மேவாத்: கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு நிரந்திர வேலை வேண்டும்: தேசிய சிறுபான்மை கமிஷன்

0

 

ஹரியானா மாநிலம் மேவாத் பகுதியில் பசு பாதுகாவலர்களால் கூட்டுகற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் கொல்லப்பட்ட அவர்களின் உறவினர்கள் குறித்து தேசிய சிறுபான்மை கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தங்களது இந்த அறிக்கையில் இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. க்கு மாற்றியதை வரவேற்றும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்திற்கோ முறையான வேலை வழங்க வேண்டும் என்றும் சிறுபான்மை கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து தங்கள் அறிக்கையில், “இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பசு பாதுகாவலர்கள் என்று கூறப்படுவதால் முஸ்லிம் சமூக மக்களிடையே இது பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை காவல்துறை கையாளும் முறை குறித்தும் பரவலாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன” என்று கூறியுள்ளது.

மேலும் சமூக நல்லிணக்கத்தை காக்கவும் காவல்துறையின் செயல்பாடு குறித்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஹரியானா மாநில அரசிடம் இக்கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.  மாநில அதிகாரிகள் சி.பி.ஐ. க்கு ஒத்துழைத்து இவ்வழக்கை விரைவாக முடிக்க உதவ வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கியதை வரவேற்றுள்ள சிறுபான்மை கமிஷன் இதே போன்று இவர்களுக்கு வேலை வழங்குவதிலும் அரசு தங்களது பெருந்தன்மையை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.

தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் நசீர் அஹமத் மற்றும் அதன் உறுப்பினர் பிரவீன் தாவர் ஆகியோர் செப்டம்பர் 22 ஆம் தேதி இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர்.

மேவாத் குறித்த செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Comments are closed.