மாலேகான் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கும் ஜாமீன்

0

மாலேகான் குண்டுவெடிப்பு (2008) வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமீர் குல்கர்னி என்பவருக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றம் அக்டோபர் 11 அன்று ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏனைய நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை காரணம் காட்டி இவருக்கும் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு நடத்துவது சம்பந்தமாக நாசிக் மற்றும் இந்தூரில் நடைபெற்ற சதி ஆலோசனை கூட்டங்களில் சமீர் குல்கர்னி கலந்து கொண்டதாகவும் குண்டுவெடிப்பிற்கான இரசாயணங்களை தயார் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
புனே நகரை சேர்ந்த குல்கர்னி அபிநவ் பாரத் அமைப்பின் உறுப்பினர் ஆவார். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளுடனும் இவர் தொடர்பில் இருந்துள்ளார். ஜூன் 2007ல் பாதிரியார் பீட்டர் டேவிஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்களுடன் சேர்த்து குல்கர்னி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நவம்பர் 2008ல் அந்த வழக்கில் இருந்து குல்கர்னி விடுவிக்கப்பட்டார்.
செப்டம்பர் 29, 2008 அன்று மாலேகானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பதினான்கு நபர்களில் பதினோரு நபர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். ராமசந்திர கல்சாங்ரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகிய இருவரும் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். ராகேஷ் தவாடே என்பவர் மட்டும் தற்போது சிறையில் உள்ளார்.
குல்கர்னிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள அபிநவ் பாரத் அமைப்பின் தலைவர் மிலிந்த் ஜோஷிரா, விரைவாக ராகேஷ் தவாடேக்கும் ஜாமீன் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments are closed.