமல் போயின என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கில் இருந்து பிரக்யா சிங்கை காப்பாற்றுவதில் முனைப்பாக இருக்கும் என்.ஐ.ஏ. இவற்றிற்கான உரிய பதிலை வழங்குமா என்பது சந்தேகமே!

Comments are closed.