மீரட்: முஸ்லிம் ஒருவருக்கு வீடு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்துக்கள்

0

உத்திர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மலிவாரா பகுதியில் இந்து நகைக்கடை உரிமையாளர் ஒருவர் முஸ்லிம் ஒருவரிடம் தனது வீட்டை விற்பனை செய்துள்ளார். இதற்கு அப்பகுதியில் உள்ள இந்துத்துவ அடிப்படைவாத குழுக்களின் ஆதரவாளர்கள் கடும் ஏதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதிய யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் தீபக் ஷர்மா, “ஷ்யாம் நகர், பனியபாரா, திவாரி, பேங்க் காலனி போன்ற பல இந்துக்கள் அதிகம் வாழும் இடங்கள் கடந்த சில வருடங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளாக மாறியுள்ளன. இது மேலும் தொடர எங்களால் அனுமதிக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த இடத்தை வாங்குவதற்கு இந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றும் முன்னதாக இந்த இடத்தை வாங்கியவரின் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சஞ்சய் ரஸ்தோகி என்கிற நகைக்கடை உரிமையாளர் அப்பகுதியில் உள்ள எவரும் தனது வீட்டை வாங்க முன்வராததால் இஸ்மாயில் நகரில் வசித்து வரும் நோமன் என்பவருக்கு 28 லட்ச ரூபாய்க்கு தனது வீட்டை விற்பனை செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டை நோமனுக்கு கொடுக்க இருந்த நிலையில் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவரின் இந்த செயலை எதிர்த்து போராட்டமும் நடத்தியுள்ளனர். இவர்களின் இந்த போராட்டத்திற்கு பின்னணியில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த போராட்டத்திற்கு சந்தீப் கோயல் என்ற அப்பகுதி மாநகராட்சி தலைவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த காவல்துறை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் நோமன் வீட்டை திருப்பிக் கொடுக்கவும் ரஸ்தோகி பணத்தை திருப்பிக் கொடுக்கவும் சம்மதித்துள்ளதாக அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் யஷ்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

 

இந்த பிரச்சனை தொடர்பாக ரஸ்தோகி கருத்து தெரிவிக்கையில், தான் இந்த வீட்டை விற்க வேண்டும் என்று கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்களிடம் கூறி வருவதாகவும் ஆனால் யாரும் தன் உதவிக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மலிவாரா பகுதியில் வசித்து வரும் பிரதீப் என்பவர், ரஸ்தோகி இரண்டு மாதத்தில் நோமனின் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டால் நோமன் அவ்வீட்டை விட்டுக் கொடுப்பதாக கூறியதாக தெரிவித்துள்ளார். 

Comments are closed.