முதல் இராணுவ நடவடிக்கையில் 30 பொதுமக்களை கொலை செய்த ட்ரம்ப்

0

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று நடைபெற்ற முதல் இராணுவ நடவடிக்கையில் 10 பெண்கள் குழந்தைகள் உட்பட 30  பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டின் யகலா மாவட்டத்தில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அல் கொய்தா இயக்க ஆதரவாளரும் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் கொலை செய்யப்பட்ட அன்வர் அல் அவ்லாக்கியின் மகளான நோரா அல் அவ்லாக்கி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அன்வர் அல் அவ்லாக்கியின் தந்தை நாசர் அல் அவ்லாக்கி, “ஏன் குழந்தைகளை கொள்கிறார்கள்? இது புதிய அமெரிக்க அரசாங்கம். இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம், பெரும் குற்றம்” என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலில் நோராவின் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது. இந்த காயத்தினால் அவர் இரண்டு மணி நேரம் துன்புற்றார் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் காயமடைந்ததாக பெண்டகன் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால் இந்த தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் இரண்டு ஆளில்லா விமான தாக்குதல் மூலம் 14 அல் கொய்தா போராளிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஒரு அமெரிக்க கமாண்டோ கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் அப்துல் ரவூஃப் என்பவரது வீட்டில் குண்டெறிந்து பின்னர் ஹெலிகாப்டர்களில் இருந்து வீரர்கள் இறங்கி இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் அவ்வீட்டில் இருந்த அனைவரையும் கொன்றதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் மீது சிலர் துப்பாக்கியால் தாக்கியதாகவும் இதனை தொடர்ந்து பல வீடுகளில் ஹெலிகாப்டர் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாகவும் இதில் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்தது தனக்கு வருத்தமளிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பில் இருந்த ஒபாமா தலைமையிலான அரசும் ஏமனில் பல பொதுமக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.