முகிலனை மீட்க சிபிசிஐடிக்கு 8 வாரம் கால அவகாசம்!

0

மனித உரிமை  மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன், பிப்ரவரி மாதம் மதுரை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த சிசிடிவி பதிவுகள் உள்ளன. அதன் பின்னர் அவர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

இவர் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும் அரசுக்கு எதிரான சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதனால் தான் முகிலன் காணாமல் போனாரா என்ற கேள்வி மக்களிடம் பரவலாக எழும்பியது.

முகிலனை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டு, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வருகின்றது. ஆனால் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் அடைந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகிலன் வட இந்தியாவில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார். இது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள், முகிலனை மீட்பதற்காக சிபிசிஐடிக்கு எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

Comments are closed.