மீண்டும் ஒரு ஜுனைத்: காசியாபாத்தில் ரயில் இருக்கை தொடர்பான மோதலில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

0

உத்திர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்தவர் முனவ்வர். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர் தனது சிகிச்சைக்காக டில்லியில் உள்ள மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த புதன் கிழமை அவர் மருத்துவ சோதனை முடிந்து டில்லியில் இருந்து ஷாம்லி திரும்புகையில் ரயிலில் ஏற்பட்ட இருக்கை தகராறு காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. ஹாஃபிழ் ஜுனைத் ரயிலில் கொலை செய்யப்பட்ட போதும் இதே இருக்காய் தகராறு தான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் குறித்து முனவ்வரின் குடும்பத்தினர் கூறுகையில், “48 வயதான முனவ்வர் டில்லியில் இருந்து வீடு திரும்ப ரயில் ஏறியுள்ளார். அன்று மாலை இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் முனவ்வர் நான்கைந்து பேரால் சுடப்பட்டதாகவும் முனவ்வரை சுட்டவர்கள் பெஹ்தா பகுதி அருகே ரயிலின் சங்கிலியை இழுத்து அங்கிருந்து தப்பியோடியதாகவும் கூறினார். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு இருக்கை தகராறு காரணமாக ஏற்ப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். முனவ்வர் வைத்திருந்த டைரி ஒன்றில் இருந்து எண்களின் தொலைபேசி எண்னை பெற்றதாகவும் அதனையடுத்து எங்களை அவர் தொடர்பு கொண்டதாவும் தெரிவித்தார்.” என்று கூறியுள்ளனர்.

இப்படியிருக்க அரசு ரயில்வே காவல்துறையோ இந்த நிகழ்வு டில்லி மற்றும் சஹாரன்பூர் பகுதிக்கு இடையேயான ஜனதா எச்பிராஸ் வழித்தடத்தில் பெஹ்தா பகுதிக்கு அருகே நடைபெற்றது என்றும் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்துவிட்டனர் என்று கூறியுள்ளது.

இது குறித்து ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் கேகே.சவுத்திரி கூறுகையில், “இந்த சம்பவம் ஷஹ்தரா மற்றும் பெஹ்தா பகுதிக்கு இடையே நடைபெற்றுள்ளது. ரயில் லோனி பகுதியை அடைந்ததும் பயணிகள் ரயிலில் காயமடைந்து கிடந்த நபர் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,”அந்த நபருக்கு அவரது தாடைப் பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த செயலை செய்தது ஒரு தனி நபர்தான் என்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மேலும் ரயில்வே காவல்துறை அதிகாரிகளை அதே ரயிலில் அனுப்பி பயணிகளிடம் இருந்து கூடுதல் தகவல்களை பெறுமாறு கூறியுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் மீது முனவ்வரின் குடும்பம் கொலை முயற்சி வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ரயில்வே காவல்துறையினரோ இந்த தாக்குதலை நேரில் பார்த்த ஒரு பெண்ணின் சாட்சியத்தை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் வாக்குமூலத்தின்படி, தனது இருக்கையில் உறங்கிக்கொண்டிருந்த முனவ்வரின் மீது அந்த கும்பலை சேர்ந்த 22 இல் இருந்து 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் நிலைய நடை மேடையில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

காயமடைந்த முனவ்வர் GTB மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாகவும் அவரது நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனவ்வர் குறித்து அவரது மனைவி அஸ்மா கூறுகையில், “எங்களுக்கு இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்கள் எது என்று தெரியவில்லை. எனது கணவருக்கு யாருடனும் எந்த ஒரு விரோதமும் கிடையாது. அவர் மருத்துவ சோதனை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது உடல் நிலை இரண்டு வருடங்களாக மோசமாக இருந்தது. அவர் இதுவரை எந்த ஒரு பிரச்னைக்கு சென்றதில்லை.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.