மியுசிகலியா? உயிர் கொல்லியா?

0

மியுசிகலியா? உயிர் கொல்லியா?

ஆபாசத்தை விதைத்து உயிரை குடிக்கும் ‘ஆப்’கள்

“நீங்கள் என்னை எவ்வளவு அசிங்கமாக பேசினாலும் நான் வீடியோ போட்டுக் கொண்டுதான் இருப்பேன்” என்று வீடியோ பேசிய கலையரசன் கடந்த 12ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருநங்கையான இவர் பெண்கள் போல பேசியும் நடித்தும் ‘டிக்டாக்’ என்ற செயலியில் (ஆப்) வீடியோ வெளியிட்டதால் இவரை அசிங்கமான முறையிலும் தற்கொலைக்கு தூண்டும் வகையிலும் பலர் கமெண்ட் செய்துள்ளனர். இதனாலேயே இவர் தற்கொலை செய்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. ஆனால் காவல்துறையினர், “வீட்டில் பெற்றோர் திட்டியதாலேயே அவர் தற்கொலை செய்திருக்கலாம்” என கூறுகின்றனர்.

எது எப்படியோ வீட்டில் திட்டினாலும் வெளியில் திட்டினாலும் இந்த செயலியால் ஒரு உயிர் பிரிந்து விட்டதே!

இளைஞர்கள், மாணவர்கள் இடையே வேகமாக பரவி வரும் இந்த டிக்-டாக் செயலியால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய செயலிகளால் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ‘பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணித்துக் கொள்ளவும்’ என்று எச்சரிக்கைகளும் வருகின்றன.

அப்படி என்ன இந்த செயலி மூலம் ஆபத்து? இந்த செயலி எப்போது, ஏன் உருவாக்கப்பட்டது? வேறு ஒரு குரலை அல்லது இசையை நமது சைகைகளுடன் இணைத்து ஒரு வீடியோவாக வெளியிடுவதுதான் டிக்-டாக் செயலி. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த மியுசிகலி செயலியை 2018 -& ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி “பை டான்ஸ்” என்ற நிறுவனம் டிக்-டாக் செயலியுடன் இணைத்தது. சீன நிறுவனத்தின் மியுசிகலி / டிக்-டாக் செயலியை பயன்படுத்துவோர் 49% பேர் அமெரிக்கர்கள். இச்செயலியை பயன்படுத்துபவர்களில் 75% பேர் பெண்கள் என்றும் 64 சதவிகிதத்தினர் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்றும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக 11 நிமிட வீடியோவை இந்த செயலியில் பதிவிடுகின்றார்.

கல்வியை மாணவர்கள் மத்தியில் செயலி மூலம் சிறிய சிறிய வீடியோவாக கொண்டு சேர்க்க வேண்டும், அதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செயலி துவங்கப்பட்டது. ஆனால் அதில் தோல்வியை அடையவே, தற்போதுள்ள நிலைக்கு அதனை மாற்றினர் அதன் உரிமையாளர்கள். கல்விக்கும் பொழுதுபோக்கிற்கும் நாம் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று.

இந்த மியுசிகலி / டிக்-டாக் செயலியை முதலில் அனைவரும் பொழுதுபோக்கிற்காக துவங்கி பின்பு தன் திறமையை சோதிக்கவும், தன் நடிப்பின் அழகை ரசிக்கவும் பயன்படுத்துகின்றனர். பின்னர் அந்த வீடியோகளை அனைவருக்கும் பகிர்ந்து தன்னையும் தன் அழகையும் ஊருக்கே போட்டுக்காட்டும் சூழல் உருவாகின்றது. பொழுதுபோக்கை பொழுது போக்கிற்காக பயன்படுத்தினால் தவறில்லை. ஆனால் முழுநேரத்தையும் இதில் செலவழிப்பதும் தேவையற்ற வீடியோகளும் நம்மை நாமே அழிப்பதற்கு சமமாகும். சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் தனி மனித தகவல் திருட்டு, வதந்தி பரவல் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதற்குள், ஒரு புதிய பிரச்சனையாக இந்த செயலி உருவெடுத்துள்ளது.

‘சமூக வலைதளம்’ என்ற பெயரே இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட வேண்டும் என்பதற்காகதான். ஆனால் அது இந்த சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வலைதளமாக மாறும்பொழுது அதை நாம் ‘சமூக கேடுதளம்’ என்றுதான் அழைக்க வேண்டும்.

இந்த சமூக கேடுதளமான மியுசிகலி செயலியில் பாலியல் ரீதியிலான வீடியோக்கள் வரம்பின்றி வருகின்றது என்பதால் சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் ஒரு வாரம் தடை செய்யப்பட்டது. அது மட்டுமன்றி மத ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் மற்றவர்கள் மனம் புண்படும் வகையில் வீடியோகள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் சமூகத்தில் அமைதியை குலைப்பதற்கு இந்த செயலியும் களத்தில் குதித்துள்ளது.

இந்த செயலியை பயன்படுத்துவதில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் அதிகபட்சமாக மாணவ சமூகத்தினரே இருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற வீடியோகளால் அதிகமாக பாதிப்படைவது மாணவ சமூகமாகத்தான் இருக்கின்றது. யார் வீடியோவை யாரும் பார்க்கலாம், பகிரலாம், டவுன்லோட் செய்யலாம் என இருப்பது பிரைவசியை மொத்தமாக குழி தோண்டி புதைக்கிறது.

மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டளர்களின் வாட்ஸ்ஆப், இ-மெயில், ஃபேஸ்புக் என அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கும் அரசுகள் மியுசிகலி / டிக்-டாக் செயலியை கவனிக்க மறந்ததேன்? எவ்வித கட்டுப்பாடுகளும் வரையறையும் இல்லாமல் இப்படி செயலிகள் உலாவுவது சமூகத்திற்கு நல்லதல்ல. இதன் மீது அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்குமா? அப்படியே எடுத்தாலும் அது எப்படிப்பட்ட நடவடிக்கையாக இருக்கும் என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும் சமூகத்தை சீரழிக்கும் இத்தகைய செயலிகளில் இருந்து மாணவ சமூகத்தையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிரை ரியாஸ்

Comments are closed.