மீண்டும் குறிவைக்கப்படுகிறதா மதுரை?

0

 

மதுரையில் மீண்டும் தொடங்கியுள்ள கைதுகள் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

2011 முதல் மதுரையை சுற்றியும், தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் பல இடங்களிலும் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. பட்டாசு வகை குண்டுகள் என்று காவல்துறை இதனை தெரிவித்தது. மாட்டுத்தாவணி அருகில் உள்ள டாஸ்மாக் பார், கே.புதூர் டெப்போவில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து, அண்ணா நகர், திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில், கீழ ரத வீதி, வில்லாபுரம், சிவகங்கை திருவள்ளுவர் தெரு என பல இடங்களிலும் பட்டாசு ரக வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. சுமார் 14 வழக்கள் பதிவு செய்யப்பட்டன. நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இந்த பட்டாசு குண்டுகள் கண்டெடுக்கப்படும் போதெல்லாம் காவல்துறையினர் ஒன்றும் அறியாத அப்பாவி முஸ்லிம்களை அழைத்து சென்று அவர்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தனர். மதுரை முஸ்லிம்கள் ஒருவித அச்ச உணர்வுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. சட்டத்திற்கு புறம்பாக, முஸ்லிம் இளைஞர்கள் வீடுகளில் இருந்து விசாரணைக்காக தூக்கி செல்லப்பட்டனர். இன்னும் சிலருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

ஏறத்தாழ 350 முஸ்லிம்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்களும் வார்த்தைகளால் வடிக்க முடியாத இன்னல்களுக்கு ஆளாகினர்.

மதுரை மாவட்ட ஜமாத்தினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து இந்த அநீதிக்கு எதிராக பல கட்ட போராட்டங்களையும் நடத்தியதை தொடர்ந்து இந்த அக்கிரமங்கள் முடிவுக்கு வந்தன. ஆனால், குண்டுவெடிப்புகள் நின்றபாடில்லை. நவம்பர் 2013ல் வழக்கறிஞர் ஒருவரின் காரில் குண்டு வெடித்தது. வழக்கம்போல் இதிலும் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

மார்ச் 2014ல் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு. இம்முறை மஸ்ஜித் ஒன்றின் செயலாளரின் இரண்டு சக்கர வாகனத்தில் குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் செய்யது அப்துல் காதர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளியே வந்தன.

இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ் குமார் மற்றும் முஹம்மது அப்பாஸ் ஆகியோர், முன்னாள் மாவட்ட எஸ்.பி. பõலகிருஷ்ணன் தனது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது காவல்துறைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. மற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் உளவுத்துறை தலைமை காவலர் விஜய பெருமாள் மற்றும் சில இன்ஃபார்மர்கள்தான் வெடிகுண்டுகளை வைத்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்குகளில் மூன்று நபர்களைதான் கைது செய்ய இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவதை உளவுத்துறையினர் தடுத்ததாக மாடசாமி குற்றம்சாட்டினர். பின்னர் ஆய்வாளர் மாடசாமி திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார். கைது செய்யப்பட வேண்டிய அந்த மூவரும் சுதந்திரமாக நகரை சுற்றி வருகின்றனர் என்பதை காவல்துறையினரே வேதனையுடன் சுட்டிக்காட்டினர்.

மேலும், அப்போதைய சி.பி.சி.ஐ.டி. (எஸ்.ஐ.டி) டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் எஸ்.ஐ.சி. டி.எஸ்.பி. மாரிராஜன் ஆகியோர் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்க தடையாக உள்ளனர் என்றும் மாடசாமி குற்றம் சுமத்தினார். (இருவரும் தற்போது ஏ.டி.எஸ்.பி.களாக பணியாற்றி வருகின்றனர்). ‘போலீஸ் ஒருவரின் கணக்கில் தீவிரவாதிகள் 25,000 பணம் செலுத்திய விவகாரம் தனிப்படை கையில் ஆதாரத்துடன் சிக்கியது என்றும் ஆய்வாளர் மாடசõமி வசம் இருக்கும் முக்கிய ஆதாரங்களை புதைக்க சதி நடக்கிறது’ என்றும் தி இந்து தமிழ் நாளிதழ் (26.10.2013) செய்தி வெளியிட்டது.

விசாரணை மேற்கொண்டு நடந்தால் மாரிராஜனும் கார்த்திகேயனும் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்திலேயே தன்னை இடமாற்றம் செய்ததாகவும் மாடசாமி டி.ஜி.பி.க்கு புகார் அளித்தார். மாடசாமியின் இடமாற்றத்திற்கு பின்னரே வழக்கறிஞர் காரிலும் மஸ்ஜித் செயலாளர் இரு சக்கர வாகனத்திலும் குண்டுவெடித்தது கவனிக்கத்தக்கது.

குண்டுவெடிப்பில் சந்தேகமுள்ள நபர்கள் அனைவரும் எஸ்.ஐ.சி., எஸ்.டி, எஸ்.ஐ.டி. போன்ற உளவுத்துறை அமைப்புகளுக்கு இன்ஃபார்மர்களாக உள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் புகார் கொடுத்த பிறகும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம்தான் மக்கள் மன்றத்தில் உள்ளது.

மதுரையை சேர்ந்த வஹாப் என்பவர் உளவுத்துறை ஹெட் கான்ஸ்டபிள் விஜய பெருமாளுடன் நெருங்கிய உறவு வைத்து மதுரையில் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகள், பணம் பறித்தல், மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் மாவட்ட கண்காணிப்பாளரின் கடிதம் தெரிவிக்கிறது.

பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆசாரி, ராமமூர்த்தி, மதுரைøய சேர்ந்த இம்ரான் ஆகியோரை மிரட்டி பணம் பறிக்க வஹாப்பை ஹெட் கான்ஸ்டபிள் பயன்படுத்திக் கொண்டார் என்றும் அதன்மூலம் ஏறத்தாழ அறுபதாயிரம் ரூபாய் வரை மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் செய்யது அப்துல் காதர் தெரிவித்தார்.

வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மதுரை மாநகர் எல்லைக்குட்பட்ட குண்டுவெடிப்புகளை விசாரிப்பதற்கு அண்ணாநகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவகுமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சிவகுமாரின் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே மதுரை கியூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை மற்றொரு வழக்கை பதிவு செய்து அதில் 2011 முதல் 2015 வரையுள்ள அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் இணைத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வெளியாகி சி.பி.ஐ.க்கு மேற்படி வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டால், இந்த வழக்குகளில் உளவுத்துறைக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில்தான் சிவகுமார் தலைமையில் புதிய விசாரணையை அமைத்துள்ளார்கள் என்கிறார் வழக்கறிஞர் அப்துல் காதர். இந்த புதிய இரண்டு விசாரணைகளிலும் குழப்பங்களுக்கு பஞ்சமில்லை.

மாட்டுத்தாவணி டாஸ்மாக் பார் சம்பவத்தில்  வெடிகுண்டு வைத்தார் என்று ஒருவரின் பெயரை சிவகுமார் குறிப்பிட, மற்றொருவரின் பெயரை கூறுகிறது கியூ பிரிவு. மற்ற வழக்குகளிலும் இதுதான் நிலை. இனி புதிதாக ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் இன்னும் புதியவர்களை குற்றவாளிகள் என்று நிறுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த குழப்பங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐ.டி. பிரிவின் ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் காவல்துறையில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்குகளை தனது கட்டுப்பாட்டில் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகளில் குற்றவாளியாக கூறப்படும் மாரிராஜனிடம் வழக்குகளின் விசõரணை ஒப்படைக்கப்பட்டால் என்னவாகும்?

பிரச்சனை அத்துடன் முடியவில்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் சிவகுமார் இருந்தாலும் இந்த வழக்கை முழுவதுமாக நடத்துபவர் மாரிராஜன்தான். கைது செய்யப்பட்டவர்களை தனது கஸ்டடியில் எடுத்து தான் விரும்பியவாறு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை அந்த வாக்குமூலங்களை படித்தாலே எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் நேரடி தொடர்பு கொண்டவர் என்று மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனால் குற்றம் சாட்டப்பட்டவர் உளவுத்துறை தலைமை காவலர் விஜய பெருமாள். ஆனால், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் அவர் கியூ பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு அவர் முன்னிலையிலேயே புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை எந்த குற்றப்பின்னணியும் இல்லாத மேலூரை சேர்ந்த அப்பாஸ் மைதீன் மற்றும் முபாரக் ஆகியோர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு ஒரு நாடகம் நடத்தப்படுகிறது.

சில மாதங்கள் இல்லாமல் இருந்த அப்பாவிகள் கைது தற்போது மீண்டும் தொடங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வுகள் மதுரை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ. விசாரணைகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணையில் உள்ள நிலையில் எதற்காக இரண்டு விசாரணைகளை அவசரமாக ஆரம்பிக்க வேண்டும்? குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளையே விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் வழக்கின் விசாரணை எந்த லட்சணத்தில் அமையும்?

ஆய்வாளர் மாடசாமி கைது செய்ய முற்பட்ட அந்த நபர்கள் யார்? அவர்கள் தற்போது எங்குள்ளனர்? ஆய்வாளர் மாடசாமி எதற்காக அவசரமாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்? என பதில் தேடி ஏராளமான கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.

குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றுவதற்கே கைது படலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் ஆழமாக உள்ளது. மாரிராஜன், கார்த்திகேயன், விஜய பெருமாள் போன்ற காவல்துறையினர் நிச்சயம் அத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியவர்களே என்பதை காவல்துறை உயர்அதிகாரிகளும் அரசாங்கமும் உணர வேண்டும். இத்தகையவர்களை வைத்துக் கொண்டு ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று எப்படி கூற முடியும்? ஞ்

வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. வசம்ஒப்படைக்க வேண்டும்

மதுரையில் சமீபத்திய கைதுகள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட்  மாவட்ட தலைவர் இத்ரீஸ் நம்மிடம் கூறும்போது…

2011ல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கைது தொடங்கியதை தொடர்ந்து மதுரை அனைத்து ஜமாத் மற்றும இயக்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டது. 2014ல் மஸ்ஜித் செயலாளர் வாகனத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து ஏப்ரல் 2014ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வழக்குகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க கோரிக்கை வைத்தோம்.

அன்றிலிருந்து இவ்வருட மார்ச் வரை எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருந்தது. மார்ச் மாதம் க்யூ பிரிவு போலீஸார் மேலூரை சேர்ந்த இருவரை இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்துள்ளனர். இந்த இருவர் தலைமையில் ஒரு குழு செயல்பட்டு வருவதாகவும், 2011 முதல் 2015 வரையிலான அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இவர்கள்தான் காரணம் என்று தற்போது கூறுகின்றனர்.

இந்த வழக்குகள் சம்பந்தமான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்பொழுது இவர்கள் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் இந்த வழக்குகளின் விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், கமிஷனர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளோம்.

இதே கோரிக்கையை வலியுறுத்தும் மனுக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள், மனித உரிமை போராளிகள் ஆகியோரிடமும் கொடுத்துள்ளோம்.

இந்த கைதுகளை தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலூர் பகுதி மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே உள்ளனர்.

இந்த விஷயத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாத்துகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

(மே 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.