முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி மனைவி நடத்தும் மதராஸா குடிநீரில் விஷம் கலந்த கயவர்கள்

0

முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி அலிகாரில் மதரஸா ஒன்றில் தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். சுமார் 4000 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த மதரஸாவின் குடிநீரில் அடையாளம் தெரியாத இருவர் எலிமருந்தை கலந்துள்ளனர். இதனையடுத்து அடையாளம் தெரியாத அந்த இரண்டு நபர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 328 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Al Noor Charitable Society கடந்த 18 வருடங்களாக  நடத்தும் இந்த மதரஸாவிற்கு தற்போது சல்மா அன்சாரி தலைமை வகிக்கின்றார். இந்த சம்பவத்தை அடுத்து மதரஸா கட்டிடம் முழுவதும் CCTV கண்காணிப்பு கேமெராக்கள் பொறுத்த உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த மதரஸா வார்டன், “மதராஸா விடுதியில் தங்கியிருந்த எங்கள் மாணவர்களில் ஒருவரான முஹம்மத் அஃப்ஸல் குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் பருக வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளார். அப்போது குடிநீர் தொட்டியில் இரண்டு நபர்கள் ஏதோ சில மருந்துகளை கலப்பதை அவர் கண்டுள்ளார். அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று அஃப்ஸல் அவர்களிடம் கேட்க அதில் ஒருவன் தான் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை காட்டி அவரை அமைதியாக இருக்கும்படி மிரட்டியுள்ளான். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதும் அவர்கள் விட்டுச் சென்ற காகிதத்தை எடுத்துப் பார்த்த அஃப்ஸலுக்கு அவர்கள் தண்ணீர் தொட்டியில் கலந்தது எலிமருந்து என்று தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் வேறு தொட்டியில் இருந்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.” என்று வார்டன் ஜூனைத் சித்திக்கி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அலிகார் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் பாண்டே, “அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. விஷம் கலந்தவர்களை கண்ட மாணவர்கள் உடனடியாக மதரஸா வார்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விஷம் கலக்கப்பட்ட தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து தடவியல் சோதனை மையத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்த மாதிரிகள் வரும் சனிக்கிழமை சோதனையிடப்படும்.” என்று கூறியுள்ளார்.

பொதுவாக எலி மருந்து மனிதர்களை கொல்லும் அளவிற்கு சக்திவாய்ந்ததல்ல என்றும் ஆனால் கலப்படம் செய்யப்பட்ட மருந்தின் தன்மையை பொறுத்து இது மாறுபடும் என்று அலிகார் மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எதிஷாம் அஹமத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது பதிவிக்காலம் முடிவடைந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, தனது பதவிக் காலத்தின் இறுதியில் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பாஜகவின் ஆட்சியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக உணர்கிறார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.