மாலேகான் குண்டு வெடிப்பு புகழ் புரோஹித்: பிணையும் புனிதப்படுத்துதலும்

0

2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லெப்டினன்ட் கலோனல் புரோஹித்திற்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக இவரது பிணை மனுவை பாம்பே உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்பளித்திருந்தது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கலோனல் புரோஹித் தான் இராணுவ உளவாளியாகவே செயல்பட்டதாகவும் தான் தீவிரவாத நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிபதி R.K.அகர்வால்  மற்றும் நீதிபதி A.M.சாப்ரி இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையில் புரோஹித் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் சால்வே, புரோஹித் கடந்த 9 வருடங்களாக சிறையில் உள்ளதாகவும் ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் புரோஹித் மீது MCOCA பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும் அதனால் அவர் இடைக்கால பிணைக்கு தகுதியானவர் என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

இவ்வழக்கில் NIA தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல் மணிந்தர் சிங், புரோஹித்திற்கு எதிராக இவ்வழக்கில் ஆதாரங்கள் இருப்பதாக நீதின்றத்தில் கூறினார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 4000 பக்க குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளிகளாக சுவாமி தயானந்த் பாண்டே, சாத்வி பிரக்யா சிங் மற்றும் புரோஹித்-ஐ முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இவர்கள் இந்த குண்டு வெடிப்பிற்கு மாலேகானை தேர்ந்தெடுத்தற்கு காரணம் அங்குள்ள அதிகமான முஸ்லிம் ஜனத்தொகை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பிற்கென தயானந்த் பாண்டேவின் வேண்டுகோளுக்கு இணங்க புரோஹித் RDX வெடிபொருட்களை ஏற்பாடு செய்ததாகவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்த சாத்வி பிரக்யா சிங் அவரது வாகனத்தை தந்து உதவியாதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சாத்வி பிரக்யா சிங் மற்றும் லெப்டினன்ட் கலோனல் புரோஹித் ஆகியோர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் முந்தைய நிலையை இங்கு  நாம் நினைவுகூற வேண்டியுள்ளது.

இவ்வழக்கில் இவர்களின் பிணை/விடுதலைக்கு தடையாக இருந்த அத்துணை காரணிகளும் ஒவ்வொன்றாக திட்டமிட்டு நீக்கப்பட்டன. இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சாலியன் தன்னிடம் இவ்வழக்கில் மென்மைபோக்கை கையாளுமாறு NIA அதிகாரி வேண்டுகோள் வைத்ததாக தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

மேலும் தற்போது புரோஹித் உச்சநீதிமன்றத்தில் கூறியது போல அவர் இராணுவத்தின் எந்த ஒரு உளவுப் பிரிவிலும் இல்லை என்று கடந்த வருடம் சிறப்பு புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் விகாஸ் நரைன் கூறியிருந்தார்.

இவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கர்னல் புரோஹித்தை கைது செய்வதற்கு தங்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருந்தது என்றும் அந்த ஆதாரங்கள் அனைத்தும் புரோஹித்தை கைது செய்வதற்கு முன்னர் ராணுவ தலைமை அதிகாரியிடம் IB யின் இயக்குனரால் சமர்பிக்கப்பட்டது என்றும் அதன் பின்னரே புரோஹித் கைது செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

புரோஹித்தை காப்பாற்ற ஆதாரங்களை அழித்து போலிகளை தயார் செய்ய அதிகார சக்திகள் முயற்சிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். மேலும் தற்பொழுது SIT மற்றும் ATS கூறுவது போல புரோஹித் எந்த ஒரு ராணுவ உளவுபிரிவிலும் இல்லை என்றும் அப்படி இருந்திருந்தால் ராணுவம் தங்களுடைய அதிகாரி ஒருவரை அவ்வளவு எளிதில் விட்டு கொடுத்துவிடுமா என்றும் ராய் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் புரோஹித்தை சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சிகள் நடப்பதாக அப்போதே குறிப்பிட்டிருந்தார்.(பார்க்க செய்தி)

இந்நிலையில் தற்போது பேராசிரியரும் அரசியல் விமர்ச்சகருமான  பிரவின் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் (20-08-17) அன்று ஒரு பதிவு செய்திருந்தார். அதில் டைம்ஸ் நவ் தொலைகாட்சியில் இருந்து தன்னை ஒரு பெண் தொடர்பு கொண்டதாகவும் தன்னிடம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்குபெற இயலுமா என்று கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் எது தொடர்பான விவாதம் என்று தான் கேட்டதற்கு புரோஹித்திற்கு பிணை கிடைக்கும் என்று அந்த பெண் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். புரோஹிதிற்கு பிணை வழங்கப்படுமா மாட்டாதா என்பது நீதிமன்ற அறிவிப்பிற்கு முன்னதாக இவர்களுக்கு எப்படித் தெரியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற செய்திகள் தற்போதைய புரோஹித்தின் பிணை முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றா என்று சந்தேகம் கொள்ளச்செய்கிறது.

மேலும் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் புரோஹித்திற்கு பிணை வழங்கப்பட்டதும் நீதிமன்றம் அவரை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்தே குற்றமற்றவர் என்று கூறி விடுவித்தது போல  பாஜக ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் புரோஹித் ஒரு அப்பாவி என்று ஒப்பாரி வைக்கின்றன. மேலும் அவரை இந்த தீவிராத வழக்கில் சிக்க வைத்தது யார் என்றும் விவாதங்கள் நடத்தத் தொடங்கிவிட்டன. கூடுதலாக பிணையில் வெளியாகும் புரோஹிதிற்கு அவரது பிணைக்காலத்தில் இராணுவ பதவி வழங்கப்படும் என்றும் இராணுவம் அவருக்கு தங்கும் இடமும் பாதுகாப்பும் வழங்கும் என்று தெரிவித்ததாக நியூஸ்18 தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் புரோஹித் இவ்வழக்கில் சிக்கவைக்கப் பட்டதற்கும் இத்துனை நாட்கள் அவருக்கு பிணை கிடைக்காமல் இருந்ததற்கும் காங்கிரஸ் செய்த அரசியல் தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் அந்த ஊடகங்கள் வாயிலாக எழுப்பப்பட்டு வருகிறது.

புரோஹித் பயன்படுத்திய RDX வெடிபொருளை தீவிரவாத தடுப்புப் படையே வைத்துவிட்டு புரோஹித் மீது பழி சாட்டியது என்று டைம்ஸ் நவ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புரோஹித் இராணுவ உளவுப் பிரிவின் மகத்தான சொத்து என்று ஓய்வு பெற்ற கலோனல் ஹஸ்முக் படேல் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியிடப் படுகின்றன. இந்த அத்துணை செய்தித் தொகுப்புகளும் புரோஹித்தை ஒரு அப்பாவியாக சித்தரித்து குண்டு வெடிப்பு குற்றத்திற்காக அவர் இத்துனை நாள் சிறையில் இருந்ததை ஆவர் செய்த தியாகம் போல பாஜக ஊதுகுழல்கள் பரப்பி வருகின்றன.

தற்போது புரோஹித்திற்காக இந்த ஊடகங்கள் கேட்கும் எந்த ஒரு கேள்வியையும் ஜோடிக்கப்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் சிக்கி பல வருடங்களை சிறையில் இழந்து பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படும் அப்பாவி முஸ்லிம்கள் விஷயத்தில் கேட்கவில்லை.

ஆனால் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் பிணையில் வெளியாவதை அவர் தீவிரவாத வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது போன்ற இந்த தொலைகாட்சி பரப்புரைக்கு காரணம் மக்கள் மத்தியில் அவர் குற்றமற்றவர் என்று நிறுவும் முயற்சியாகும். இது குறித்து குஜராத்தின் முன்னாள் IPS அதிகாரி சஞ்ஜீவ் பட் குறிப்பிடுகையில்,”தற்போது முழு நேர பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லை. தற்போது லெப்டினன்ட் கலோனல் புரோஹித் பிணையில் வெளியாகியுள்ளார். அதனால்” (அவருக்கு அந்த பதவி கூட வழங்கப்படலாம் என்பது போன்று) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

37 உயிர்களை கொன்று 125  நபர்களை படுகாயமடையச் செய்த குண்டு வெடிப்பு ஒன்றின் முக்கிய குற்றவாளிகளை அவர்கள் மீது போதிய ஆதாரம் இருந்தும் தண்டிக்காமல் காலத்தின் போக்கில் அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்து அந்த முக்கிய குற்றவாளிகளை தியாகிகளாக்கும் முயற்ச்சி இந்துத்வாவின் காவாலித்தனத்தையும் எதிர்கட்சியின் கையாலாகாத தனத்தையும் வெளிப்படுத்திகிறது. காவித் தீவிரவாதத்துடன்  எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் அன்றைய காங்கிரஸ் அரசு அதனை ஒடுக்கியிருந்தால் இன்று காங்கிரசுக்கும் இந்த தேசத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

மாலேகான் வழக்கு குறித்த செய்திகள் இங்கே.

Comments are closed.