மின்ஹாஜ் அன்சாரி கஸ்டடி மரணம் – கடுமையான நடவடிக்கை வேண்டும்: சத்ருகன் சின்ஹா

0

ஜார்கண்ட் மாநிலத்தின் தர்பார் தோலா பகுதியில் வசித்து வந்த மின்ஹாஜ் அன்சாரி என்ற 22 வயது இளைஞரை சிறையில் வைத்து சித்தரவரத்தை செய்து கொலை செய்த காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

அக்டோபர் மூன்றாம் தேதி வாட்ஸ்அப் குழுமம் ஒன்றில் அறுக்கப்பட்ட மாட்டின் புகைப்படத்துடன் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பகிர்ந்ததாக கூறி மின்ஹாஜை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் காவல் நிலையத்தில் வைத்தே கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். (பார்க்க செய்தி)

இந்நிலையில் மின்ஹாஜின் உடலை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஏற்பட்டுள்ள உள்காயங்களினால் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று முதலில் தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த காயங்களாலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் சித்திரவதை காரணமாக சமீபத்தில் பலியான உயிர்களில் இரண்டாவது மின்ஹாஜுடையது. இதே போன்று சி.பி.ஐ.யினரின் துன்புறுத்தல்களினால் மத்திய அரசு அதிகாரியான பி.கே.பன்சால் மற்றும் அவரது மகன் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டனர்.(பார்க்க செய்தி)

இன்னிலையில் பாட்னா சாஹிப் தொகுதியின் எம்.பியான. சத்ருகன் சின்ஹா இதற்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இவர் தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில், “குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுங்கள்” என்றும் “மனிதாபிமானம் மற்றும் நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய தேவையான நேரமும் சரியான நேரமும் இது” என்றும் “அனைத்து காவல்நிலைய விசாரணைகளும் CCTV பதிவு செய்யப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மின்ஹாஜின் மரணத்தை அடுத்து நாரயன்புரா காவல்நிலைய பொறுப்பு அதிகாரியான துணை ஆய்வாளர் ஹரிஷ் பதக் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றத்திற்காவும் பெண்ணின் கண்ணியத்தை குலைத்ததற்காகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்ஹாஜின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக இரண்டு லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.