மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மையை விளக்கிய மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்

0

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி மகராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இதனையடுத்து நாஷிக்கின் பஞ்சாவதி பகுதியில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவரின் மகன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் பதிவான மொத்த வாக்குகளை விட போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் கூட்டுத்தொகை அதிகமாக உள்ளது என்று சிவ சேனா கட்சி கூறியுள்ளது. இதனையடுத்து சிவ சேனா மற்றும் பாஜக கட்சியினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலைத்தனர். இந்த வன்முறையில் ஒன்பது காவல்துறையினருக்கும் அப்பகுதியில் வசிக்கும் சிலருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது.

இதே போன்று மற்றொரு குற்றச்சாட்டு புனே நகரில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கு வன்முறைகள் எதுவும் நிகழவில்லை. புனேவின் எரவாடா பகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் பதிவு செய்துள்ளனர்.

மொத்தமாக 33,289 வாக்குகள் பதிவான நிலையில், இங்கு எண்ணப்பட்ட வாக்குகள் மொத்தம் 43,324 என தெரியவந்துள்ளது. இந்த பகுதிகளில் மீண்டும் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் அங்கு வாக்குச்சீட்டு முறை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் RO மீது காவல்துறையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் இந்த கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்ததினால் எதிர்கட்சியினரின் ஒன்றுபட்ட போராட்டம் ஒன்று அங்கு வெடித்தது, இதில் மின்னணு வாக்கு எந்திரத்தின் மாதிரி, சவ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

புனேவை சேர்ந்த மனிஷா மொஹிதே என்ற வேட்பாளர் தனது அனுபவம் குறித்து கூறுகையில், வாக்கு எண்ணிக்கையில் நான் வெற்றி பெற்றதாக அறிவித்து Section 149 இன் கீழ் அதிகாரப்பூர்வ கடிதமும் தனக்கு வழங்கப்பட்டது என்றும் பின்னர் தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறிய ஆதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் வெற்றிப் பேரணி செல்லும் போது ஒரு மின்னணு எந்திரத்தின் வாக்கு இன்னும் எண்ணப்படவில்லை என்று கூறி பின்னர் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அர்வித்தனர் என்று கூறியுள்ளார்.

பாஜகவில் பல குற்றவாளிகளை சேர்த்த பெருமையுடவர் என்று கூறப்படும் பாஜக எம்.பி.சஞ்சய் கக்டே, புனே வின் தேர்தல் முடிவு இவ்வாறு தான் இருக்கும் என்றும் அது தவறானால் தான் அரசியலை விட்டே வெளியேறி விடுவதாக கூறியதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சிகள் இது இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதற்கு மற்றும் ஒரு சான்று என்று கூறியுள்ளனர்.

மும்பையில் சுயேட்சையாக போட்டியிட்ட ஸ்ரீகாந்த் ஷிர்ஷத் என்பவர் அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் பூஜ்யம் வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “நான் எனக்காக வாக்களித்தேன், என் உறவினர்களும் எனது அக்கம் பக்கத்தினரும் எனக்காக வாக்களித்தனர். அப்படியிருக்க நான் பூஜ்யம் வாக்குகள் தான் பெற்றுள்ளேன் என்பது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்ற புகார்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவண்ணம் உள்ளன. இதனையடுத்து நாஷிக், புனே, அமரவாதி ஆகிய இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் பரவ தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சமூக ஆர்வலர் பி.ஜி.கோல்சே படில் ஒருங்கிணைத்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,“மோடி மற்றும் அமித்ஷாவின் கடந்த காலங்களை பார்க்கையில், அவர்கள் மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துள்ளனர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பான பல முறைகேடுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனால் அதற்கு எதிராக போராட்டம் செய்ய நான் முடிவெடுத்துள்ளேன். நமக்கு காகித பதிவுச்சீட்டு முறை கொண்ட எந்திரங்கள் வேண்டும். அது நடக்காத பட்சத்தில் நாம் மீண்டும் வாக்குச்சீட்டு வாக்கு முறைக்கே செல்ல வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

காகித பதிவுச்சீட்டு முறை கொண்ட மின்னணு எந்திரங்கள் என்பது வாக்காளர் தன்னுடைய வாக்கை பதிவு செய்தவுடன் அவரது வாக்கை உறுதி படுத்தும் சீட்டு அச்சிடப்பட்டு எந்திரத்தில் இருந்து வெளிவரும். பின்னர் அதனை வாக்களர் வாக்குப் பெட்டியில் போட வேண்டும். இதன் மூலம் வாக்காளர் தான் பதிவு செய்த வாக்கு சரியாக சென்றதா என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் மின்னணு எந்திரத்தில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடிபெற்றுள்ளது என்ற சந்தேகம் இருப்பின் அதனை வாக்குச்சீட்டுகளை கொண்டு சரி பார்க்கவும் முடியும்.

இது போன்ற முறையை, 2012 இல் டில்லி உயர் நீதிமன்றம் தற்போதைய மின்னணு வாக்கு எந்திரங்கள் முற்றிலும் பாதுகாப்பானது அல்ல என்று கூரியதினாலும், 2019 இற்குள் VVPAT எனும் (Voter Verified Paper Audit) காகித பதிவுச்சீட்டு முறையை மின்னணு வாக்கு எந்திரங்களுடன் அமல் படுத்த வேண்டும் என்று கூறியதை அடுத்து, தேர்தல் ஆணையம் 2014 இல் 8 மக்களவை தொகுதிகளில் பயன்படுத்தியது.

முன்னதாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பானதில்லை என்று பிரச்சாரம் செய்து வந்த பாஜக எம்.பி.கிரித் சோமையா, 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தனது கூற்றை தலைகீழாக மாற்றிகொண்டார். 2010 இல் நடைபெற்ற மின்னணு வாக்கு எந்திரத்திற்கு எதிரான நிகழ்ச்சி ஒன்றில் கிரித் சோமையாவும், தற்போதைய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள 2019 காலகெடுவிற்குள் தேர்தல் ஆணையம் இந்த முறையை நடைமுறை படுத்திவிடும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த 10 இல் இருந்து 12 வருடங்கள் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Comments are closed.