மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் பிணையில் விடுதலை

0

மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங் பாம்பே உயர் நீதிமன்றத்தில் தனக்கு பிணை வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இவருடன் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலோனல் புரோஹித்தும் பிணை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் பிரக்யா சிங்கின் பிணை மனுவை அங்கீகரித்தும், புரோஹித்தின் பிணை மனுவை நிராகரித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ரஞ்சித் மூர் மற்றும் நீதிபதி ஷாலினி பன்சல்கர் ஆகியோர் அடங்கிய பென்ச் இந்த பிணை மனுக்கள் மீதான உத்தரவை கடந்த பிப்ரவரி மாத விசாரணையின் போது ஒத்தி வைத்திருந்தது. தற்போது இவர்களின் பிணை மனு மீதான விசாரணையின் முடிவை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

பிரக்யா சிங் மற்றும் புரோஹித் ஆகிய இருவர் மீதான MCOCA  சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை தேசிய புலனாய்வுத்துறை தளர்த்தியதை அடுத்து இந்த இருவரும் மீண்டும் பிணை வேண்டி விண்ணப்பித்தனர்.

2011 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையின் விசாரணையில் இந்த வழக்கு இருந்த போது இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்த பிரக்யா சிங்கின் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதனை தேசிய புலனாய்வுத்துறை போதிய ஆதாரம் இல்லை என்றும், மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங்கின் பெயரில் இருந்தாலும் அதனை குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்திய குற்றவாளி வேறு என்றும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறி மறுத்தது. ஆனால் புரோஹித் மீது UAPA சட்டத்தின் கீழும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக பிரக்யா சிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் NIA வின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உள்ள நிலைமையை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறி வாதாடினார். வலது சாரி இந்து அமைப்புகள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகளின் விஷயத்தில் NIA மென்மைப்போக்கை கையாண்டு வருகிறது என்று பல தருணங்களில் பல செய்திகள் உணர்த்தின. இதனை வழக்கறிஞர் ரோகினி சாலியன் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். (மாலேகான் செய்திகள்)

இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் BA.தேசாய், NIA பிரக்யா சிங் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததினாலும், இவ்வழக்கை மறு விசாரணை செய்வதினாலும் அவருக்கு பிணை வழங்கிட முடியாது என்றும் பிரக்யா சிங் தாகூர் மீது முதன்மை வழக்கு உள்ளது என்று கூறினார். மேலும் 2008 நடந்த குண்டுவெடிப்பிற்கு பிரக்யா சிங் தாகூர் தான் RDX வழங்கினார் என்கிற ஆதாரம் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், பெண் டிரைவ், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாக்குமூலங்கள் மூலம் உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார். இப்படி இருந்தும் புரோஹித்தின் பிணை மனுவை மறுத்த NIA பிரக்யா சிங்கின் பிணை மனுவிற்கு எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.