முசப்பர்நகர் கலவரக்காரர்கள் 100 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை வாபஸ் பெரும் உ.பி. அரசு

0

முசப்பர்நகர் கலவரக்காரர்கள் 100 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை வாபஸ் பெரும் உ.பி. அரசு

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முசப்பர்நகர் கலவரத்தில் பங்கெடுத்த சுமார் 100 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப்பெற ஆதித்யநாத் அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கென சிறப்பு செயலாளர் J.P.சிங் மற்றும் துணை செயலாளர் அருண் குமார் ராய் ஆகியோர் தயார் செய்து மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கு அனுப்பிய பரிந்துரை கடிதம் பத்திரிக்கையாளர்கள் பார்வைக்கு கிடைத்துள்ளது.

உபி அரசு திரும்பப் பெற உள்ள இந்த வழக்குகளில் ஆயுதம் ஏந்தி வன்முறை செய்தல், நெருப்பு மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்துதல், மத வழிபாட்டுத் தளங்களை சேதப்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகியன அடக்கம். இத்துடன் கிரிமினல் நோக்கங்களோடு பணிகளை தடுத்தல், மற்றும் கிரிமினல் சட்ட திருத்தம் பிரிவு 7 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கும் திரும்பப் பெறப்பட உள்ளது.

இதற்கான தங்கள் அனுமதியை உபி அரசு ஜனவரி 10 ஆம் தேதி வழங்கி பின்னர் இதற்கான கடிதத்தை ஜனவரி 29 ஆம் தேதி கொடுத்துள்ளது. இத்துடன் கலவரத்தின் போது ஆறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் 119 முதல் தகவல் அறிக்கைகளையும் திரும்பப்பெற அரசு கருத்துக்களை பெற்று வருகிறது.

கடந்த வருடம் பாஜக எம்.பி. சஞ்சீவ் பலியான் ஆதித்யநாத்தை சந்தித்து முசப்பர்நகர் கலவரத்தில் இந்துக்கள் மீது பதிவு செய்யப்பட்ட கலவர வழக்குகளை திரும்பப் பெறுமாறு வழியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “இவர்கள் கொலை கற்பழிப்பு அல்லது அது போன்று பெரிய குற்றங்கள் எதனையும் செய்திடவில்லை. இதற்கு முந்தைய அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு வசதி படைத்தோர்களை குற்றமற்றவர்கள் என்று விடுவித்துள்ளது. இவர்கள் இந்துக்களாக இருப்பது எனது குற்றமில்லை. அவர்களுக்காக நான் என்றென்றும் போராடுவேன். மேலும் யோகிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கலவர வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற தான் கோரிக்கை வைக்க வில்லை என்றும் தன் மீதான வழக்கில் தான் பிப்ரவரி 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கலவர வழக்கை திரும்பப் பெரும் உபி அரசின் பரிந்துரைக்கு உபி ஆளுநர் ராம் நாயக்கும் தனது ஒப்புதலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.