மீண்டும் தயாராகிறது தூக்கு மேடை!

0

 – ரியாஸ்

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து தூக்கு கயிற்றுக்கு காத்திருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்;ப்பு வெளியாகவுள்ளது என்ற செய்தி வந்தவுடன் எண்ணிக்கை குறையை போக்க இந்த வழக்கில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நம்பினர். மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக தற்போது மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் ஒருவரை மட்டும் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ஏழு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியுள்ளது. ஜூலை 11, 2006 அன்று மும்பை நகரில் அடுத்தடுத்து ஏழு ரயில்களில் குண்டுகள் வெடித்ததில் 187 நபர்கள் கொல்லப்பட்டனர், 824 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தங்கள் உறவுகளை இழந்தவர்களில் சிலர் குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் சுட்டிக்காட்டும் இந்த 12 பேரும் உண்மை குற்றவாளிகள்தானா? இந்த கேள்விக்குதான் இதுவரை விடை கிடைக்கவில்லை.
குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து 13 முஸ்லிம்களை கே.பி.ரகுவன்ஷி தலைமையிலான மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இருபது முதல் முப்பது வயதிற்கு உட்பட்டவர்கள். இதற்கு முன்னர் எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடாதவர்கள். பெரு நிறுவனங்களில் நல்ல பணியில் இருந்தவர்கள். ஜூலை 20 முதல் அக்டோபர் 3 வரையிலான காலக்கட்டத்தில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்த அனைவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக கூறி நவம்பர் 29, 2006ல் தீவிரவாத எதிர்ப்பு படையினர் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். ஆனால் தங்களை சித்திரவதை செய்தே ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை அழைத்து வந்து அவர்களின் முன்னிலையிலும் இவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பைசல் ஷேக் என்பவரின் மனைவியை மூன்று நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து, அவரும் அவருடைய தம்பியும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லையென்றால் பைசலின் மனைவியை மானபங்கப்படுத்துவதாக மிரட்டியுள்ளனர். சில சமயங்களில் குற்றத்தை ஒப்புக்கொள்ள பண பேரமும் பேசப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ரகுவன்ஷியே இதனை செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த வழக்கு விசாரணைiயில் பல்வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் ஏற்பட்ட நிலையில் அவற்றிற்கான விடை எதுவும் இதுவரை கிடைக்கிவில்லை. சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்கள் கழித்து இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி மும்பை காவல்துறையினர் ஐந்து நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சாதிக் ஷேக், மும்பை ரயில் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன்தான் செய்ததாக கூறினார். ஆகஸ்ட் 30, 2013ல் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் யாசின் பட்கலும் ரயில் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன்தான் செய்ததாக கூறினார். ஒரே சம்பவத்தை இருவேறு குழுக்கள் எவ்வாறு செய்திருக்க முடியும்?
ரயில்களில் குண்டுவைத்ததாக சொல்லப்படும் இஹ்திஸாம் சித்தீகி, பைசல் ஷேக் மற்றும் ஆசிஃப் கான் பஷீர் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற அன்று சம்பவ இடங்களின் அருகில் கூட இருக்கவில்லை என்பதை அவர்களின் தொலைபேசி அழைப்புகள் தெளிவாக காட்டுகின்றன. பைசல் ஷேக் மேற்கு பாந்த்ராவில் உள்ள லக்கி ரெஸ்டாரென்டில் இருந்துள்ளார். ஆசிஃப் கான் மாலை ஆறு மணிவரை கன்திவாலியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்துள்ளார். அவருடைய அலுவலக வருகை பதிவேடும் இதனை உறுதி செய்கிறது.
அனைத்திற்கும் மேலாக தீவிரவாத எதிர்ப்பு படையின் ஏ.சி.பி. வினோத் பட், கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் அப்பாவிகளே என்று தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாதததால் பொதுமக்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு படையினர் மீதான கோபம் அதிகரித்து கொண்டே சென்றது. இதனை சரி செய்ய ரகுவன்ஷி மற்றும் கமிஷ்னர் ஏ.என்.ராய் ஆகியோர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த வற்புறுத்துவதாக சித்தீகியிடம் கூறியுள்ளார். இதனை தெரிவித்த சில நாட்களிலேயே வினோத் பட் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக சக அதிகாரிகள் கூறிய போதும் தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சக அதிகாரிகளே அவரை கொலை செய்துவிட்டதாக சித்தீகி குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி பிப்ரவரி 11, 2010 அன்று தனது அலுவலகத்தில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆஜராவதால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக காவல்துறையிடம் அஸ்மி முன்னேர புகார் அளித்திருந்தார்.
சந்தேகங்கள் நீடித்து கொண்டே இருக்க தீர்;ப்பு மட்டும் தற்போது வெளிவந்துள்ளது. தாங்கள் அப்பாவிகள் என்றும் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் விடுவிக்கப்படுவோம் என்றும் சிலர் நம்பிக்கையுடன் தெரிவித்தாலும் மற்றவர்கள் விரக்தி நிலையிலேயே உள்ளனர். ‘வெடிகுண்டு குற்றவாளி’ என்ற அவப்பெயருடன் தங்களின் வாழ்க்கை முடிவடைந்து விடுமோ என்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.
12 பேரும் ரயில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வெளிப்படையான கடிதத்தை எழுதினர். 17 பக்கங்களை கொண்ட இந்த கடிதத்தில் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத தீவிரவாத எதிர்ப்பு படையும் அரசாங்கமும் தங்களை பலிகடாக்கள் ஆக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
‘(நாங்கள் குற்றவாளிகள் என்ற தீர்ப்பை கேட்டு)உங்களின் சந்தோஷமும் நிம்மதியும் இயற்கையானதுதான். ஆனால் உங்களின் சந்தோஷம் போலியானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். உங்கள் அன்புக்குரியவர்களை கொலை செய்தவர்கள் நாங்கள் பன்னிரெண்டு பேர் கிடையாது. ஆனால் நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்று அக்கடிதத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏ.டி.எஸ். அதிகாரி வினோத் பட்டின் தற்கொலை குறித்தும் குறிப்பிட்டுள்ளவர்கள் ரயில் குண்டுவெடிப்பின் உண்மை குற்றவாளிகள் பாதுகாப்பான இடங்களில் அடுத்த திட்டத்தை தீட்டிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இந்த வழக்கு விசாரணை குறித்து பன்னிரெண்டு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.
‘உண்மையை அறிந்து கொள்ள முற்படுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தீர்ப்பின் நகலை வாசித்து, எதிர் தரப்பு சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள், ஆவணங்கள், எங்களின் தொலைபேசி அழைப்பு விபரங்கள் அனைத்தையும் பாருங்கள். எங்களுக்கு நீதி கிடைக்வில்லை என்பதை அறிந்து கொள்வீர்கள்’ என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தில் தாங்கள் மேல்முறையீடு செய்யும் போது தங்களுக்கு உதவி செய்யுமாறும் அப்பாவிகளை விடுத்து உண்மை குற்றவாளிகளை தண்டிக்குமாறு நீதிமன்றத்தை கோருமாறும் தங்களின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
விடைகளை வினாக்கள் எதிர் நோக்கியிருக்க பன்னிரெண்டு நபர்கள் நீதியை எதிர்பார்த்து நிற்கின்றனர். அதில் ஐந்து பேரை தூக்கு கயிறு மிரட்டுகிறது. உயர்நீதி மன்றத்தில் நீதி நிலைநாட்டப்படுமா அல்லது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்;ப்பு வழிமொழியப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Comments are closed.