மியான்மர் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் குறித்த கருத்தரங்கம்

0

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு கடும் மனித உரிமை மீறல்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். சொந்த நாட்டில் இழைக்கப்படும் அட்டூழியங்களில் இருந்து தப்பிக்க அண்டை நாடுகளுக்கு தஞ்சம் தேடி படகுகளில் செல்கின்றனர். ஆனால் இவர்களை ஏற்றுக் கொள்வதற்கு எந்த நாடும் தயாராக இல்லாததால் கடலில் தத்தளித்து வருகின்றனர்.
இவர்களின் இந்த நிலையை ஆள்கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. பெரும் ஈட்டுத் தொகையை கேட்கும் இவர்கள் அதை தர இயலாதவர்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இத்தகைய மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டிய ஐ.நா.வும், உலக நாடுகளும் அமைதி காத்து வருகின்றன.
மியான்மர் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை இந்தியாவும், ஐ.நாவும் உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜூன் 7 அன்று சென்னை ராயபுரத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் மு. முஹம்மது இஸ்மாயீல் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயலாளர் ஜெ. முஹம்மது ரசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ. மார்க்ஸ், தமிழ் தேச பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் ஆகியோர் பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து உரையாற்றினர்.
மியான்மர் அரசிற்கு இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு இந்தியாவின் சார்பாக உதவிகளை செய்ய வேண்டும், மியான்மரில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா.வில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட சென்னை மாவட்ட தலைவர் ரபீக் ராஜா நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.