மாலேகான் வழக்கில் மென்மையை கடைபிடிக்குமாறு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட என்.ஐ.ஏ.

0

மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் செப்டம்பர் 29, 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 80 நபர்கள் காயமுற்றனர். வழக்கம்போல் இந்த வழக்கிலும் முதலில் முஸ்லிம்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் பின்னர் வழக்கை விசாரித்த மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தார். இந்துத்துவ தீவிரவாதத்தின் முகம் இதன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது. விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே ஹேமந்த் கர்கரே மும்பை தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார்.
மாலேகான் வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பன்னிரெண்டு நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் நால்வர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். வழக்கின் விசாரணை பின்னர் தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ரோஹினி சாலியான் ஆஜராகி வருகிறார்.
மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, இந்த வழக்கில் மென்மையான போக்கை கடைபிடிக்குமாறு தன்னை என்.ஐ.ஏ. வற்புறுத்தி வருவதாக சாலியான் குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் 12 அன்று தன்னை சந்தித்த மூத்த என்.ஐ.ஏ. அதிகாரி, உயர் மட்டத்தில் இருப்பவர்கள் நான் இந்த வழக்கில் ஆஜராவதை விரும்பில்லை என்றும் வேறொரு வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராவார் என்றும் தெரிவித்ததாக ரோஹினி சாலியான் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 2008ல் இருந்து ரோஹினி பணியாற்றி வருகிறார். இந்த வழக்கில் தான் ஆஜராவதை என்.ஐ.ஏ. விரும்பவில்லை என்றால் அதனை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் ஏப்ரல் 15 அன்று உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து மற்ற குற்றவாளிகளுக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் ஒரு புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால் அது அவருக்கும் மிகவும் கடினமான பணியாக இருக்கும். இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால் வழக்கில் தோற்பதற்கு ஏதுவாக இவற்றை செய்யலாம் என்றும் ரோஹினி தனது கருத்தை தெரிவித்தார்.

Comments are closed.